search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல் குவாரி"

    • கட்டுப்படுத்த மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் ஐ.ஜி.பி. லாரன்ஸ் அரசுக்கு கோரிக்கை
    • கனிம வளங்களை எடுத்து செல்வதால் ரோடுகள் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது.

    திருவட்டார் :

    குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் ஐ.ஜி.பி.லாரன்ஸ் மாவட்ட நிர்வாகத்துக்கு ஒரு மனு அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டம் சித்திரங்கோடு பகுதியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து தினமும் 500-க்கும் மேற்பட்ட கனரக வாகனங்களில் எம்.சான்ட், என்-சான்ட், ஜல்லி, கல் ஆகிய கனிம வளங்களை இரவு பகலாக கேரளாவிற்கு எடுத்து செல்கிறார்கள். கல்குவாரிகளை சுற்றி ஏராளமான வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளன.

    இந்த கல்குவாரிகளில் இருந்து தினமும் இரவு நேரங்களில் அதிக சத்தத்துடன் பாறைகள் உடைப்பதால் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் பெரிய அளவில் விரிசல் ஏற்படுகிறது. இதனால் வீடுகள் உறுதிதன்மை இல்லாமல் நிற்கிறது. வயதானவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இரவு நேரங்களில் வீட்டில் தூங்க முடியாமல் பொதுமக்கள் அவதிபடுகிறார்கள். அதிக எடையுடன் 16, 18 சக்கரம் உடைய கனரக வாகனங்களில் இரவு நேரங்களில் கனிம வளங்கள் எடுப்பதற்காக வரிசையில் சுமார் 300-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அதிக சத்தத்துடன் லோடு ஏற்றி செல்வதால் அந்த பகுதியில் உள்ள கல் குவாரிகளை சுற்றி குடியுருப்புகளில் வசிப்பவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

    கடந்த சில மாதங்களுக்கு முன் இரவு நேரங்களில் கனரக வாகனங்களில் கனிம வளங்களை ஏற்றி அதிகாலை வரை ரோட்டோரம் வாகனங்களை நிறுத்தி அதிக சத்தத்துடன் ஹாரன் அடித்து கொண்டோ சித்திரங்கோடு சந்திப்பில் இருக்கும் எடைமேடையில் ஒவ்வொரு வாகனமும் எடை போடுவதற்கு வரிசையில் நிற்பதால் அந்த பகுதியில் வீட்டில் உள்ளவர்க ளுக்கும், கனரக வாகன டிரைவர்க ளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதிக எடையுடன் கனரக வாகனங்களில் கனிம வளங்களை எடுத்து செல்வதால் ரோடுகள் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது.

    காலை, மாலையில் பள்ளி, கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் செல்லும் நேரங்களில் அதிக எடையுடன் கனரக வாகனங்கள் செல்வதால் பெரிய அளவில் போக்கு வரத்துக்கு இடையூறாக உள்ளது. இதனால் பல விபத்துக்கள் நடை பெறுகிறது. எனவே அந்த பகுதியில் செயல்படும் கல்குவாரிகள் அதிக சத்தத்துடன் வெடி வைத்து பாறைகள் உடைப்பதை தவிர்த்து சிறிய அளவில் வெடி வைத்து பாறைகள் உடைக்க வேண்டும். எனவே மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுத்து அதிக சத்தத்துடன் கற்களை உடைக்கும் கல்குவாரிகளை கட்டுப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த ஜனனியின் மீது விழுந்து பலத்த காயமடைந்தார்
    • அதிகாரிகள் கல் குவாரியை உரிய பாதுகாப்போடு இயங்குவதற்கு அறிவுறுத்த வேண்டும்

    விழுப்புரம்:

    திண்டிவனம் அடுத்த தென்னம்பூண்டியை சேர்ந்தவர் ஜீவரத்தினம் .இவரதுமனைவி ஜனனி (வயது24). இவர் வழக்கம் போல் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் உள்ள கல்குவாரி ஒன்றில் வெடி வெடித்ததில் மலைக்கற்க்கள் பெயர்ந்து வந்து ஜனனியின் வீட்டின் மேல் கூரையில் விழுந்தது. இதில் மேற்கூரை முழுவதும் சேதமடைந்து வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த ஜனனியின் மீது விழுந்து பலத்த காயமடைந்தார் .

    உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்க ப்பட்டு வருகின்றன. இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியு ள்ளது .எனவே துறை சார்ந்த அதிகாரிகள் கல் குவாரியை உரிய பாதுகா ப்போடு இயங்குவதற்கு அறிவுறுத்த வேண்டும் என்பது இப்பகுதியில் உள்ள பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

    • சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமையில் கண்காணிப்பு குழுவினா் ஆய்வு செய்தனா்.
    • விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா உள்ளிட்ட விவரங்கள் தொடா்பாக ஆய்வு செய்யப்பட்டன

    பல்லடம்

    பல்லடம் கோடங்கிபாளையம் பகுதியில் உள்ள கல் குவாரிகளில் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமையில் கண்காணிப்பு குழுவினா் ஆய்வு செய்தனா்.ஆய்வின்போது, குவாரிகளின் தற்போதைய நிலை, செயல்படும் தன்மை, பாதுகாப்பு நடைமுறைகள், குழந்தைத் தொழிலாளா்கள் பணிபுரிகின்றனரா, சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளதா, விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா உள்ளிட்ட விவரங்கள் தொடா்பாக ஆய்வு செய்யப்பட்டன.

    ஆய்வின்போது பல்லடம் தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமாா், மண்டல துணை தாசில்தார் சுப்பிரமணியம், காவல் உதவி ஆய்வாளா் காா்த்திகேயன், கனிம வளத்துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

    • 17 அம்ச கோரிக்கைகளை தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • சேலம் மாவட்டத்தில் மட்டும் தினமும் 50 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

    ஓமலூர்:

    தமிழ்நாடு முழுவதும் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட கல் குவாரிகளும் 3ஆயிரம் மேற்பட்ட கிரஷர்களும் செயல்பட்டு வருகின்றன. ஜல்லி, எம்.சாண்ட் ஆகியவை பள்ளி, மருத்துவமனை, சாலை, பாலங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டுமான பணி களுக்கும் தேவையாக உள்ளது. தற்போது பெரிய அளவில் கனிமங்கள் வெட்டி எடுப்பதற்கான சட்ட விதிகளை, சிறிய அளவிலான கல் குவாரிகளுக்கும், ஜல்லி உடைக்கும் சிறு கிரசர்களுக்கும் கனிம வளத்துறை அமல்படுத்தி உள்ளது.

    அதனால் இந்த தொழிலில் உள்ளவர்களுக்கு கடும் இழப்பு ஏற்பட்டு, தொழிலை நடத்த முடியாத நிலை உருவாகியுள்ளதாக கூறுகின்றனர். மேலும், உள்ளூரிகளில் சமூக ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என்ற பெயரில் அச்சுறுத்தல் செய்கின்றனர். மேலும், கனிம வளம் கடத்தல், கனிம வளம் கொள்ளை என அச்சுறுத்தி, குவாரி தொழிலை நடத்த முடியாத நிலை ஏற்படுவதாக குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.

    இந்நிலையில், சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் குவாரிகளில் பல்வேறு குறைகளை கண்டறிந்து பல கோடி ரூபாய் அபராதம் விதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், குவாரி உரிமையாளர்களிடம் பணம் பறிக்கும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்கள், தொழிலாளர்கள், லாரி ஓட்டுனர்கள், கட்டுமான தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சேலம் மாவட்டம் ஓமலூரிலும் கடந்த 26-ம் தேதி முதல் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக 2 ஆயிரத்து 500 கல் குவாரிகள், 3 ஆயிரம் கிரஷர்கள் இயங்காமல் முடங்கியுள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் எம்.சாண்ட், ஜல்லி கற்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டதுடன், கட்டுமான தொழிலும் ஸ்தம்பித்து வருகிறது. தொடர்ந்து ஓமலூர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளை ஒரே இடத்தில் நிறுத்தியும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட உரிமையாளர்கள், தொழிலாளர்கள் ஒரே இடத்தில் அமர்ந்தும் அரசுக்கு தங்களது கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர்.

    மேலும், அங்கேயே சமைத்து சாப்பிட்டு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுபற்றி சேலம் மாவட்ட குவாரி கிரஷர் சங்க மாவட்ட செயலாளர் ராஜா கூறும்போது, எங்களது சிறு குவாரிகளில் உற்பத்தி செய்யப்படும் ஜல்லி, எம்.சான்ட் அரசு பணிகளுக்கே 80 சதவீதம் அனுப்பப்படுகிறது. மீதமுள்ள 20 சதவீதம் மக்கள் பயன்பாட்டிற்கு கொடுக்கபடுகிறது. தற்போது குவாரி தொழில் நிறுத்தப்பட்டுள்ளதால், சேலம் மாவட்டத்தில் மட்டும் தினமும் 50 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

    தமிழ்நாடு முழுவதும் ஆயிரத்து 300 கோடி ரூபாய் தினமும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மேலும், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து வருவாய் இல்லாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனால், தமிழ்நாடு முதல்வர் குவாரி கிரசர் மற்றும் தொழிலாளர்கள் கோரிக்கையை நிறைவேற்றி தொழில் நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். 

    • கரூர் மாவட்டத்தில் உள்ள குவாரி உரிமையாளர்கள், தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • விதிமீறல் கண்டறியப்பட்ட 12 குவாரிகளுக்கு அபராதம் விதிக்க உதவி கலெக்டர்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் 150க்கும் அதிகமான கல் குவாரிகள் மற்றும் கிரஷர்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் தினமும் கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெறுகிறது.

    இந்த குவாரிகள் நடைபெறும் இடங்களில் டிஜிட்டல் முறைப்படி ஆய்வு செய்ய கனிம வளம் மற்றும் புவியியல் துறை இயக்குனர் திட்டமிட்டார். அதன்படி முதல் கட்டமாக கரூர் மாவட்டத்தில் கடந்த 22-ந் தேதி ஆய்வு தொடங்கியது. இந்த ஆய்வினை கண்டித்து கரூர் மாவட்டத்தில் உள்ள குவாரி உரிமையாளர்கள், தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் மற்றும் உதவி கலெக்டர்கள் தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், உதவி இயக்குனர் (நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை) தாசில்தார்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய குழுவினர் 42 குவாரிகளில் ஆய்வினை முடித்தனர்.

    இதில் விதிமீறல் கண்டறியப்பட்ட 12 குவாரிகளுக்கு அபராதம் விதிக்க உதவி கலெக்டர்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதையடுத்து அந்த குவாரிகளுக்கு ரூ. 44 கோடியே 65 லட்சத்து 28 ஆயிரத்து 357 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 30 கல்குவாரிகளுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கலெக்டர் பிரபு சங்கர் தெரிவித்தார். இதில் விதிமீறலில் சிக்கிய 12 குவாரிகளில் ஸ்ரீரங்கம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ., பழனியாண்டிக்கு சொந்தமான குவாரிக்கு மட்டும் ரூ. 23 கோடியே 54 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குவாரி அதிபர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

    • தமிழகமெங்கும் எம்.சாண்ட் மற்றும் ஜல்லி கற்களின் உற்பத்தி முற்றிலுமாக பாதிக்கப்பட்டு கட்டுமானத் தொழில் முழுமையாக நின்றுவிட்டது.
    • கல் குவாரி உரிமையாளர்கள் சங்கத்திடம் பேசி பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், மற்ற துறைகளைப் போலவே கல் குவாரிகளுக்கும் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக சுற்றுச்சூழல் துறை அதிகாரிகளும், கனிம வளத்துறை அதிகாரிகளும் கல்குவாரிகளைப் பார்வையிட்டு பல்வேறு புகார்களைக் கூறி, தேவையற்ற முறையில் குவாரிகளை முடக்கி நசுக்க நினைக்கிறது என்றும் குற்றஞ்சாட்டி, கல்குவாரி உரிமையாளர்கள் தங்களது உற்பத்தியை நிறுத்திவிட்டனர். இதனால், தமிழகமெங்கும் எம்.சாண்ட் மற்றும் ஜல்லி கற்களின் உற்பத்தி முற்றிலுமாக பாதிக்கப்பட்டு கட்டுமானத் தொழில் முழுமையாக நின்றுவிட்டது.

    கடந்த சில நாட்களாக சுற்றுச்சூழல் துறை அதிகாரிகளும், கனிம வளத்துறை அதிகாரிகளும் குவாரிகளுக்குச் சென்று ஆய்வு நடத்தி, தொழிலை மூடக்கும் விதமாக நியாயமின்றி அபராதம் விதிக்கும் போக்கு தொடங்கி உள்ளதாகவும்; அதனை எதிர்த்தே தற்போது தாங்கள் உற்பத்தியை நிறுத்தியுள்ளோம் என்று குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

    கனிம வளத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள், கல் குவாரி உரிமையாளர்கள் சங்கத்திடம் பேசி, இப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குவாரி உரிமையாளர்களிடம் பணம் பறிக்கும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
    • கற்களை ஏற்றிச்செல்லும் லாரிகள், தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

    நாமக்கல்:

    தமிழகம் முழுவதும், 2,500 கல் குவாரிகளும், 3 ஆயிரம் கிரஷர்களும் செயல்பட்டு வருகின்றன. வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள், ரோடுகள், பாலங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டுமானப் பணிகளுக்கும், கனிம வளத்தொழில் மூலம் கிடைக்கும் ஜல்லி கற்கள் அடிப்படை ஆதாரமாகவும், அத்தியாவசியமாகவும் உள்ளது.

    தற்போது, பெரிய கனிமங்கள் வெட்டி எடுப்பதற்கான சட்ட திட்டங்களை, சிறிய மினரல் என்றழைக்கப்படும், கல், ஜல்லி உடைக்கும் சிறு வளத்துறை அமல்படுத்தி உள்ளது. அதனால், ஏற்கனவே தொழிலில் உள்ளவர்களுக்கு கடும் இழப்பு ஏற்பட்டு, தொழிலை நடத்த முடியாத நிலை உருவாகி உள்ளது.

    சமூக விரோதிகள் சிலர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், விவசாயிகள் என்ற போர்வையில் அச்சுறுத்துவதாகவும், கனிம வளக் கடத்தல், கனிம வளக் கொள்ளை என தகவல்கள் பரவுவதாகவும், அதன் காரணமாக, குவாரி மற்றும் கிரஷர் தொழில் பாதிக்கப்படுவதாகவும் அதன் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

    சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என்ற பெயரில், குவாரி உரிமையாளர்களிடம் பணம் பறிக்கும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை நேற்று முன்தினம் தொடங்கினர். இன்று 3-வது நாளாக வேலை நிறுத்தம் நடைபெற்றது.

    சேலம், நாமக்கல் மாவட்டத்தில், 75-க்கும் மேற்பட்ட கல் குவாரி மற்றும் கிரஷர்கள் மூடப்பட்டுள்ளன. இந்த வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, தேவையான ஜல்லி கற்கள் கிடைக்காமல் கட்டுமான பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கற்களை ஏற்றிச்செல்லும் லாரிகள், தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

    இது குறித்து, தமிழ்நாடு மோட்டார் போக்குவரத்து கூட்டமைப்பின் மாநில தலைவர் செல்ல ராசாமணி கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் நடக்கின்ற அரசு மற்றும் தனியார் கட்டுமானப் பணிகளை, தங்கள் சுயலாபத்திற்காக முடக்கும் வகையில், தமிழக கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் சங்கம், கடந்த, 26-ந் தேதி முதல், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.

    தமிழகம் முழுவதும், முற்றிலும் முறைகேடாக நடந்து வரும் கல்குவாரி, கிரஷர்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்து, குவாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ள காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட் டத்தை முடிவுக்கு கொண்டு வந்து, கல்குவாரி, கிரஷர்களை உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கிராம மக்கள் மருத உடைய அய்யனார் கோவிலில் அமர்ந்து உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • சம்பவ இடத்திற்கு 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    சிவகிரி:

    சிவகிரி தாலுகா வாசுதேவநல்லூர் அருகே உள்ள அரியூர் மலையடி வாரத்தில் செயல்பட்டு வரும் கல்குவாரியினால் நீரோடைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் மலையில் பெய்யும் மழை நீரானது குளங்களுக்கு செல்லாமல் தடுக்கப்பட்டு குளங்கள் அனைத்தும் வறண்ட நிலையில் காணப்படுபதால், ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்படைந்து வருகிறது.

    எனவே மலையை சுற்றியு ள்ள 5 கிராம மக்களின் வாழ்வா தாரம் கேள்விக்குறியாகி கால்நடைகளை கூட மேய்ச்சலுக்காக கொண்டு செல்ல முடியாத நிலை அவலநிலை ஏற்பட்டுள்ளது என அப்பகுதியினர் புகார் தெரிவித்து வந்தனர்.

    இதுதொடர்பாக இருமன்குளம், வடக்குப் புதூர், வீரிருப்பு உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் பல முறை மாவட்ட கலெக்டர், அனைத்துதுறை சார்ந்த அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மருத உடைய அய்யனார் கோவிலில் அமர்ந்து உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்திய போது வாக்குவாதம் ஏற்பட்டது.

    இந்நிலையில் சம்பவ இடத்திற்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 2 டி.எஸ்.பி.க்கள் உட்பட 300-க்கும் மேற்பட்ட போலீ சார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சங்கரன்கோவில் தாசில்தார் பழனிவேல்சாமி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட வர்க ளிடம் கல்குவாரி சம்பந்தமான கோரிக்கை மாவட்ட கலெக்டர் மூலமாக விசாரணை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்ததைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

    இந்த மலையை பார்வையிட சென்ற போதுதான் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவாளர்களுக்கும், கல்குவாரியில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டதால் கல்குவாரியில் பணிபுரியும் ஊழியர்களை சீமான் ஆதரவாளர்கள் தாக்கியதாக சீமான் உள்பட 13 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

    • கல் குவாரிகள் அமைந்துள்ள பகுதியில் ஓடை மற்றும் குடியிருப்புகள் உள்ளன.
    • கல் குவாரிகளுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல.

    திருப்பூர் :

    பல்லடம் கோடங்கிப்பாளையத்தில் 4 புதிய கல் குவாரிகள் மற்றும் ஏற்கனவே உள்ள 16 பழைய கல் குவாரிகளுக்கு உரிமம் வழங்குவது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் திருப்பூர் கலெக்–டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார். மாசுகட்–டுப்–பாட்டு வாரிய தெற்கு பொறியாளர் சாமிநாதன் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் பங்கேற்ற ஒருதரப்பினர், 'கல் குவாரிகள் அமைந்துள்ள பகுதியில் ஓடை மற்றும் குடியிருப்புகள் உள்ளன. பசுமை வளையங்கள் முறையாக அமைக்கவில்லை. விதிமுறைகள் உரிய முறையில் பின்பற்றப்படவில்லை. கல் குவாரிகளுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. உரிய விதிமுறைகளை கடைபிடித்து கல் குவாரிகளுக்கு உரிமம் வழங்க வேண்டும்' என்றனர்.

    மற்றொரு தரப்பினர், 'கல் குவாரியால் எங்கள் பகுதியில் வசிக்கும் மக்களின் பொருளாதாரம் உயர்ந்து வருகிறது. டீக்கடைகள் உள்ளிட்ட கடைகள் இதர தொழில்களும் சேர்ந்தே வளர்ச்சி பெறும். பல தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக உள்ளதால் கல் குவாரிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.கருத்து கேட்பு கூட்டத்தில் தெரிவித்த கருத்துகள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.

    • வாகனத்திற்குள் அமர்ந்திருந்த டிரைவர் லட்சுமணன் மண் சரிவதை கண்டு சுதாரித்து, அந்த எந்திரத்திற்குள் இருந்து வெளியேறுவதற்குள் பெரிய அளவில் மண் சரிவு ஏற்பட்டது.
    • தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் அங்கு வந்து தொழிலாளர்களின் உதவியுடன் பாறை குவியல் மற்றும் மண்ணை அகற்றி உள்ளே சிக்கி உள்ள லட்சுமணனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் உடையாளிப்பட்டி அருகே கிள்ளுக்குளுவாய்பட்டியில் தனியாருக்கு சொந்தமான கல் குவாரி ஒன்று இயங்கி வருகிறது.

    இந்த கல்குவாரியில் இருந்து எடுக்கப்பட்ட பாறைகள், சரளை போன்றவை ஜல்லி கற்களாக உடைக்கப்பட்டும், கிரஷர் மண் தாயாரிக்கப்பட்டும், புதுக்கோட்டை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

    இதற்கான பணிகள் தினமும் காலை முதலே தொடங்கி நடைபெறும். வழக்கம்போது இந்த கல் குவாரிக்குள் அதே பகுதியை சேர்ந்த ஹிட்டாச்சி பொக்லைன் ஓட்டுனர் லட்சுமணன் (வயது 40) என்பவர் கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

    100 அடி ஆழத்தில் அவர் ராட்சத பொக்ளைன் மூலம் கற்களை பெயர்த் தெடுக்கும் பணியை செய்து கொண்டிருந்தார். பாறைகளை அகற்றுவதற்காக அவர் ராட்சத பொக்லைன் எந்திரத்தை வைத்து பக்கவாட்டு மண்ணை வெட்டி உள்ளார்.

    அப்போது அதன் அதிர்வு தாங்காமல் கல் குவாரியின் ஒரு பகுதி மளமளவென சரிந்துள்ளது. இதனை கண்டு அங்கு பணியில் இருந்த கூலி தொழிலாளிகள் அலறி அடித்துக்கொண்டு ஓடி உள்ளனர்.

    ஆனால் ஹிட்டாச்சி வாகனத்திற்குள் அமர்ந்திருந்த டிரைவர் லட்சுமணன் மண் சரிவதை கண்டு சுதாரித்து, அந்த எந்திரத்திற்குள் இருந்து வெளியேறுவதற்குள் பெரிய அளவில் மண் சரிவு ஏற்பட்டது.

    இதனால் பாறை மற்றும் மண் சரிந்து ஹிட்டாச்சி எந்திரத்தையே மூடியது. இதனால் மணிகண்டன் வெளியேற முடியாமல் மண்ணில் புதைந்து சிக்கிக் கொண்டார். இதனை தொடர்ந்து அங்கிருந்த தொழிலாளிகள் மண் மற்றும் பாறைகளை அகற்ற முயற்சித்தனர். ஆனால் அது முடியாத காரியம் என்று தெரியவரவே உடனடியாக புதுக்கோட்டை போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

    அதன்பேரில் தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் அங்கு வந்து தொழிலாளர்களின் உதவியுடன் பாறை குவியல் மற்றும் மண்ணை அகற்றி உள்ளே சிக்கி உள்ள லட்சுமணனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • நேரடியாக 5 ஆயிரம் குடும்பங்களும், மறைமுகமாக 50 ஆயிரம் குடும்பங்களும் பயன் அடைந்து வருகின்றனர்.
    • சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் கல் குவாரி மற்றும் கிரஷர் தொழில் குறித்து தவறான செய்திகளை புகார் மனுவாக கொடுத்து வருகின்றனர்

    பல்லடம் :

    திருப்பூர் மாவட்ட ஜல்லி கிரஷர் மற்றும் குவாரி உரிமையாளர்கள் சங்கத்தினர்கள் 50க்கும் மேற்பட்டவர்கள் பல்லடம் தாசில்தார் நந்தகோபாலிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் மாவட்டத்தில் அரசு அனுமதியுடன் கல்குவாரி மற்றும் கிரசர் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது.

    இந்த தொழிற்சாலைகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்றும்,சுற்றுச் சூழல் மற்றும் கனிம வளத் துறை அனுமதி பெற்றும், குவாரியிலிருந்து உரிய நடைச்சீட்டு பெற்றும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு கல்குவாரி தொழில் செய்து வருகின்றோம். கல்குவாரியிலிருந்து உற்பத்தியாகும் பொருட்கள் அனைத்தும் திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள சாலை பணி, அரசு கட்டிட பணி மற்றும் இதர அத்தியாவசிய கட்டிட பணிகளின் பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தப்படுகின்றன. அனைவரும் அரசிற்கு செலுத்தும் பர்மிட் கட்டணம், சீனியரேஜ் தொகை மற்றும் அரசுக்கு செலுத்த வேண்டிய அனைத்து கட்டண தொகையையும் செலுத்தி வருகிறோம். சட்டத்திற்கு உட்பட்டு தொழில் செய்து வருகிறோம். மேலும் அரசு மற்றும் தனியார் வங்கிகளில் ரூபாய் பல கோடி கடன் பெற்று மாத தவணைகள் செலுத்தி வருகிறோம். இத்தொழில் மூலம் நேரடியாக 5 ஆயிரம் குடும்பங்களும், மறைமுகமாக 50 ஆயிரம் குடும்பங்களும் பயன் அடைந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சமீபகாலமாக சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் சிலர் அரசு அலுவலகங்களுக்கு சென்று கல் குவாரி மற்றும் கிரஷர் தொழில் குறித்து தவறான செய்திகளை புகார் மனுவாக கொடுத்து வருகின்றனர்.கல் குவாரி உரிமையாளர்களிடம் அவர்களின் பணிக்கு இடையூறாக பணம் பறிக்கும் நோக்கத்தில் பொய்யான புகார்களை மாவட்ட நிர்வாகத்திற்கு கொடுத்தும், மேலும் எங்களை மிரட்டியும், அச்சுறுத்தியும் வருகின்றனர். இதனால் எங்களால் தொடர்ந்து தொழில் செய்ய முடியாத நிலை தொடர்கிறது. சட்டபூர்வமாக உரிமம் பெற்று தொழில் செய்து வரும் எங்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் பணம் பறிக்கும் முயற்சியில் சமூக ஆர்வலர்கள் என்கிற போர்வையில் மிரட்டல் போக்கை கையாளுகின்றனர். அவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் .இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கல்குவாரியில் இருந்து 300 மீட்டர் தூரத்தில் குடியிருப்புகள் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
    • வருங்காலத்தில் கருத்து கேட்பு கூட்டங்களை அந்தந்த கிராமத்தில் நடத்த வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் காங்கயம் தாலுகா பரஞ்சேர் வழி ஊராட்சி நால்ரோடு கிராமத்தில் அமைய உள்ள 2 கல்குவாரி அமைப்பதற்கான கருத்து கேட்பு கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார். மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சரவணக்குமார் முன்னிலை வகித்தார்.

    கல்குவாரியால் தங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. ஊராட்சிக்கு தேவையான திட்டங்கள் கிடைக்கும். எங்கள் பகுதியில் பாதிப்பு இல்லை என பெரும்பாலானவர்கள் கருத்துக்களை தெரிவித்தனர். கூட்டத்தில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் பேசும்போது, 'கல்குவாரியை முறைப்படி நடத்த வேண்டும் என்பது எங்களின் வேண்டுகோள். வருங்காலத்தில் கருத்து கேட்பு கூட்டங்களை அந்தந்த கிராமத்தில் நடத்த வேண்டும். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை தமிழில் வெளியிட வேண்டும். கனிமத்துறை உதவி இயக்குனர் அறிக்கையை தமிழில் வெளியிட வேண்டும். நால்ரோடு கல்குவாரியில் இருந்து 300 மீட்டர் தூரத்தில் குடியிருப்புகள் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆனால் அங்கு வீடுகள் உள்ளன. தவறான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல் குவாரிகளை கலெக்டர் ஆய்வு செய்ய வேண்டும். கல்குவாரியில் வேலை செய்பவர்களுக்கு பி.எப்., இ.எஸ்.ஐ. உள்ளிட்டவை பிடித்தம் செய்யப்படுகிறதா என்பதையும் தெரிவிக்க வேண்டும்' என்றார்.

    ×