செய்திகள்

கருணாநிதி உடல் நிலை- காவேரி மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்தார் சந்திரபாபு நாயுடு

Published On 2018-08-04 07:03 GMT   |   Update On 2018-08-04 07:03 GMT
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று சென்னை வந்து திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்தார். #KarunanidhiHealth #AndhraCM
சென்னை:

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையில் எதிர்பார்த்த அளவுக்கு முன்னேற்றம் இல்லாமல் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுவதால் டாக்டர்கள் குழுவினர் 24 மணி நேரமும் கண்காணித்து சிகிச்சை அளிக்கின்றனர்.

அவ்வப்போது சளித்தொல்லை ஏற்படுவதால் அதற்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கருணாநிதியின் உடல் நிலை குறித்து அறிந்து கொள்வதற்காக தி.மு.க.வினர் தினமும் மருத்துவமனைக்கு வந்து சென்ற வண்ணம் உள்ளனர்.

அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமாத்துறையை சார்ந்தவர்கள் என பல்வேறு தரப்பினரும் கருணாநிதியின் உடல் நலம் குறித்து நேரில் விசாரித்து செல்கின்றனர். செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி, மு.க.தமிழரசு, கனிமொழி எம்.பி. உள்பட கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் நலம் விசாரிக்க வருபவர்களுக்கு சிகிச்சை முறைகள் குறித்து விளக்கம் அளித்து வருகின்றனர்.


இந்நிலையில், ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு இன்று காவேரி மருத்துமனைக்கு வந்து கருணாநிதியின் உடல் நிலை மற்றும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார்.  

முன்னதாக மத்திய மந்திரி சுரேஷ் பிரபு, பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ஷாநவாஸ் உசேன், தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்தனர். கேரளாவை சேர்ந்த சுனில்தாஸ் என்பவர் சாய் பாபா கோவில் பிரசாதத்தை வழங்கினார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை மதியம் காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிக்க உள்ளார். இதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. #KarunanidhiHealth #AndhraCM
Tags:    

Similar News