செய்திகள்

7 பஸ்களின் கண்ணாடி உடைப்பு மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு

Published On 2018-04-12 16:19 GMT   |   Update On 2018-04-12 16:19 GMT
பென்னாகரம் ஏரியூர் பகுதியில் நேற்று 7 அரசு பஸ்களின் கண்ணாடி கல் வீசி உடைக்கப்பட்டது. இது தொடர்பாக மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பென்னாகரம்:

காவிரி நதிநீர் பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தர்மபுரி மாவட்டத்தில் பா.ம.க. சார்பில் ரெயில் மற்றும் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றது.

இந்த நிலையில் பென்னாகரத்தில் இருந்து ஈரோடு நோக்கி நேற்று அதிகாலை 5.30 மணியளவில் ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. கரியம்பட்டி அருகே இந்த பஸ் சென்றபோது மர்ம ஆசாமிகள் சிலர் இந்த பஸ்சின் மீது கற்களை வீசினர். இதில் இந்த பஸ்சின் பின்பக்க கண்ணாடி உடைந்தது.

பென்னாகரம் அருகே சிலுவம்பட்டியில் இருந்து பென்னாகரம் நோக்கி வந்த ஒரு அரசு பஸ்சின் முன்பக்க கண்ணாடியையும் மர்ம நபர்கள் கற்களை வீசி உடைத்தனர். இந்த இரு சம்பவங்கள் குறித்த புகாரின்பேரிலும் பென்னாகரம் போலீசார் விசாரணை நடத்தி, மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதேபோல ஏரியூர் பகுதியில் 4 அரசு பஸ்களின் கண்ணாடிகளும், ஏரியூரில் இருந்து பென்னாகரம் சென்ற அரசு பஸ் மீதும் கற்கள் வீசி கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இந்த சம்பவங்கள் குறித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, கண்ணாடிகளை உடைத்த மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர். 
Tags:    

Similar News