செய்திகள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து போராட்டம்- திருநாவுக்கரசர்

Published On 2018-03-24 02:29 GMT   |   Update On 2018-03-24 02:29 GMT
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து மத்திய - மாநில அரசுகளுக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று சு.திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார்.
சென்னை:

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காவிரி பிரச்சினையைப் பொறுத்தவரை அரசியல் ஆதாய உள்நோக்கத்தோடு நரேந்திரமோடி அரசு செயல்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கைகள் மூலமாக 25 ஆண்டு காலமாக நீதிமன்ற தீர்ப்புகளின் மூலம் நிலைநாட்டப்பட்ட தமிழகத்தின் உரிமையை பறிக்கிற வகையில் மத்திய பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது.

உண்மையிலேயே மத்திய அரசுக்கு எதிராக அழுத்தம் கொடுக்க அ.தி.மு.க. விரும்பியிருந்தால் மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிப்பதென முடிவெடுத்திருக்கலாம். ஆனால் பாராளுமன்றத்தில் 50 உறுப்பினர் களை பெற்றிருக்கிற அ.தி.மு.க. அத்தகைய அழுத்தத்தை தர, துணிவற்ற நிலையில் இருக்கிறது. மடியில் கனம் இருப்பதால், தமிழகத்தின் உரிமைகள் பறிபோவதை அ.தி.மு.க.வால் தடுக்க இயலவில்லை.

எனவே, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்தும், இதில் அ.தி.மு.க.வின் மெத்தனப் போக்கை கண்டித்தும் ஏப்ரல் 1-ந்தேதிக்கு பிறகு மத்திய - மாநில அரசுகளுக்கு எதிராக அனைத்து கட்சிகளையும், விவசாய சங்கங்களையும் ஒன்றுதிரட்டி மிகப்பெரிய போராட்டத்தை நடத்துகிற முயற்சியில் தமிழக காங்கிரஸ் செயல்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். #tamilnews
Tags:    

Similar News