செய்திகள்

திருப்பூரில் 60 வார்டுகளிலும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண ரூ.880 கோடியில் திட்டம்

Published On 2018-05-27 16:26 GMT   |   Update On 2018-05-27 16:26 GMT
திருப்பூர் மாநகராட்சி 60 வார்டுகளிலும் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் ரூ.880 கோடி செலவில் 4-வது குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும் என்று கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ. கூறினார்.
அனுப்பர்பாளையம்:

திருப்பூர் பெரியார் காலனியில் பெரியார்நகர் குடியிருப்போர் சங்கத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்குட்பட்ட 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அதில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் வீட்டு வசதி வாரியத்திற்கு செலுத்த வேண்டிய தவணை தொகையை முழுமையாக செலுத்தி வீடுகளுக்கான பத்திரங்களை பெற்று கொண்டுள்ளனர். ஆனால் அந்த குடியிருப்புகளுக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக குடியிருப்போர் சங்கம் சார்பில் பலமுறை வருவாய்துறை அதிகாரிகளுக்கு மனு வழங்கப்பட்டது.

மேலும் உடனடியாக பட்டா வழங்கக்கோரி பெரியார்நகர் குடியிருப்போர் சங்கம் சார்பில் கடந்த 2-ந்தேதி சமையல் செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனவே இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணுமாறு கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ. வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த நிலையில் சங்கத்திற்குட்பட்ட குடியிருப்புகளில் வசிக்கும் 185 பேருக்கு பட்டா வழங்கும் நிகழ்ச்சி பெரியார் காலனியில் நேற்றுகாலை நடைபெற்றது. இதில் கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பட்டா வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளிலும் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் ரூ.880 கோடி செலவில் 4-வது குடிநீர் திட்டம் விரைவில் நிறைவேற்றப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மேட்டுப்பாளையத்தில் இருந்து திருப்பூருக்கு மாநகராட்சி பகுதிக்கு நேரடியாக குடிநீர் வினியோகம் செய்யப்படும். இதேபோல் மாநகர் முழுவதும் பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக அமல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் வடக்கு தாசில்தார் சுப்பிரமணியம், 1-வது மண்டல முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன், வளர்மதி கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் கருணாகரன், முன்னாள் கவுன்சிலர் பாலசுப்பிரமணியன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். 
Tags:    

Similar News