செய்திகள்

கணவர் அடித்தால் மனைவி திருப்பி தாக்க வேண்டும்- கவர்னர் கிரண்பேடி பேச்சு

Published On 2018-03-11 10:26 GMT   |   Update On 2018-03-11 10:26 GMT
வீட்டில் கணவன் மார்கள் பெண்களை அடித்து துன்புறுத்தினால் அடங்கி போகாதீர்கள், கொஞ்சமாவது எதிர்ப்பை காட்ட வேண்டும் என்று கவர்னர் கிரண்பேடி பேசியுள்ளார். #governorkiranbedi #husbandbeat

காரைக்கால்:

காரைக்கால் திருநள்ளாறு தொகுதியில் உள்ள அம்பக ரத்தூர் ஸ்ரீ பத்ர காளியம்மன் கோவில் வளாகத்தில், புதுவை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் உலக மகளிர்தினவிழா நடை பெற்றது. விழாவிற்கு, புதுவை கவர்னர் கிரண்பேடி தலைமை தாங்கினார். பள்ளி படிப்பில் சிறந்த சாதனை படைத்த மாணவிகள் மற்றும் சிறந்த அங்கன்வாடி ஊழியர்களுக்கு பரிசு வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பெண்கள் அரசு வேலையை மட்டும் நம்பியில்லாமல், சுயதொழில் செய்ய முன் வரவேண்டும். சுய தொழில் தான் பெண்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். அதேபோல், அரசு அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரும் மாநில வளர்ச்சிக்காக அயராது பாடுபட வேண்டும். அவரவர் கடமைகளை சிறப்பாக செய்யவேண்டும்.

இந்தியாவில் சிறந்த மாநிலமாக புதுவையை கொண்டுவர அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும். காசு பணம் உள்ளவர்கள் ஏழைகள் என்று கூறி அரசின் உதவிகளை பெறக்கூடாது. உண்மையான ஏழைகளுக்கு தான் அரசின் உதவிகள் சென்று சேரவேண்டும். இதில் அரசுத்துறை அதிகாரிகள் கவனமுடன் செயல்பட வேண்டும்.

சமுதாயத்தில் பெண்கள் யாருக்கும் சளைத்தவர்கள் கிடையாது. நம்மிடம் என்ன உள்ளதோ அதைகொண்டு சமுதாயத்தில் தைரியத்துடன் முன்னேறவேண்டும். சாதாரணமாக வீட்டில் கணவன் மார்கள் பெண்களை அடித்து துன் புறுத்தினால், அடங்கி போகக்கூடாது. கொஞ்சமாவது எதிர்ப்பை காட்ட வேண்டும். திருப்பி தாக்க வேண்டும். அப்போதுதான் எதையும் தைரியத்துடன் பெண்கள் எதிர்கொள்ள முடியும். (பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.)

குழந்தைகளின் கல்வி விசயத்தில் பெண்கள் தனி அக்கறைகாட்ட வேண்டும். பெண்கள் வேலை தேடுபவர்களாக இருக்கக் கூடாது. பலருக்கு வேலை கொடுப்பவர்களாக உயர வேண்டும்.

புதுவை மாநிலத்தில் நிதி பற்றாக்குறை உள்ளது. அண்மையில் புதுவை வந்த பிரதம மந்திரியிடம், நிதி பற்றாக்குறை குறித்து பேசிஉள்ளேன். விரைவில் புதுவைக்கான நிதி வரும். நானும் இனி ஒவ்வொரு நொடியும் புதுவை வளர்ச்சிக்காக பாடுபடுவேன்.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews #governorkiranbedi #husbandbeat

Tags:    

Similar News