செய்திகள்

அரசு விழாக்களில் திமுக எம்எல்ஏக்களுக்கு அழைப்பு இல்லை- வாக்குவாதத்தால் பரபரப்பு

Published On 2018-04-20 14:26 GMT   |   Update On 2018-04-20 14:26 GMT
வேலூரில் இன்று நடந்த அரசு விழாக்களில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு விடுக்காதது குறித்து கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர்:

வேலூர் நேதாஜி மைதானத்தில் இன்று காமன்வெல்த் போட்டியில் தங்க பதக்கம் வென்ற சதீஷ்குமாருக்கு பாராட்டு விழா நடந்தது. நிகழ்ச்சியின் முடிவில் தி.மு.க. எம்.எல்.ஏ. கார்த்திகேயன் அவரது ஆதரவாளர்களுடன் வந்தார்.

அவர்கள் வேலூர் மாநாகராட்சிக்குட்பட்ட பகுதியில் 3 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உள்ளோம். இந்த விழாவில் எங்களுக்கு ஏன் அழைப்பு விடுக்கவில்லை என அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.

கார்த்திகேயன் எம்.எல்.ஏ.வுடன் வந்தவர்கள் காரசாரமாக வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அரசு விழாவில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க மாட்டார்கள் என நினைத்து அழைப்பு விடுக்காமல் இருந்திருப்பார்கள். இனி வரும் காலங்களில் முறைப்படி அழைப்பு விடுங்கள் என அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். இதையடுத்து கார்த்திகேயன் எம்.எல்.ஏ. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சதீஷ்குமாருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் தாய்பால் வார விழா இன்று நடந்தது. இதில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி, நீலோபர் கபில் பங்கேற்றனர்.

விழாவில் தி.மு.க. எம்.எல்.ஏ. நந்தகுமார் கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:-

இந்த விழாவுக்கு எனக்கு அழைப்பு விடுக்காதது வருத்தமாக உள்ளது வேதனை அளிக்கிறது. எதிர்க்கட்சி என்பதற்காக எங்களை ஒதுக்காதீர்கள் அரசு விழாக்களுக்கு அழைப்பு விடுங்கள். நாங்கள் பங்கேற்கிறோம் என்றார்.

மேலும் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரி வரை காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் விடுத்தார்.

அரசு விழாக்களுக்கு அழைப்பு விடுக்காதது குறித்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வாக்குவாதம் மற்றும் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
Tags:    

Similar News