செய்திகள்
திருவண்ணாமலையில் கனிம வளத்துறை அலுவலர்களை முற்றுகையிட்ட தொழிலாளர்களை படத்தில் காணலாம்

குவாரியில் கல் உடைக்க அனுமதி கேட்டு கனிம வளத்துறை அலுவலர்களை முற்றுகையிட்ட தொழிலாளர்கள்

Published On 2018-05-30 08:04 GMT   |   Update On 2018-05-30 08:04 GMT
திருவண்ணாமலையில் அடிஅண்ணாமலை பகுதியில் குவாரியில் கல் உடைக்க அனுமதி கேட்டு கனிம வளத்துறை அலுவலர்களை தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அடிஅண்ணாமலை பகுதியில் கல் குவாரி உள்ளது. இதில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கல் உடைத்து தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த கல்குவாரியில் கல் உடைப்பதனால் ஏற்படும் புகையினால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதாக திருவண்ணாமலை மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் மைதிலிக்கு தொடர்ந்து புகார் வந்தது.

இதையடுத்து உதவி இயக்குனர் தலைமையிலான அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கல் உடைக்கு தொழிலாளிகளிடம், இனி இங்கு யாரும் கல் உடைக்கக் கூடாது என்று கூறினர்.

மேலும் கல் உடைத்து கற்களை ஏற்றி கொண்டு வாகனங்கள் செல்லும் வழியை தடை செய்ய பள்ளம் தோண்ட பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த தொழிலாளர்கள், கனிம வளத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை தாசில்தார் மனோகரன் மற்றும் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது தொழிலாளர்கள், நாங்கள் பல ஆண்டுகளாக இந்த தொழில் செய்து வருகிறோம். இதுதான் எங்கள் வாழ்வாதாரம். கல் குவாரியை ஏலம் விடுவதாக இருந்தாலும், அதனை நாங்களே ஏலம் எடுத்து கொள்கிறோம் என்றனர்.

சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்படாததால் 15 நாட்களுக்கு இங்கு யாரும் கல் உடைக்கக் கூடாது என்று உத்தரவிட்டு அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.#tamilnews
Tags:    

Similar News