செய்திகள்
பலியான என்ஜினீயர் ஸ்டீபன் முத்துராஜ்

சென்னை ரெயில் விபத்தில் பலியான நாசரேத் என்ஜினீயர் உடல் சொந்த ஊருக்கு வந்தது

Published On 2018-07-25 07:43 GMT   |   Update On 2018-07-25 07:43 GMT
சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்தில் பயணம் செய்த போது சுவரில் மோதி பலியான நாசரேத் என்ஜினீயர் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. #StThomasMountStation #ChennaiAccident #TrainAccident
நாசரேத்:

சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்தில் நேற்று மின்சார ரெயிலில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த 4 பேர் தடுப்பு சுவரில் மோதி பலியானார்கள். இந்த விபத்துக்கு முன்பாக நேற்று முன்தினம் அதே இடத்தில் நடத்த விபத்தில் விக்னேஷ்(20), ஸ்டீபன் முத்துராஜ்(23) ஆகிய 2 பேர் பலியானார்கள்.

விக்னேஷ் தாம்பரம் சேனடோரியத்தை சேர்ந்தவர் ஆவார். ஸ்டீபன் முத்துராஜ் தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தைச் சேர்ந்தவர். ஸ்டீபன் முத்துராஜின் தந்தை ஐசக் ஜோதிராஜ் நாசரேத்தில் மளிகை கடை நடத்தி வருகிறார். அவரது தாய் பியூலாபுல்மணி மூக்குப்பீறியில் ஒரு பாலர் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். ஸ்டீபன் முத்துராஜுக்கு சுரேஷ் ஆல்வின் பால் (20), பெவின் புஷ்பராஜ் (18) ஆகிய 2 சகோதரர்கள் உள்ளனர். ஐசக் ஜோதிராஜ் தனது குடும்பத்துடன் நாசரேத் பிரகாசபுரத்தில் குடியிருக்கிறார்.

ஸ்டீபன் முத்துராஜ் என்ஜினீயரிங் படித்துள்ளார். அவர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்புதான் சென்னையில் ஒரு தனியார் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார். இதனால் அவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் அறை எடுத்து தங்கியிருந்தார். விக்னேசும், ஸ்டீபன் முத்துராஜ் வேலை பார்க்கும் நிறுவனத்தில் பணி புரிகிறார். இதனால் அவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்துள்ளனர்.

அவர்கள் தினமும் ஒரே ரெயிலில் பணிக்கு செல்வது வழக்கம். நேற்று முன்தினம் அவர்கள் இருவரும் வேறொரு நிறுவனத்தில் பணிக்கு சேர நேர்முகத்தேர்வுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. பின்பு அவர்கள் இரவில் மின்சார ரெயிலில் திரும்பி வந்தனர். பரங்கிமலை அருகே வந்த போது விக்னேசின் தோளில் மாட்டியிருந்த பை, தடுப்பு சுவரில் சிக்கியதால் ரெயிலில் இருந்து இருவரும் தவறி கீழே விழுந்து பரிதாபமாக இறந்தனர்.

ஸ்டீபன் முத்துராஜ் இறந்த சம்பவம் நாசரேத் மற்றும் சுற்றுப்பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சென்னையில் இருந்து சொந்த ஊரான நாசரேத்துக்கு இன்று அதிகாலை கொண்டுவரப்பட்டது. அவரது உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

மகன் வேலையில் சேர்ந்து ஒரு மாதம் கூட ஆகும் முன்பே பலியாகிவிட்டானே என அவரது தாய் பியூலாபுல்மணி மற்றும் குடும்பத்தினரும், உறவினர்களும் கதறி அழுத காட்சி அனைவரையும் கண் கலங்க வைத்தது. ஸ்டீபன் முத்துராஜ் கல்லூரி படிக்கும் போது தனது தந்தை கடை வைத்து கஷ்டப்பட்டு வேலை செய்ததை பார்த்து, காலையில் வீடு வீடாக பேப்பர் போட்டுக்கொண்டே படித்தார் என்று அவரது உறவினர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர். #StThomasMountStation #ChennaiAccident #TrainAccident
Tags:    

Similar News