செய்திகள்

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் காவிரி நீர் வீணாக கடலில் கலப்பது வேதனையளிக்கிறது - ஸ்டாலின்

Published On 2018-08-19 14:33 GMT   |   Update On 2018-08-19 14:33 GMT
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் காவிரி நீர் வேளாண்மைக்கும், குடிநீர் தேவைகளுக்கும் பயன்படாமல் வீணாக கடலில் கலப்பது மிகுந்த வேதனையளிக்கிறது என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #cauverywater #MKStalin
சென்னை:

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மேட்டூர் அணை இருமுறை முழு கொள்ளளவை எட்டியும், அங்கிருந்து திறந்து விடப்படும் காவிரி நீர், வேளாண்மைக்கும், குடிநீர் தேவைகளுக்கும் பயன்படாமல் நேராகக் கடலில் கலப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

நீர் மேலாண்மைக்காக சுமார் 4 ஆயிரத்து 735 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்தும், இன்றைக்கு நூற்றுக்கணக்கான டி.எம்.சி. காவிரி உபரி நீர் கடலில் கலக்கிறது என்றால், செலவழித்த பணம் எங்கே போனது?

பல கோடி ரூபாய் செலவழித்தும், ஏரி, குளங்கள், அணைகளை முறையாக சீரமைக்காமல், விவசாயத்திற்கு தேவைப்படும் உபரி நீர் விரயமாவதற்காக, அதிமுக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இனியாவது, தொலைநோக்கு 'நீர் மேலாண்மை' திட்டங்களுக்கு செயல்வடிவம் கொடுத்தும், திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நதிநீர் இணைப்புத் திட்டங்களை நிறைவேற்றியும், கடலில் கலக்கும் காவிரி நீரை தடுத்து வேளாண்மைக்கும், குடிநீர் தேவைகளுக்கும் திருப்பி விடுமாறு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். #cauverywater #MKStalin
Tags:    

Similar News