செய்திகள்

காலா படம் வெளியாகும் தியேட்டர்களை முற்றுகையிடுவோம்- நாடார் சங்கங்கள் அறிவிப்பு

Published On 2018-06-06 04:23 GMT   |   Update On 2018-06-06 04:23 GMT
திரவிய நாடார் புகழை இருட்டடிப்பு செய்யும் வகையில் வெளியாகும் ‘காலா’ படம் திரையிடப்படும் தியேட்டர்களை முற்றுகையிடுவோம் என்று நாடார் சங்கங்கள் அறிவித்துள்ளன.
சென்னை:

நாடார் மக்கள் சக்தி தலைவர் அ.ஹரிநாடார், தமிழ்நாடு நாடார் சங்கத்தலைவர் முத்துரமேஷ் ஆகியோர் சென்னையில் நேற்று கூட்டாக நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

1956-ம் ஆண்டு காலகட்டங்களில் மும்பைக்கு பிழைப்பு தேடிச்சென்ற தமிழர்கள் இனரீதியாக பல பிரச்சினைகளை சந்தித்தபோது, அவர்களுக்கு பாதுகாப்பு அரணாக திகழ்ந்தவர், நெல்லை மாவட்டம் உமரிக்காட்டை சேர்ந்த திரவிய நாடார்.

‘கூடுவாலா சேட்’ என்று அன்புடன் அழைக்கப்படுகின்ற திரவிய நாடார் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படமே, பா.ரஞ்சித் டைரக்‌ஷனில் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘காலா’. ஆனால் இப்படத்தில் திரவிய நாடார் புகழை இருட்டடிப்பு செய்து, கதை நாயகனை ஒரு தலித் சமூக தலைவராக மாற்றியிருக்கிறார் டைரக்டர் ரஞ்சித்.

‘காலா’ படம் ஒரு கற்பனை கதை, திரவிய நாடார் கதை அல்ல என்பதை படக்குழு இதுவரை மறுக்கவே இல்லை. இப்படம் திரைக்கு வந்தால் நிச்சயமாக தென் தமிழகத்தில் சாதிய பிரச்சினைகள் நிகழும். எனவே தான் ‘காலா’ படத்தை தடை செய்யக்கோரி வலியுறுத்துகிறோம். ஐகோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்துள்ளோம்.

எல்லாவற்றையும் மீறி தமிழர்களை சமூக விரோதிகள் என்று பேசிய ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ படம் திரைக்கு வந்தால், திரையிடப்படும் அனைத்து தியேட்டர்களையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். ‘காலா’ படத்தை நாடார் சமுதாய தலைவர்களுக்கு திரையிட்டு காட்டி, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள படக்குழு தயாராக வேண்டும். அதன்மூலம் இச்சமூகத்தில் சாதிய மோதல்கள் தவிர்க்கப்பட வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர். பேட்டியின்போது சென்னை நாடார் சங்க செயலாளர் டி.விஜயகுமார் உடனிருந்தார். #tamilnews
Tags:    

Similar News