செய்திகள்

தீவிர அரசியலுக்கு தயாராகும் ரஜினிகாந்த் - புதிய கட்சி, கொடி பற்றி ஆலோசனை

Published On 2018-03-23 06:26 GMT   |   Update On 2018-03-23 06:26 GMT
தனிக்கட்சி தொடங்குவதற்கான பணிகளையும் ரஜினி தீவிரப்படுத்தி உள்ளார். புதிய கட்சிக்கு என்ன பெயரை வைக்கலாம்? கட்சியின் கொடியை எப்படி வடிவமைக்கலாம்? என்பது பற்றிய ஆலோசனையில் அவர் ஈடுபட்டுள்ளார். #Rajinikanth #RajiniMakkalMandram
தமிழ் திரை உலகில் சூப்பர் ஸ்டாராக திகழும் நடிகர் ரஜினிகாந்த், தனது அரசியல் பிரவேச அறிவிப்பை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிட்டார்.

தனிக்கட்சி தொடங்கி சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம் என்கிற அவரது அறிவிப்பு ரசிகர்களின் நெஞ்சில் பால் வார்ப்பதாகவே இருந்தது. இதன் மூலம் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த ரசிகர்களின் ஏக்கமும் தீர்ந்தது. இதனை தொடர்ந்து புதிய கட்சியை தொடங்குவதற்கான அடித்தளத்தை வலுவாக அமைக்க திட்டமிட்டார்.

இதன்படி ரஜினி மக்கள் மன்றம் என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கை, நிர்வாகிகள் நியமனம் ஆகியவை தீவிரப்படுத்தப்பட்டன. மாநில நிர்வாகிகளான சுதாகர், ராஜூ மகாலிங்கம் ஆகியோர் இதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ரஜினியின் கட்டளையை ஏற்று இருவரும் மன்றங்களை ஒருங்கிணைக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

ரஜினி மக்கள் மன்றத்தில் இளைஞர்களையும், பெண்களையும் அதிக அளவில் சேர்க்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி உறுப்பினர் சேர்க்கையின் போது இளம் வயதினரும், இளம்பெண்களும் போட்டி போட்டுக் கொண்டு உறுப்பினர்களாக தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை பேரை மக்கள் மன்றத்தில் சேர்க்க வேண்டும் என்கிற இலக்கும் மாவட்ட நிர்வாகிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதனை ஏற்று மாநிலம் முழுவதும் ரஜினி மன்ற நிர்வாகிகள் போட்டி போட்டுக் கொண்டு பொது மக்களை அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களாக சேர்த்துள்ளனர். இதுவரையில் 30 மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு விட்டனர்.

இன்னும் சில மாவட்டங்களுக்கு மட்டுமே நிர்வாகிகள் நியமிக்கப்பட வேண்டியுள்ளது. அதனையும் அடுத்த மாதம் ஏப்ரல் 14-ந்தேதி தமிழ்ப்புத்தாண்டுக்குள் முடிக்க ரஜினி திட்டமிட்டுள்ளார்.

அரசியல் பயணத்தை தொடங்கிவிட்ட ரஜினி புதிய கட்சியை எப்போது அறிவிக்கப் போகிறார்? அதன் பெயர் என்னவாக இருக்கும்? என்பது போன்ற எதிர்பார்ப்புகள் அனைத்து தரப்பிலும் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக ரஜினி ரசிகர்கள் அந்த நாளை மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

தமிழ்ப்புத்தாண்டில் ரஜினி புதிய கட்சியை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது தவறான தகவல் என்று கூறிய ரஜினி, புதிய கட்சிக்கான அறிவிப்பு எப்போது வெளியிடப்படும் என்பதை சஸ்பென்சாகவே வைத்துள்ளார்.

அதே நேரத்தில் வருகிற மே மாதம் புதிய கட்சியின் பெயரை ரஜினி அறிவிப்பார் என்கிற தகவல்கள் வெளியாக தொடங்கியுள்ளன. கோவையில் மே 20-ந் தேதி தமிழருவி மணியன் ரஜினி ரசிகர்களை திரட்டி மாநாடு ஒன்றை நடத்த உள்ளார். அந்த கூட்டத்தில் ரஜினி பங்கேற்க வாய்ப்பு இருப்பதாகவும், அதில் புதிய கட்சியின் பெயரை அவர் அறிவிப்பார் என்றும் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.



அரசியல் பிரவேசத்துக்கு பின்னர் இமயமலைக்கு ஆன்மீக பயணமாக சென்ற ரஜினி கடந்த 19-ந்தேதி சென்னை திரும்பினார். ஆன்மீக பயணத்தின் போது அரசியல் கேள்விகளை முற்றிலுமாக தவிர்த்த ரஜினி, சென்னை திரும்பியதும், அரசியல் கேள்விகளுக்கு அதிரடியாக பதில் அளித்தார். ரஜினி மீது பா.ஜனதா கட்சியின் சாயம் தொடர்ந்து பூசப்பட்டு வருகிறது.

இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், எனது பின்னால் பா.ஜனதா கட்சி இல்லை. கடவுளும், மக்களும் மட்டுமே உள்ளனர் என்று விளக்கம் அளித்தார். இதன் மூலம் அரசியலிலும் தனது வழி தனி வழி என்பதை ரஜினி உணர்த்தியுள்ளார்.

ஆன்மீக பயணத்தின் போது இமயமலையில் உள்ள பாபா ஆசிரமத்துக்கு சென்று வழிபட்ட ரஜினி, தனது அரசியல் பயணம் பிரகாசிக்க வேண்டிக் கொண்டார். அங்குள்ள வேறு சில ஆசிரமங்களுக்கு சென்றும் அவர் வழிபட்டார். சாமியார்களிடமும் ஆசி பெற்றார்.

இந்த வேகத்தில் தனிக்கட்சி தொடங்குவதற்கான பணிகளையும் ரஜினி தீவிரப்படுத்தி உள்ளார். புதிய கட்சிக்கு என்ன பெயரை வைக்கலாம்? கட்சியின் கொடியை எப்படி வடிவமைக்கலாம்? என்பது பற்றிய ஆலோசனையில் அவர் ஈடுபட்டுள்ளார்.

இது தொடர்பாக தனது நலம் விரும்பிகளாக இருக்கும் மூத்த அரசியல் வாதிகள் சிலரிடம் ரஜினி ரகசியமாக ஆலோசனையும் நடத்தி உள்ளார். கட்சியின் பெயரை அறிவிக்கும் போது தமிழக மக்களை கவரும் வகையில் கொள்கைகள் திட்டங்களையும் வெளியிட திட்டமிட்டுள்ளார்.

புதுக்கட்சி அறிவிப்பை வெளியிட்ட பின்னர் ரஜினி தீவிர அரசியலில் ஈடுபட தயாராகி வருகிறார். தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்யவும் அவர் முடிவு செய்துள்ளார்.

இந்த சுற்றுப் பயணத்துக்கான திட்டங்களும் வகுக்கப்பட்டு வருகின்றன. மாவட்டம் தோறும் பொது கூட்டங்களில் பேசும் வகையில் ரஜினியின் சுற்றுப்பயண விவரம் வடிவமைக்கப்பட உள்ளது. எனவே அடுத்து வரும் நாட்களில் ரஜினியின் வேகத்தால் தமிழக அரசியல் களத்தில் அனல் பறக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினி தொடங்க உள்ள புதிய கட்சியில் சேர எம்.ஜி.ஆர். காலத்தில் அ.தி.மு.க.வில் கோலோச்சிய முன்னாள் அமைச்சர்கள் பலர் திட்டமிட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பேசிய ரஜினி, தமிழக அரசியல் களத்தில் வெற்றிடத்தை நிரப்ப வந்துள்ளதாக கூறினார்.

எம்.ஜி.ஆர். தந்த நல்லாட்சியை என்னாலும் தர முடியும் என்றும் தெரிவித்தார். இதன் மூலம் எம்.ஜி.ஆர். ரசிகர்களையும், அனுதாபிகளையும் கவர ரஜினி திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறார். தமிழக அரசியலில் வெற்றி வாகை சூடி ரஜினி வெற்றிடத்தை நிரப்புவாரா? என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.  #Rajinikanth #RajiniMakkalMandram 
Tags:    

Similar News