செய்திகள்

ஆஸ்பத்திரியில் ஜெயலலிதாவை நான் பார்க்கவே இல்லை - ஓ.பன்னீர்செல்வம்

Published On 2018-04-17 04:57 GMT   |   Update On 2018-04-17 04:57 GMT
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது ஜெயலலிதாவை நான் பார்க்கவே இல்லை என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஏற்கனவே சொன்ன கருத்தை மீண்டும் தெளிவுபடுத்தி உள்ளார். #Jayalalithaa #OPS
சென்னை:

ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த போது அவரை யார்- யாரெல்லாம் பார்த்தார்கள் என்பது இன்னும் சர்ச்சையாகவே உள்ளது.

முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன ராவ் விசாரணை ஆணையத்தில் கூறும்போது, ‘அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா உடல்நிலை தேறி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய போது ஓ.பன்னீர்செல்வம் உடன் இருந்தார்’ என்று கூறி உள்ளார்.



ஆனால் ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதவை நான் ஆஸ்பத்திரியில் ஒரு நாள் கூட பார்க்கவில்லை என்று திரும்ப திரும்ப கூறி வருகிறார்.

அந்த கால கட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த பிறகு ஜெயலலிதா சமாதிக்கு சென்று தியானம் செய்தார்.

அப்போது நிருபர்களிடம் அவர் கூறும்போது, ஜெயலலிதாவை நான் ஒருமுறை கூட பார்க்கவில்லை. எனது மனைவி கூட அம்மாவை பார்த்தீர்களா? என்று தினமும் கேட்பார். எனக்கு பொய் சொல்ல மனம் வராது என்பதால் ஜெயலலிதாவை பார்க்கவில்லை என்று தெரிவித்தேன் என்றார்.

இப்போது நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் வாக்குமூலம் அளித்தவர்களிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தி வருகிறார்.

இதில் நேற்று இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா, மகன் விவேக், அரசு டாக்டர்கள் சுதா சேஷையன், சுவாமிநாதன், ஜெயலலிதாவின் செயலாளர் வெங்கட ரமணன், போயஸ்கார்டனில் உள்ள சமையல்காரர் ராஜம்மாள் ஆகியோர் நீதிபதி ஆறுமுகசாமி முன்னிலையில் ஆஜரானார்கள். இவர்களிடமும் சசிகலா வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார்.

இந்த நிலையில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது ஜெயலலிதா பற்றி ஏற்கனவே சொன்ன கருத்தை மீண்டும் தெளிவுபடுத்தி உள்ளார்.

அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாள் முதல் அவர் உயிரோடு இருந்தவரை நான் பார்க்கவே இல்லை என்று கூறி இருக்கிறார்.

எனவே அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதாவை எந்தெந்த அமைச்சர்கள் பார்த்தார்கள்? யார்- யார் பார்க்கவில்லை என்ற சர்ச்சை இன்னும் நீடித்து வருகிறது.#Jayalalithaa #OPS
Tags:    

Similar News