செய்திகள்
போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டவர்களை படத்தில் காணலாம்

கைக்குழந்தைகளுடன் வந்தவர்கள் மீது தாக்குதல்- போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட 100 பேர் மீது வழக்கு

Published On 2018-05-10 09:37 GMT   |   Update On 2018-05-10 09:37 GMT
போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட மற்றும் கைக்குழந்தைகளுடன் வந்தவர்களை தாக்கிய 100 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாணியம்பாடி:

வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தனியாக சுற்றித்திரியும் வடமாநிலத்தை சேர்ந்தவர்களை குழந்தை கடத்த வந்திருப்பதாக கூறி பொதுமக்கள் பிடித்து தாக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

கோவையை சேர்ந்த 17 வயது பெண் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்தார். அந்த பெண் திடீரென மாயமானார். அதே நாளில் அவருடன் வேலைபார்த்த வாலிபர் ஒருவரையும் காணவில்லை. அந்த வாலிபர் வாணியம்பாடி அருகே தமிழக எல்லை பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர்.

எனவே அந்த பெண்ணை இந்த வாலிபர்தான் கடத்தியிருக்க வேண்டும் என கருதி கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரை சேர்ந்த பெண்ணின் உறவினர்கள் அவரை தேடி வேன் ஒன்றை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு வாணியம்பாடி பகுதிக்கு வந்தனர். அந்த வேனில் பெண்ணின் உறவினர்களான கிருஷ்ணகிரியை சேர்ந்த வினோத்குமார் (வயது 24), ஓசூரை சேர்ந்த சந்தோஷ்குமார் (25), சாந்தம்மா (38), மீரா (21), அஞ்சலி (18) உள்ளிட்டோர் இருந்தனர். அவர்களில் மீராவும், அஞ்சலியும் அவர்களது கைக்குழந்தைகளுடன் வந்திருந்தனர்.

வேனில் இருந்தவாறே மாயமான பெண் நடமாடுகிறாளா? என தேடியவாறு இருந்தனர். அவர்கள் கைக்குழந்தைகளுடன் இருந்ததால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் அந்த குழந்தைகளை வேறு எங்காவது இருந்து வேனில் கடத்திக்கொண்டு வந்திருக்கலாம் என கருதி சுற்றி வளைத்தனர். பின்னர் வேனுக்குள் புகுந்த அவர்கள் வினோத்குமார் உள்ளிட்ட 5 பேரையும் சரமாரியாக தாக்கி வாணியம்பாடி தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். தாக்குதலில் காயமடைந்தவர்கள் போலீசார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அவர்களிடம் விசாரணை நடத்துவதாக கூறி பொதுமக்களை போலீசார் அனுப்பி வைத்தனர். அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் அதே பகுதியில் உள்ள காமராஜபுரம், பட்டாபேட்டை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். அவர்கள் போலீசாரிடம் நீங்கள் விசாரணை நடத்தும் குழந்தை கடத்தும் கும்பலை சேர்ந்தவர்களை எங்கள் முன் ஆஜர்படுத்த வேண்டும் என கூறினர்.

அப்போது போலீசார் ‘‘அவர்கள் குழந்தை கடத்தும் கும்பலை சேர்ந்தவர்களா? என விசாரித்து வருகிறோம்’’ என கூறினர். ஆனால் அதனை ஏற்காமல் அனைவரையும் எங்களிடம் காட்டினால்தான் நாங்கள் இங்கிருந்து செல்வோம் என கூறி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்களிடம் 5 பேரையும் கொண்டு வந்து காட்டினர். அதன்பின்னரும் கிராம மக்கள் கலைந்து செல்லவில்லை. இதனையடுத்து அவர்களிடம் வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி, இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

5 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு அவர்கள் கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட மற்றும் கைக்குழந்தைகளுடன் வந்தவர்களை தாக்கிய 100 பேர் மீது போலீசார் தற்போது வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News