செய்திகள்

ஜெயலலிதா நினைவு மண்டபத்துக்கு மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு

Published On 2018-05-08 04:03 GMT   |   Update On 2018-05-08 04:03 GMT
ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைப்பதற்கு மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது ஜனநாயக விரோதம் என்றும், ஜெயலலிதா ஊழல் செய்து சிறைக்கு சென்றவர் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை:

தி.மு.க. செயல் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் நேற்று பல்வேறு வளர்ச்சி பணிகளை தொடங்கிவைத்தார். மேலும் ஏற்கனவே அந்த தொகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளின் நிலை குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.

இதையடுத்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- ‘நீட்’ தேர்வு மையங்களில் சோதனை என்ற பெயரில் மாணவர்களை அவமதித்து இருக்கிறார்களே?

பதில்:- தமிழ்நாட்டு மாணவர்கள் காப்பியடிப்பதில் தீவிரமானவர்கள் என்பதாக கொச்சைப்படுத்தி, அவர்களை அவமானப்படுத்தும் வகையில் சோதனையிட்ட விதங்களை எல்லாம் தொலைக்காட்சிகளில் கண்ட பெற்றோர்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களும் வேதனையில் ரத்தக்கண்ணீர் வடித்தார்கள்.

சி.பி.எஸ்.இ. இதையெல்லாம் உடனடியாக திருத்திக்கொள்ளவேண்டும். தனது செயல்பாடுகளுக்காக தமிழக மாணவர்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்பது தான் என்னுடைய கோரிக்கை. ஒட்டுமொத்தமாக சி.பி.எஸ்.இ. வாரியத்தின் இத்தகைய செயல்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அதுமட்டுமல்ல, ‘நீட்’ தேர்வில் தமிழகத்துக்கு நிரந்தரமாக விலக்களிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, டெல்லிக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். அதற்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெற்று, உடனடியாக அமல்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தி, வற்புறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

கேள்வி:- தமிழகத்துக்கு காவிரியில் இருந்து 4 டி.எம்.சி. தண்ணீர் உடனே வழங்கவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்திரவிட்டும், தர முடியாது என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளதே?

பதில்:- இப்போது இதை புதிதாக அவர்கள் சொல்லவில்லை. தொடர்ந்து அவர்கள் இதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதையெல்லாம் கருத்தில் கொண்டுதான், உடனே 4 டி.எம்.சி. தண்ணீர் வழங்கவேண்டுமென உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. அதுமட்டுமல்ல, காவிரி மேலாண்மை வாரியம் என்றும் சொல்லியிருக்கிறது. ஆனால் அதை நிறைவேற்ற வேண்டிய மத்திய அரசும், கர்நாடக அரசும் அந்த தீர்ப்பை கண்டும், காணாமல் இருக்கின்றன. இதனை கண்டித்து தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகள், அமைப்புகள், விவசாய சங்கத்தை சேர்ந்தவர்கள் எல்லாம் தொடர்ந்து போராடிக்கொண்டு இருக்கிறோம்.

கேள்வி:- தமிழகத்தில் நிதிப்பற்றாக்குறை இருக்கும் நிலையில் ரூ.50 கோடி செலவில் மறைந்த ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க அடிக்கல் நாட்டியிருப்பது அவசியமா?

பதில்:- உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டவர் மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா. அதுமட்டுமல்ல அவர்தான் ‘அக்கியூஸ்ட்’ நம்பர்-1 என்று தண்டனை பெற்றவர். அப்படிப்பட்டவருக்கு நினைவு மண்டபம் அமைப்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது. ஊழலில் திளைத்துக்கொண்டிருப்பவர்கள், ஊழல் செய்து சிறைக்கு சென்றவருக்கு நினைவு மண்டபம் கட்டுகிறார்கள்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.
Tags:    

Similar News