செய்திகள்

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி 1,500 கைதிகள் விடுதலை ஆகிறார்கள்

Published On 2018-02-23 10:25 GMT   |   Update On 2018-02-23 10:25 GMT
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி நன்னடத்தை அடிப்படையில் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்ய அரசு முடிவெடுத்துள்ளது.
சென்னை:

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து வரும் நன்னடத்தை கைதிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு கட்சிகளிடம் இருந்து அரசுக்கு கோரிக்கை வந்துள்ளது.

சட்டசபையிலும் இதுபற்றி எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தி பேசி இருந்தனர்.

இதைத் தொடர்ந்து ஒவ்வொரு சிறையிலும் 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள கைதிகளின் விவரங்களை அரசு பட்டியல் எடுத்து வைத்துள்ளது.

60 வயதுக்கு மேல் 5 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்த கைதிகள், ஆயுள் தண்டனை கைதிகள் ஆகியோரது நன்னடத்தை விவரங்களும் இதில் இடம் பெற்றுள்ளன.

அண்ணா பிறந்த நாளில் கைதிகளை விடுவிப்பது போல் இந்த ஆண்டு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி நன்னடத்தை அடிப்படையில் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்ய அரசு முடிவெடுத்துள்ளது.

இதற்கான அறிவிப்பு இன்று மாலை வரும் என தெரிகிறது. இதன் அடிப்படையில் சுமார் 1,500 கைதிகள் 25-ந்தேதி விடுதலையாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதில் முக்கியமான கைதிகள் உள்ள வேலூர் மத்திய சிறையில் 185 ஆண் கைதிகளும், 15 பெண் கைதிகளும் நன்னடத்தை அடிப்படையில் விடுதலையாகும் தகுதியில் உள்ளனர்.

இதில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோர் பெயர்களும் உள்ளது. ஆனால் இவர்கள் விடுதலையாவார்களா? அல்லது வழக்கம் போல் இவர்களை தவிர்த்து மற்றவர்கள் விடுதலை ஆவார்களா? என்பது இனிமேல்தான் தெரிய வரும். #Tamilnews
Tags:    

Similar News