செய்திகள்

நிர்மலா தேவி வழக்கு- உதவி பேராசிரியர் முருகனை 5 நாள் சி.பி.சி.ஐ.டி. காவலில் வைத்து விசாரிக்க அனுமதி

Published On 2018-04-25 07:15 GMT   |   Update On 2018-04-25 07:15 GMT
மாணவிகளுக்கு பாலியல் வலை விரித்த வழக்கில் கைது செய்யப்பட்ட உதவி பேராசிரியர் முருகனை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. காவல்துறைக்கு கோர்ட் அனுமதி அளித்துள்ளது. #Nirmaladevi #Murugan
சாத்தூர்:

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்கும் விதமாக செல்போனில் பேசியதாக அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக மேலாண்மைத்துறை உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தேடி வந்தனர்.

இதில் உதவி பேராசிரியர் முருகனை நேற்று இரவு சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். அவரை ஒரு நாள் காவலில் வைக்க சாத்தூர் மாஜிஸ்திரேட்டு கீதா உத்தரவிட்டார்.  பின்னர் விருதுநகரில் உள்ள மாவட்ட கிளை சிறையில் அடைக்கப்பட்ட முருகன் இன்று மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சி.பி.சி.ஐ.டி. சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை பரிசீலித்த நீதிபதி, 5 நாட்கள் முருகனை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.

முன்னதாக, இந்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவரை நாளை வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். #Nirmaladeviaudio
Tags:    

Similar News