செய்திகள்

பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 13 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி - முதல்வர்

Published On 2018-06-22 20:30 GMT   |   Update On 2018-06-22 20:30 GMT
பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 13 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை:

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருப்பூர் மாவட்டம், வீரபாண்டி கிராமத்தைச் சேர்ந்த சவுந்திரபாண்டி, முத்துலட்சுமி, தேனி மாவட்டம் தாடிச்சேரியைச் சேர்ந்த செந்தில்குமார், புதுக்கோட்டை மாவட்டம் கல்லாக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மற்றும் பத்மா, புதுக்கோட்டை மாவட்டம் எல்.என்.புரத்தைச் சேர்ந்த கார்த்திக்கேயன், கோவை மாவட்டம் ஊஞ்சவேலாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த காளிங்கராஜ் ஆகியோர் சாலை விபத்தில் உயிரிழந்தனர்.

நெல்லை மாவட்டம் அடங்கார்குளம் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன், புதுக்கோட்டை மாவட்டம் ரகுநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த வீரராகவன் ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த எம்.இலியாஸ் கடலில் மூழ்கிய வேறு ஒரு நபரை காப்பாற்ற முற்பட்டபோது உயிரிழந்தார். தஞ்சை மாவட்டம் நம்பிவயல் கிராமத்தைச் சேர்ந்த விஜயசாந்தி தீ விபத்தில் உயிரிழந்தார்.

காஞ்சீபுரம் மாவட்டம் தாம்பரம் நகரைச் சேர்ந்த கவுதம் தரைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்தார்.

கோயம்புத்தூர் மாவட்டம் அட்டகட்டி பகுதியைச் சேர்ந்த மோனிகா சாலை விபத்தில் உயிரிழந்தார்.

இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். 13 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News