செய்திகள்

ஆண்டிப்பட்டியில் ஸ்டெர்லைட் ஆலையை கண்டித்து மார்க்சிஸ்டு கம்யூ. கட்சியினர் மறியல்

Published On 2018-05-24 12:44 GMT   |   Update On 2018-05-24 12:44 GMT
ஆண்டிப்பட்டியில் ஸ்டெர்லைட் ஆலையை கண்டித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டம் செய்தனர்.

ஆண்டிப்பட்டி:

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தை கண்டித்து ஆண்டிப்பட்டியில் எம்.ஜி.ஆர். சிலை அருகே மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் செய்தனர். ஒன்றிய செயலாளர் ராமர் தலைமையில் ஏராளமானோர் பங்கேற்றனர். இவர்களை போலீசார் கைது செய்தனர்.

கடமலைக்குண்டு பகுதி யில் ஒன்றிய செயலாளர் மணவாளன் தலைமையில் மறியல் செய்த மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் கைதானார்கள்.

போடியில் தேவர் சிலை முன்பு துப்பாக்கி சூட்டை கண்டித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் செய்தனர். இவர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

பழனி ரவுண்டானா பகுதியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது தமிழக முதல்வர் பதவி விலக கோரி கோ‌ஷமிட்டனர்.

கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

கன்னிவாடி பஸ் நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் சக்திவேல் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

Tags:    

Similar News