செய்திகள்

ராமநாதபுரம் அருகே போலி பாஸ்போர்ட் கொடுத்து ரூ. 90 ஆயிரம் மோசடி - தம்பதி மீது புகார்

Published On 2018-06-18 10:24 GMT   |   Update On 2018-06-18 10:24 GMT
ராமநாதபுரத்தில் வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக கூறி போலி பாஸ்போர்ட் வாங்கி கொடுத்து ரூ.90 ஆயிரம் மோசடி செய்த கணன், மனைவி மீது வாலிபர் புகார் அளித்துள்ளார்.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் வெளிப்பட்டணத்தை சேர்ந்தவர் ஜீவரத்தினம் (வயது 53). இவர் திருவாடானை கோர்ட்டில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

இவரது மகன் வர்ணசிங் (24). இவர் வெளிநாட்டில் டிரைவர் வேலைக்கு செல்ல விரும்பினார். அதைத் தொடர்ந்து வெளிநாட்டு வேலைக்கு ஆள் அனுப்பும் பனைக்குளத்தைச் சேர்ந்த ருதுமான்அலியை சந்தித்தார். அவர் சவுதிஅரேபியாவில் வேலை வாங்கித் தருகிறேன், அதற்கு பாஸ்போர்ட் எடுக்க வேண்டும் என்று கூறி 50 ஆயிரம் ரூபாயை முன்பணமாக வாங்கினார்.

அதன்பின்னர் ருதுமான் அலி மனைவி பாத்து முத்துவிடம் வர்ணசிங் ரூ. 40 ஆயிரம் கொடுத்தார். ரூ. 90 ஆயிரத்தை பெற்றுக் கொண்ட கணவனும், மனைவியும் வர்ணசிங்கிடம் பாஸ்போர்ட் ஒன்றை வழங்கினார். அது போலி பாஸ்போர்ட் என்று தெரிய வரவே, பணத்தை திருப்பித் தருமாறு கேட்டார். அதற்கு அவரை கணவனும், மனைவியும் சேர்ந்து மிரட்டியதாக தெரிகிறது.

இதுகுறித்து தேவிபட்டிணம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் முத்துபிரேம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Tags:    

Similar News