செய்திகள்

கடல் சீற்றம்: 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்- அமைச்சர் உதயகுமார் எச்சரிக்கை

Published On 2018-04-21 09:13 GMT   |   Update On 2018-04-21 09:13 GMT
தென் தமிழக கடலோர பகுதிகளில் கடல் அலை சீற்றம் இருப்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை:

தென் தமிழக கடலோர பகுதிகளில் கடல் அலை சீற்றம் இருப்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கடல் சீற்றத்தின் காரணமாக தென் தமிழகத்தின் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் குறிப்பாக கன்னியாகுமரி, மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலோரத்தில் உள்ள தாழ்வான பகுதிகளில் இன்று (21-ந் தேதி) காலை 8.30 மணி முதல் நாளை (22-ந் தேதி) இரவு 11.30 மணி வரை ஆகிய 2 நாட்கள் 18 முதல் 22 விநாடிகள் இடைவெளியில் 2.5 - 3.5 மீட்டர் அதாவது 8.25 அடி, 11.50 அடி உயரத்திற்கு கடல் அலைகள் எழுந்து சீற்றத்துடன் காணப்படும் என இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே மீனவர்கள் மற்றும் கடலோர பகுதிகளில் உள்ள மக்கள் கீழக்கண்ட அறிவுரைகளை கட்டாயமாக பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

கடல் சீற்றத்தின் காரணமாக, கடற்கரை பகுதிகள் இதன் தாக்கத்தை பெரிதும் உணரும் எனவே கடற்கரையொட்டிய பகுதிகளில் படகுகள் செல்ல வேண்டாம்.

படகுகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டு சேதம் அடைவதை தவிர்க்கும் பொருட்டு படகுகளை போதிய இடை வெளியில் நங்கூரம் இட்டு நிறுத்தி வைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

மேற்கண்ட நாட்களில் கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் எவரும் பொழுது போக்கு விளையாட்டுகளிலும், வேடிக்கை பார்க்கும் நோக்கிலும் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கைபடுகிறது.

கடற்கரையில் இருந்து கடலுக்குள் படகுகள் செல்ல வேண்டாம் எனவும், கடலில் இருந்து கடற்கரைக்கு படகுகள் வர வேண்டாம் எனவும் அறிவுத்தப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #tamilnews
Tags:    

Similar News