search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karunanidhi"

    • ஒருவர் ஒரு அலைபேசி எண்ணின் மூலம் அதிகபட்சமாக 5 அனுமதிச் சீட்டுகள் வரை பெற்றுக்கொள்ள இயலும்.
    • பொதுமக்கள் தங்களுக்கு வசதியான காட்சி நேரத்தை தேர்வுசெய்து முன்கூட்டியே அனுமதிச் சீட்டினைப் பெற்றுக் கொள்ளலாம்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடம் மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் மிகச் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டு, 26-2-2024 அன்று முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.

    பல்லாயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் வந்து கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதனுடன், கருணாநிதியின் இலக்கிய, அரசியல் வாழ்க்கை வரலாற்றினைப் பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் வகையில் அந்நினைவிட வளாகத்தில் நிலவறையில் நவீன தொழில்நுட்பங்களுடன் பல்வேறு அரங்கங்களுடன் "கலைஞர் உலகம்" என்னும் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.


    இந்த கலைஞர் உலகம் அருங்காட்சியகத்தில், கருணாநிதியின் நிழலோவியங்கள், உரிமை வீரர் கலைஞர், கலைஞருடன் ஒரு புகைப்படம், புதிரை வெல் கலைஞர் வழிசெல், அரசியல் கலை அறிஞர் கலைஞர், கலைஞருடன் ஒரு நேர்காணல், நவீனத் தமிழ்நாட்டின் சிற்பி, பண்பாட்டுப் பேழை, கலைஞரின் வரலாற்றுச் சுவடுகள், கலைஞரின் மகளிர் மேம்பாட்டுத் திட்டங்கள், சரித்திர நாயகனின் சாதனைப் பயணம் போன்ற அரங்கங்கள் இடம்பெற்றுள்ளன.

    இந்தக் கலைஞர் உலக அருங்காட்சியகத்தினைப் பொதுமக்கள் பார்வையிடுவதற்கு 6-3-2024 புதன்கிழமை முதல் அனுமதிக்கப்படும். இதனை பார்வையிடுவதற்குத் தமிழ்நாடு அரசின் https://www.kalaignarulagam.org/ என்ற இணைய முகவரி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணைய முகவரியில் பொதுமக்கள் பதிவு செய்து அனுமதிச் சீட்டினைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

    கலைஞர் உலகத்திற்கான அனுமதிச் சீட்டு பெறுவதற்குக் கட்டணம் ஏதுமில்லை. முற்றிலும் இலவசமாக கலைஞர் உலகம் அருங்காட்சியகத்தை பொதுமக்கள் கண்டு களிக்கலாம்.

    ஒருவர் ஒரு அலைபேசி எண்ணின் மூலம் அதிகபட்சமாக 5 அனுமதிச் சீட்டுகள் வரை பெற்றுக்கொள்ள இயலும். இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட அனுமதிச் சீட்டுடன் வருபவர்களுக்கு நிலவறையிலுள்ள உலகத்திற்கு அனுமதி வழங்கப்படும்.

    மேலும், ஒவ்வொரு நாளும் காலை 9.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 6 காட்சிகளாக நடைபெறும். பொதுமக்கள் தங்களுக்கு வசதியான காட்சி நேரத்தை தேர்வுசெய்து முன்கூட்டியே அனுமதிச் சீட்டினைப் பெற்றுக் கொள்ளலாம். அக்காட்சியினைக் காண வரும் பொதுமக்கள், காட்சி நேரத்திற்கு 30 நிமிடத்திற்கு முன்பாகவே வருகைபுரிய வேண்டும். கலைஞர் உலகம் அருங்காட்சியகத்தை பார்வையிட ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம் ஆகும்.

    முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதிச் சீட்டு ஏதும் தேவையில்லை.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழ்நாட்டைப் பற்றி மக்கள் புண்படும் விதமாக தமிழக கவர்னர் தொடர்ந்து பேசி வருகிறார்.
    • தமிழ் தொன்மையான மொழி என்பது இவர்கள் பேசித்தான் தெரிய வேண்டும் என்ற நிலை தமிழ்நாட்டு மக்களுக்கு இல்லை.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மத்திய மாவட்ட, மாநகர தி.மு.க. சார்பில் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா, தமிழக அரசின் 3 ஆண்டுகால சாதனை, பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் தஞ்சாவூர் ஆப்ரஹாம் பண்டிதர் சாலையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாநில துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. பேசியதாவது :-

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி செய்த சாதனைகள் ஏராளம். அவைகள் அனைத்தும் காலம் கடந்தும் பேசும். அதுபோல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏராளமான சாதனைகளை செய்து வருகிறார். மகளிருக்கு இலவச பஸ் பயணம், உரிமை தொகை , விவசாயத்திற்கு தனி பட்ஜெட் என மக்கள், விவசாயிகளுக்கு பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி சாதனை புரிந்து வருகிறார்.

    தமிழ்நாட்டைப் பற்றி மக்கள் புண்படும் விதமாக தமிழக கவர்னர் தொடர்ந்து பேசி வருகிறார். பிரதமர் பெயருக்கு அவ்வப்போது ஓரிரு திருக்குறளைப் பேசுகிறார். இதை வைத்து தமிழ் தொன்மையான மொழி என பிரதமரே பேசிவிட்டார் என விளம்பரம் செய்கின்றனர்.

    தமிழ் தொன்மையான மொழி என்பது இவர்கள் பேசித்தான் தெரிய வேண்டும் என்ற நிலை தமிழ்நாட்டு மக்களுக்கு இல்லை. நம் மக்களுக்கு முன்பே தெரிந்த விஷயம் அது. ஆனால், தமிழுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் தொகையை விட யாருக்கும் தெரியாத சம்ஸ்கிருத மொழிக்கு 22 மடங்கு கூடுதலாக நிதி ஒதுக்கப்படுகிறது.

    தமிழ்நாட்டுக்கு எந்த வகையிலும் நிதி கொடுக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டில் மத்திய அரசு உள்ளது. தமிழ்நாட்டிடமிருந்து ஜிஎஸ்டி உள்பட அனைத்து வரிகளையும் வாங்கிக் கொள்ளும் மத்திய அரசு, திரும்பக் கொடுப்பதற்கு மனசு இல்லை. நல்லாட்சி செய்து வரும் தமிழ்நாடு தண்டிக்கப்படுகிறது. ஆனால், நல்ல ஆட்சி செய்யாத உத்தர பிரதேசத்துக்கு 5 மடங்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு இத்தனை முறை வந்தாலும், புயல் மழையால் பாதிக்கப்பட்ட சென்னை, தென் மாவட்ட மக்களுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் தமிழக முதல்வர்தான் உதவிக்கரம் நீட்டினார். தமிழ்நாட்டு மக்களைப் பற்றி பிரதமர் கவலைப்படுவதில்லை.

    தமிழ்நாட்டுக்கு பா.ஜ.க. அரசு எதுவும் செய்யவில்லை. ஆனால், செய்ததாகக் கணக்கு காட்டுவதற்காக ரூ. 7 ஆயிரம் கோடிக்கு பிரதமர் அடிக்கல் நாட்டிச் சென்றார்.

    இந்த மண்ணின் பண்பாடு, கலாசாரம், மொழி உள்பட அனைத்தையும் காத்து நிற்கும் அரணாக தி.மு.க உள்ளது. திராவிட மண்ணில் மத அரசியலுக்கும், தமிழ் துரோகிகளுக்கும் இடமில்லை. நாடாளுமன்ற தேர்தல் வெறும் அரசியல் வெற்றிக்கானது மட்டுமல்ல; நம்முடைய எதிர்காலம், இந்த நாட்டின் அமைதியைப் பொருத்து இருப்பதால், அதைக் காக்கும் கடமை நமக்கு இருக்கிறது என மனதில் கொண்டு வாக்களிக்க வேண்டும் .

    இவ்வாறு அவர் பேசினார்.

    • 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நினைவிடம்.
    • ‘கலைஞர் உலகம்’ என்ற பெயரில் அருங்காட்சியகம் அமைப்பு.

    சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்தையும், பேரறிஞர் அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நினைவிடத்தில் 'கலைஞர் உலகம்' என்ற பெயரில் அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    கலைஞர் என்றாலே போராட்டம்தான்.

    அவரது இறுதிப் போராட்டத்தின் அடையாளம்தான் இந்த நினைவிடம்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள்.
    • அண்ணா உருவாக்கிய தி.மு.க. எனும் அரசியல் பேரியக்கம், மக்கள் பக்கம் நின்றது.

    சென்னை:

    தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    எத்தனையோ நிகழ்வுகளின்போது உடன்பிறப்புகளுக்குக் கடிதம் எழுதியவர் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர். உங்களைப் போன்ற உணர்வுடன் அந்தக் கடிதங்களைப் படித்தவன்தான் உங்களில் ஒருவனான நான். இம்மண்ணை விட்டுச் சென்றாலும், நம் நெஞ்சில் நிறைந்துவிட்ட கலைஞர் தன் மரணத்திலும் போராளியாக-சுயமரியாதை வீரராகச் சட்டப்போராட்டம் நடத்தி வெற்றியுடன் பெற்ற சென்னை மெரினா கடற்கரையில் அவருக்குரிய இடத்தில், அவரது நினைவிடம் கலைத்திறனுடன் உருவாகியிருக்கிறது. பிப்ரவரி 26-ஆம் தேதி நடைபெறவுள்ள அதன் திறப்புவிழாவுக்கு உடன் பிறப்புகளாம் உங்களை, உங்களில் ஒருவனான நான் தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும், கழகத்தின் தலைவராகவும் வரவேற்கக் கடமைப்பட்டுள்ளேன்.

    யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள். காரணம், யானைதான் காட்டின் வளத்தைப் பெருக்கும். இயற்கையின் சமச்சீரான நிலையைத் தக்கவைக்கும். பல்லுயிர்ச் சூழலைப் பாதுகாக்கும். யானை வாழ்ந்ததற்கான அடையாளம் அது நடந்து சென்ற பாதை மட்டுமல்ல, அது உலா வந்த காட்டின் பசுமையும் செழுமையும்தான். தமிழ்நாட்டின் தாய் யானையாகத் திகழ்ந்தவர் தலைவர் கலைஞர். 95 ஆண்டுகாலம் வாழ்ந்தவர் 80 ஆண்டுகளுக்கு மேல் பொதுவாழ்க்கைக்காகத் தன்னை அர்ப்பணித்தார். இனம் காத்திடப் போராடினார். மொழிகாக்கச் சிறை சென்றார். மக்களின் மனங்களை வென்று 5 முறை முதலமைச்சர் ஆனார். இந்திய அரசியலின் தவிர்க்க முடியாத தலைவராக உயர்ந்தார். நவீனத் தமிழ்நாட்டைத் தன் சிந்தனை உளியால் செம்மையுறச் செதுக்கினார். எதிர்காலத் தலைமுறைக்கும் வாழ்வளிக்கும் திட்டங்களை வகுத்தளித்த பிறகே நிரந்தரமாக ஓய்வு கொண்டார்.

    அண்ணா உருவாக்கிய தி.மு.க. எனும் அரசியல் பேரியக்கம், மக்கள் பக்கம் நின்றது. அவர்களின் மனங்களில் குடியேறியது. மாநிலத்தின் ஆட்சியைப் பிடித்தது. அந்த அண்ணா நம்மை விட்டு மறைந்த நிலையில், தமிழ்நாட்டின் முதலமைச்சரானார் கலைஞர். எதையும் தாங்கும் இதயம் வேண்டும் தம்பி என்றவர் அண்ணா. அந்த அண்ணாவின் இதயத்தைக் இரவலாகக் கேட்டவர் கலைஞர்.

    சொன்னதைச் செய்வோம். செய்வதைச் சொல்வோம் என்பதுதான் தலைவரின் அரசியல் இலக்கணம். சொன்னது போலவே, அவர் நிரந்தர ஓய்வெடுத்துக் கொண்ட போது, தன் அண்ணனின் அருகிலேயே உறக்கம் கொண்டார். இலக்கியமாய் நிலைத்துவிட்ட, 'இரவல் கேட்ட இதயத்தை'யும் சொன்னது போலவே, அண்ணாவின் கால்மலரில் வைத்து வரலாற்றைப் படைத்தார்.

    வங்கக் கடலோரம் தமிழ் அலைகள் தாலாட்ட 1969-ல் பேரறிஞர் அண்ணா நிரந்தர ஓய்வெடுக்கும்படி இடம் அமைத்துக் கொடுத்தவரே தலைவர் கலைஞர்தான். ஓங்கி உயர்ந்த தூணும், அணையா விளக்கும் கொண்ட அண்ணா சதுக்கத்தை அமைத்தவரும் அவர்தான். தன்னை அரசியல் களத்தில் ஆளாக்கிய அண்ணாவுக்கு மட்டுமல்ல, அரசியல் களங்களில் மற்போர் போல சொற்போர் நடத்தினாலும் தமிழருக்கேயுரிய பண்பாட்டுடனும் நாகரிகத்துடனும் மாற்று இயக்கத்தின் தலைவர்கள் மறைந்த போதும் அவர்களுக்கு நினைவிடம் அமைத்த அரசியல் பண்பாளர் கலைஞர்.

    ராஜாஜி, காமராஜர் ஆகியோரின் நினைவிடங்களை அமைத்தவர் கலைஞர்தான். எமர்ஜென்சி எனும் நெருக்கடிநிலைக் காலத்தில், 1975 அக்டோபர் 2-ஆம் நாள் காந்தி பிறந்த நாளன்று காமராஜர் மரணமெய்திய போது, முதலமைச்சராக இருந்த கலைஞரே மழையையும் சகதியையும் பொருட்படுத்தாமல், கிண்டியில் உள்ள இடத்திற்கு இரவு நேரத்தில் நேரில் சென்று, கார் விளக்கொளியில் ஆய்வு செய்து, அந்த இடத்தைத் தூய்மைப்படுத்தும் பணியை, தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு மேற்பார்வையிட்டு, அரசு மரியாதையுடன் காமராசரின் உடலை எரியூட்டச் செய்து, அந்த இடத்தில் காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ் சின்னமான ராட்டைச் சின்னத்துடன் கூடிய நினைவிடத்தை அமைத்தவர் கலைஞர்.

    ராமாயணத்தைச் சக்கரவர்த்தி திருமகன் என்ற பெயரில் எழுதியவர் ராஜாஜி என்பதனால் அவரது நினைவிடத்தை ராமரின் பட்டாபிஷேக மகுடம் போல அமைத்தவரும் கலைஞர்தான். மாற்றுக் கருத்துடையவர்களேனும் அவர்தம் மனம் எதை விரும்பியதோ அதனையே நினைவிடத்தின் அடையாளமாக்கியவர் கலைஞர். மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில் முதன் முதலில் குடை போன்ற வடிவமைப்பை அமைத்தவரும் கலைஞரே. பலருக்கும் நிழல் தருபவராக எம்.ஜி.ஆர். இருந்தார் என்பதன் அடையாளம் அது.


    தேர்தல் களத்துப் பகையை நெஞ்சில் கொள்ளாமல், தன் காலத்துத் தலைவர்களுக்கு, உரிய மரியாதையுடன் நினைவிடம் அமைத்த கலைஞர், அவர் விரும்பிய படி கடற்கரையில் அண்ணாவின் அருகே ஓய்வெடுக்க அன்றைய ஆட்சியாளர்கள் அனுமதி தரவில்லை. தம்பிடி இடம் கூடத் தர மாட்டோம் எனக் காழ்ப்புணர்வைக் காட்டினார்கள். கழகத்தினர் மட்டுமல்ல, ஒட்டுமொத்தத் தமிழ்நாடே கலைஞருக்குக் கடற்கரையில் இடம் ஒதுக்க வேண்டும் எனக் கண்ணீர்க் கோரிக்கை வைத்தது. இரக்கம் சுரக்க வில்லை ஆட்சியாளர்களுக்கு! ரத்தம் கொதித்தது உடன்பிறப்புகளுக்கு! சட்டப் போராட்டத்தைத் தொடங்கினோம். தந்தைக்கு மகன் செய்யும் கடமையாக நினைக்காமல், தலைவருக்குத் தொண்டன் செய்ய வேண்டிய கைம்மாறாக இதனை முன்னெடுத்தேன். விடிய விடிய நடந்த விசாரணைக்குப் பின், நண்பகல் பொழுதில் நல்ல தீர்ப்பு வந்தது. கடற்கரையில் இடம் ஒதுக்கித் தீர்ப்பளித்தனர் நீதிபதிகள். தன் அண்ணனிடம் இரவலாகப் பெற்ற இதயத்தை ஒப்படைத்து, சொன்ன சொல் காத்த தம்பியானார் கலைஞர்.

    'ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்" என்று தலைவர் கலைஞரே எழுதித் தந்த தனக்கான கல்லறை வரிகளுடன் கடற்கரையில் அவர் ஓய்வு கொள்ளத் தொடங்கினார். அன்றாடம் ஆயிரமாயிரம் உடன்பிறப்புகள் அங்கே வந்து கண்ணீரைக் காணிக்கை யாக்குவது வாடிக்கை. 2021 தேர்தலில் கழகம் பெற்ற வெற்றியை உயிர்நிகர் கலைஞரின் ஓய்விடத்தில்தான் உங்களில் ஒருவனான நானும் காணிக்கையாக்கினேன். தலைவரின் ஓய்விடத்தில் தங்களின் திருமணத்தை நடத்தி, புதுவாழ்வைத் தொடங்கிய வெற்றிகரமான இணையர்கள் உண்டு. பிறந்த குழந்தையை கலைஞரின் ஓய்விடத்தில் கிடத்தி, குடும்பத்தின் மூதாதையரை வணங்குவது போன்ற வணக்கத்தைச் செலுத்தியவர்கள் உண்டு. மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர், விளிம்புநிலை மக்கள் எனத் தலைவர் கலைஞரின் ஆட்சித்திறனால் தங்கள் வாழ்வில் ஒளிபெற்றவர்களின் நன்றி செலுத்தும் இடமாக கலைஞரின் ஓய்விடம் அமைந்தது.

    தமிழுக்காகவும், தமிழ் நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழர்களின் உயர்வுக்காகவும் தன் வாழ்நாள் முழுவதும் ஓயாது உழைத்த கலைஞர் ஓய்வு கொள்ளும் இடத்தை ஒரு வரலாற்றுச் சின்னமாகக் கட்டியமைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் திராவிட மாடல் அரசு அதற்கான செயல் திட்டங்களை வகுத்தது. 6-வது முறையாக ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு தொடங்கிய இந்தப் பணி, கலைஞரின் 6-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வருவதற்கு முன்பாக நிறைவடைந்துள்ளது.

    எதையும் தாங்கும் இதயத்துடன் அண்ணா துயில் கொள்ளும் சதுக்கமும் புதுப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இரு பெரும் தலைவர்களால் நம் இனிய தமிழ்நாடு பெற்ற பயன்களை வாழும் தலைமுறையும், வருங்காலத் தலைமுறையும் அறிந்து கொள்ளும் வகையில் அறிவியல் தொழில்நுட்பத்துடன் இணைந்த வரலாற்றுச் சின்னமாக வடிவமைக்கப்பட்டு உள்ளன அண்ணா, கலைஞர் ஓய்வு கொள்ளும் இடங்கள். கலைஞரின் நினைவிடம் அருகே அமைக்கப்பட்டுள்ள நிலவறையில் பயணித்தால், கலைஞர் வாழ்ந்த காலத்தில் நாமும் பயணிப்பது போன்ற உணர்வு ஏற்படும். தலைவர் கலைஞருடனேயே பயணிப்பது போன்ற அனுபவம் கிடைக்கும். அவர் பெற்றுத் தந்த செம்மொழித் தகுதி, அவர் உருவாக்கிய கணினிப் புரட்சி, அவர் கட்டமைத்த நவீனத் தமிழ்நாடு, அவருடைய படைப்பாற்றல், அவரது நிர்வாகத்திறன், இந்தியத் தலைவர்களின் பாராட்டுதலைப் பெற்ற கலைஞரின் ஆளுமை உள்ளிட்ட அனைத்தும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

    தமிழினத்தின் உயர்வுக்காக அயராது உழைத்த கலைஞருக்காக இரவு-பகலாக உழைத்தும், தங்கத்தைப் போல இழைத்தும் கலைநயத்துடன் உருவாக்கப்பட்டு உள்ளது இந்த நினைவிடம்.

    என்றென்றும் நெஞ்சில் வாழ்ந்து, நம்மை இயக்கக்கூடிய தலைவரின் ஓய்விடம் வியக்க வைக்கும் வகையில் உருவாக்கப்பட்டு, பிப்ரவரி 26-ஆம் நாள் திங்கட்கிழமை மாலை 7 மணியளவில் திறந்து வைக்கப்படுகிறது. தமிழ்நாட்டிற்கு ஒளி தந்த ஞாயிறான நம் கலைஞரின் ஓய்விடம், திங்கள் மாலையில் திறந்து வைக்கப்படும் நிகழ்வில், அவரின் உயிரினும் மேலான உடன்பிறப்பு களாம் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என உங்களில் ஒருவனான நான் உரிமையுடனும் உள்ளன்புடனும் அழைக்கின்றேன்.

    "எழுந்து வா.. எழுந்து வா.." என்று கோபாலபுரம் இல்லத்தின் முன்பும், காவிரி மருத்துவமனை அருகே உள்ள சாலைகளிலும் நின்று முழக்கமிட்ட உடன்பிறப்புகள் நீங்கள்தானே..! உங்களின் குரலை இப்போது கடல் அலைகள் அன்றாடம் முழக்கமிடுகின்றன. அண்ணாவை எழுந்து வரச் சொன்னார் கலைஞர். அண்ணா வரவில்லை. கலைஞரை எழுந்து வரச் சொல்கின்றன அலைகள். அவரின் ஓய்வு நிறைவடையவில்லை. தன்னால் வர இயலாவிட்டாலும், தன் உடன்பிறப்புகள் நிச்சயம் வருவார்கள் என்பதைத் கலைஞர் அறிவார். தலைமுறைகள் கடந்த தலைவரான நம் கலைஞர், தமிழ் அலைகளின் தாலாட்டில், தன் அண்ணனின் தலை மாட்டில் ஓய்வெடுக்கிறார். அவரைக் காண வங்கக் கடலோரம் வருக உடன்பிறப்பே!

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த கடிதத்தில் கூறி உள்ளார்.

    • நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் எதையும் நாங்கள் அச்சிடவில்லை.
    • ஒரு விழாவாக இல்லாமல், நிகழ்ச்சியாகவே நடத்திட நாங்கள் விரும்பியிருக்கிறோம், முடிவெடுத்து இருக்கிறோம்.

    சென்னை:

    சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி செலவில் கருணாநிதி நினைவிடம் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டு உள்ளது.

    சட்டசபையில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின் கருணாநிதி நினைவிடம் திறப்பது தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    நின்ற தேர்தல்களில் எல்லாம் வென்ற தலைவர்; நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய தலைவர்; முத்தமிழறிஞர் தலைவர் கலைஞருடைய நினைவிடம் அமைக்கும் பணி முழுமையடைந்து இருக்கிறது. தலைவர் கலைஞரின் நினைவிடம் மட்டுமல்ல; தலைவர் கலைஞரை உருவாக்கிய, நம் தாய்த் தமிழ்நாட்டிற்கு "தமிழ்நாடு" என்று பெயர் சூட்டிய அறிஞர் அண்ணாவின் நினைவிடமும் புனரமைக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது.

    அப்படிப் புதுப்பிக்கப்பட்டிருக்கக்கூடிய பேரறிஞர் அண்ணாவின் நினைவிடமும், தலைவர் கலைஞரின் புதிய நினைவிடமும் வருகிற 26-ந் தேதி மாலை 7 மணிக்கு திறந்து வைக்கப்பட உள்ளன என்பதை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

    எதற்காக இதை இங்கே நான் குறிப்பிட்டுச் சொல்கிறேன் என்றால், அந்த நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் எதையும் நாங்கள் அச்சிடவில்லை. அதனை ஒரு விழாவாக இல்லாமல், நிகழ்ச்சியாகவே நடத்திட நாங்கள் விரும்பியிருக்கிறோம், முடிவெடுத்து இருக்கிறோம்.

    ஆகவே, அந்த நிகழ்ச்சியிலே இந்த அவையில் இருக்கக்கூடிய ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, கூட்டணிக்கட்சி, தோழமைக் கட்சி என எல்லாக் கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டுமென்று பேரவைத் தலைவர் மூலமாக நான் கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாட்டு மக்களுக்கும் தங்கள் மூலமாக அழைப்பு விடுத்து அமைகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி செலவில் இந்த நினைவிடம் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டு உள்ளது.
    • கருணாநிதி நினைவிடத்தின் முகப்பில் 3 வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த நினைவிடத்தின் கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    கருணாநிதி ஆற்றிய பணிகளை போற்றும் வகையில் அவரது சாதனைகள், சிந்தனைகளை அடுத்த தலைமுறை அறியும் வகையில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி செலவில் இந்த நினைவிடம் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டு உள்ளது.

    கலை, இலக்கியம், அரசியல் ஆகிய துறைகளில் சாதனை படைத்ததை நினைவு கூறும் விதமாக கருணாநிதி நினைவிடத்தின் முகப்பில் 3 வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பணிகள் தற்போது நிறைவடைந்து உள்ளன.

    இதையடுத்து கருணாநிதி நினைவிடத்தை பொது மக்களின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 26- ந் தேதி திறந்து வைக்கிறார்.

    • டி.ஆர்.பாலு எழுதிய நூல் வெளியீட்டு விழா ஒன்றிலும் அவரை கருணாநிதி வாழ்த்துவது போன்ற வீடியோ தயாரித்து வெளியிடப்பட்டது.
    • ஏ.ஐ. தொழில்நுட்பம் என்பது நல்ல வழிக்கே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே அதன் முக்கிய நோக்கமாக உள்ளது.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் இந்த தேர்தலில் செயற்கை நுண்ணறிவு என்று அழைக்கப்படும் ஏ.ஐ. வீடியோக்களும் முக்கிய பங்காற்ற தொடங்கி உள்ளன.

    இந்த தேர்தல் களத்தில் இதனை ஆளும் கட்சியான தி.மு.க. முதல் முறையாக கையில் எடுத்து செயல்படுத்தி உள்ளது. சேலத்தில் நடைபெற்ற தி.மு.க. இளைஞரணி மாநாட்டையொட்டி மறைந்த தி.மு.க. தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி தி.மு.க. இளைஞர் அணி மாநாட்டை வாழ்த்துவது போன்ற ஏ.ஐ. வீடியோ வெளியிடப்பட்டது.

    தி.மு.க. மாநாட்டு பந்தலிலும் இது ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதன் மூலம் கருணாநிதியே மாநாட்டுக்கு நேரில் வந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. இதே போன்று முன்னாள் மத்திய மந்திரியும் தற்போதைய எம்.பி.யுமான டி.ஆர்.பாலு எழுதிய நூல் வெளியீட்டு விழா ஒன்றிலும் அவரை கருணாநிதி வாழ்த்துவது போன்ற வீடியோ தயாரித்து வெளியிடப்பட்டது.

    இப்படி தி.மு.க. சார்பில் இரண்டு வீடியோக்கள் தயாரிக்கப்பட்டு வெளியாகி அது தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்றுள்ளது.

    இதேபோன்று மறைந்த தங்கள் தலைவர்கள் ஏ.ஐ. வீடியோ மூலம் பேசுவதற்கான ஏற்பாடுகளையும் மற்ற கட்சியினரும் மேற்கொள்ள தொடங்கியுள்ளனர். அ.தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீடியோவை தயாரித்து வெளியிட அ.தி.மு.க.வினர் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    இதே போன்று மற்ற அரசியல் கட்சியினரும் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் கூடிய வீடியோக்களை தயாரிக்க முடிவு செய்து உள்ளனர். இந்த வீடியோக்கள் மூலம் நன்மைகளும் உள்ளன. தீமைகளும் உள்ளன என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.

    குறிப்பாக இரண்டு பிரிவாக பிரிந்து கிடக்கும் கட்சியினர் மறைந்த தங்களது தலைவர்களை பயன்படுத்தி மாற்று அணியினரை விமர்சிக்க முடியும் என்ப தால் அது அரசியல் களத்தில் மோதல் போக்கை உரு வாக்க வழிவகுக்கும் என்கிறார்கள்.



    உதாரணத்துக்கு தமிழகத்தில் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்.

    அவர் எடப்பாடி பழனிசாமியை விமர்சிப்பது போன்று ஏ.ஐ. வீடியோக்களை வெளியிட்டால் அது இரண்டு பிரிவினருக்கும் இடையே மோதலை ஏற்படுத்தலாம் என்றும் அரசியல் நோக்கர்கள் கூறி உள்ளனர்.

    தேசிய அளவில் பல்வேறு மாநிலங்களில் கட்சிகள் பிரிந்து கிடக்கின்றன. இந்த அணிகளை சேர்ந்தவர்களும் மறைந்த தங்களது தலை வர்களை ஏ.ஐ. வீடியோக்கள் மூலமாக உருவாக்கி விமர்ச னம் செய்யவும் வழி வகுக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

    ஏ.ஐ. தொழில்நுட்பம் என்பது நல்ல வழிக்கே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே அதன் முக்கிய நோக்கமாக உள்ளது. அதே நேரத்தில் அதனை தவறாக பயன்படுத்தவும் வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே கணிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    • சம்பந்தமே இல்லாத விஷயங்களை எல்லாம் அண்ணன் திருமாவளவன் பேசிக்கொண்டிருந்தார்.
    • தமிழக அமைச்சரவையில் 35 அமைச்சர்கள் அதில் வெறும் 3 பேர் தான் பட்டியல் சமுதாயத்தை சேர்ந்தவர்கள்.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:-

    திருச்சியில் விடுதலை சிறுத்தை கட்சி நடத்திய மாநாட்டில், வழக்கம் போல இஸ்ரேல், பாலஸ்தீனம், மணிப்பூர், இலங்கை என்று பிற நாடு, பிற மாநில பிரச்சினைகளையெல்லாம் பேசிவிட்டு, ஆளுநர் பதவியை ஒழிப்போம், நீட் தேர்வை ஒழிப்போம், ஜி.எஸ்.டி. வரியை எதிர்ப்போம் என்று தங்களுக்குச் சம்பந்தமே இல்லாத விஷயங்களை எல்லாம் அண்ணன் திருமாவளவன் பேசிக்கொண்டிருந்தார்.

    தமிழக மக்களுக்காகப் பேசாமல், இவர்கள் நிறைவேற்றிய தீர்மானங்களால் என்ன பயன்? வேங்கைவயல் சம்பவம் நடந்து 14 மாதங்கள் ஆகியும், இன்று வரை குற்றவாளிகளை கண்டு பிடிக்கவில்லை. தமிழகத்தில் 37 மாவட்டங்களில் சாதிய ரீதியான வன்கொடுமைகள் பரவலாக உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேடையில் முதலமைச்சர் ஸ்டாலினை உட்கார வைத்துவிட்டு, அவரிடம் கேட்க வேண்டியவற்றைக் கேட்காமல் அரசியல் நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார் திருமாவளவன்.

    ஒரே நாடு ஒரே தேர்தல் வேண்டும் என்று பா.ஜ.க 25 ஆண்டுகளாக சொல்லி வருகிறது. இந்த திட்டத்தை கைவிடவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார் திருமாவளவன். பா.ஜ.க.வுக்கு முன்பே ஒரே நாடு ஒரே தேர்தலை ஆதரித்தவர் மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி.

    ஆண்டுதோறும் மக்கள் மாறி மாறி தேர்தல்களைச் சந்திக்கும் நிலையால் ஆட்சி இயந்திரம் சரிவரச் செயல் படாதிருக்கலாம். எடுத்த கொள்கை முடிவுகளை ஆட்சி இயந்திரத்தின் வாயிலாக நிறைவேற்ற முடியாத தேக்க நிலை ஏற்படவும், பொது மக்களுக்கு சங்கடங்களை உருவாக்கவும் வழிவகுக்கும் என்று கருதுகிறேன் என்று நெஞ்சுக்கு நீதி-இரண்டாம் பாகம், பக்கம் 273-ல் கலைஞர் கருணாநிதி எழுதியுள்ளார். அவர் எழுதியதை அவரது மகனே படித்ததில்லை எனத் தெரிகிறது.

    மத்தியில் உள்ள 76 அமைச்சர்களின் பட்டியலில் மக்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்று கூறியிருக்கிறார்கள். தமிழக அமைச்சரவையில் 35 அமைச்சர்கள் அதில் வெறும் 3 பேர் தான் பட்டியல் சமுதாயத்தை சேர்ந்தவர்கள்.

    மத்திய அரசின் 76 அமைச்சர்களில், 16 சதவீதம் அமைச்சர்கள், அதாவது 12 பேர் பட்டியல் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். தமிழக அமைச்சரவையில் 10 சதவீதம் கூட இல்லை.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • கருணாநிதி நூற்றாண்டு விழா, திருச்சி தெற்கு மாவட்டத்தில் வருடம் முழுவதும் கொண்டாப்பட்டு வருகின்றது.
    • சட்டமன்ற தொகுதிக்கு ஒரு சிலை என்ற அடிப்படையில் திருச்சி டி.வி.எஸ். டோல்கேட்டில் 8 அடி உயரத்தில் இந்த சிலை அமைக்கப்பட்டு உள்ளது.

    திருச்சி:

    கருணாநிதி நூற்றாண்டு விழா, திருச்சி தெற்கு மாவட்டத்தில் வருடம் முழுவதும் கொண்டாப்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் இதுவரை 75 நிகழ்ச்சிகள் முடிக்கப்பட்டு தற்போது 76-வது நிகழ்ச்சியாக, கருணாநிதி சிலை திறப்பு விழா நடைபெற்று உள்ளது.

    சட்டமன்ற தொகுதிக்கு ஒரு சிலை என்ற அடிப்படையில் திருச்சி டி.வி.எஸ். டோல்கேட்டில் 8 அடி உயரத்தில் இந்த சிலை அமைக்கப்பட்டு உள்ளது.

    சிலையினை காணொலி காட்சி மூலமாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

    தி.மு.க. முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு, தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.எல்.ஏ.க்கள் இனிகோ இருதயராஜ், அப்துல் சமது, மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர்கள் மேயர் அன்பழகன், மதிவாணன் முன்னாள் எம்.எல்.ஏ. கே.என்.சேகரன், துணை மேயர் அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அதேபோல் ஸ்டாலினும் நான் வாரிசு அரசியல் செய்யமாட்டேன் என்று கூறினார்.
    • 2022-ம் ஆண்டு அமைச்சர் பட்டியலில் இடம் பிடித்து அமைச்சர் வரிசையில் 10-வது இடம் உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    மதுரை:

    முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்த நாள் பொதுக்கூட்டம், மதுரை மாநகர் மாவட்டம் மதுரை மேற்கு தொகுதி கழத்தின் சார்பில், பரவையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், அமைப்புச் செயலாளருமான செல்லூர் ராஜூ கலந்து கொண்டு பேசியதாவது:-

    எம்.ஜி.ஆர். பாட்டாளி மக்களுக்காக, உழைக்கும் மக்களுக்காக கட்சியை தொடங்கினார். எடப்பாடி யார் இன்றைக்கு கட்சியை சிறப்பாக நடத்தி வருகிறார். அதிக உறுப்பினர்கள் கொண்ட கட்சிகளில் உலக அளவில் 7-வது இடத்திலும், இந்திய அளவில் 3-வது இடத்திலும், தமிழகத்தில் முதன்மையாக கழகத்தை உருவாக்கியுள்ளார்.

    தி.மு.க. ஒன்றும் சங்கர மடம் அல்ல என கருணாநிதி கூறினார். ஆனால் ஸ்டாலினை துணை முதலமைச்சர் மற்றும் செயல் தலைவராக நியமித்தார். அதேபோல் ஸ்டாலினும் நான் வாரிசு அரசியல் செய்யமாட்டேன் என்று கூறினார்.

    ஸ்டாலின் வளர்ச்சி அடைய 50 ஆண்டுகள் ஆனது. ஆனால் அவரது மகன் உதயநிதி 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சியை எட்டியுள்ளார். 2019 ஆண்டில் மாநில இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டது, 2021-ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினரானார். 2022-ம் ஆண்டு அமைச்சர் பட்டியலில் இடம் பிடித்து அமைச்சர் வரிசையில் 10-வது இடம் உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.விற்கு 3 சதவீதம் தான் வித்தியாசம். தற்போது தி.மு.க.விற்கு அரசு ஊழியர்கள் எதிர்ப்பு, சிறு பான்மை மக்களிடத்தில் அ.தி.மு.க. வரவேற்பு ஆகியவற்றால் பாராளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றியை அ.தி.மு.க. பெறும். பா.ஜ.க. கனவு பகல் கனவாக தான் போகும்.

    புலியைப் பார்த்து பூனை சூடு போட்டு கொண்ட கதையாக, கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஸ்டாலின் திரைத் துறை மூலம் கொண்டாடினர். அதில் ரஜினி, கமல் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் பங்கேற்றபோதும் வெறும் ஆயிரம் பேர் தான் அதில் பங்கேற்றனர். இதில் பேசிய உச்சநடிகர் எம்.ஜி.ஆர். வளர்ச்சிக்கு கருணாநிதியின் எழுத்து ஆற்றல் உதவியதாக என்று கூறுகிறார்.

    1971-ம் ஆண்டு ஒரு விழாவில் முரசொலி மாறன் பேசும்போது நாங்கள் கடன் வாங்கி இருந்தோம், வட்டி கட்ட முடியவில்லை அப்போது எங்களை காப்பாற்ற எங்கள் தங்கம் படத்தில் புரட்சித் தலைவரும், அம்மாவும் இலவசமாக நடித்துக் கொடுத்தனர். மீண்டும் எங்களுக்கு வாழ்வு கொடுத்தவர் 8-வது வள்ளல் எம்.ஜி.ஆர். என்று கூறினார்.

    அதனை தொடர்ந்து கருணாநிதி பேசும்பொழுது அவர் 8-வது வள்ளல் மட்டுமல்ல, திராவிட கர்ணன் என்று பாராட்டி எனக்கு வாழ்வு தந்தவர் புரட்சி தலைவர் என பேசினார். அப்போது முரசொலி கூட வந்தது என்பதை அங்கு பேசிய நடிகர் புரிந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • புரட்சித்தலைவர் தன் நடிப்பாலும் உழைப்பாலும் தன் வள்ளல் குணங்களாலும் மட்டுமே மக்கள் மனங்களை வென்று நிற்கிறார்.
    • ஆயிரமாண்டு கடந்தாலும் அவர்தான் ஆயிரத்தில் ஒருவர். அதை யாராலும் மாற்றவும் முடியாது!

    அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

    புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் கருணாநிதியால்தான் சினிமாவில் தொட முடியாத உயரம் சென்றதை போல முன்னணி நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் நேற்றுமுன்திளம் நடந்த விழாவில் உண்மைக்கு மாறாக பேசியுள்ளனர்.

    இனிவரும் காலங்களில் வரலாற்றை மறைக்காமல் பேசினால் நன்று!

    புரட்சித்தலைவர் தன் நடிப்பாலும் உழைப்பாலும் தன் வள்ளல் குணங்களாலும் மட்டுமே மக்கள் மனங்களை வென்று நிற்கிறார். ஆயிரமாண்டு கடந்தாலும் அவர்தான் ஆயிரத்தில் ஒருவர். அதை யாராலும் மாற்றவும் முடியாது! மறைக்கவும் முடியாது!

    அவரது உதவியால்தான் கருணாநிதியே முதலமைச்சரானார். சினிமா துறையை சிறைப்பிடித்து ஸ்கிரிப்டில் உள்ளதை மட்டும் படிக்க சொல்லி கட்டளையிடாமல் மக்கள் பக்கம் திரும்புங்கள் முதல்வரே?.

    இப்படி எல்லாம் நடக்கும் என தெரிந்தே இருபெரும் நடிகர்களான விஜய் மற்றும் அஜித் ஆகியோர் விழாவை புறக்கணித்துள்ளனர். #TheGOATMGR

    இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

    • கலைஞர் 100 நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் கலந்து கொண்டனர்.
    • திரைத்துறை மட்டுமின்றி அரசியல் தலைவர்களும் பங்கேற்றனர்.

    கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் கலைஞர் 100 விழா பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் திரைத்துறையை சேர்ந்தவர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் தனுஷ், " ஒரு படத்தின் பூஜைக்காக பத்திரிகை வைக்க கலைஞர் வீட்டிற்கு சென்றேன். அப்போது கலைஞர் கருணாநிதி என்னை 'வாங்க மன்மத ராசா' என அழைத்தார். நம்ம பாட்டை இவர் கேடடிருக்காரான்னு ஆச்சரியமா இருந்தது."

     


    "முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அசுரன் படம் பார்த்துவிட்டு என்னை தொடர்புகொண்டு வாழ்த்தினார். அப்போது அவர், பிரதர் நான் ஸ்டாலின் பேசறேன் என கூறினார். இன்றைக்கு நமது முதலமைச்சர் எளிதில் அணுகும்படியாக இருக்கிறார். மக்களின் முதலமைச்சராக உள்ளார். கலைஞர் அவர்கள் மறைந்து விட்டார் என யாராவது பேசினால்தான் அவர் மறைந்து விட்டார் என மனதிற்குள் தோன்றுகின்றது," என தெரிவித்தார்.

    ×