செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டம்: அதிவேகமாக வாகனம் ஓட்டிய 125 பேருக்கு பாஸ்போர்ட் சான்றிதழ் கிடையாது

Published On 2018-01-03 02:56 GMT   |   Update On 2018-01-03 02:56 GMT
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது போதையில் அதிவேகமாக வாகனங்கள் ஓட்டியதாக பிடிபட்ட 125 பேருக்கு பாஸ்போர்ட் தடையில்லா சான்றிதழ் நிறுத்தி வைக்கப்படும் என்று போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் தெரிவித்தார்.
சென்னை:

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது போதையில் அதிவேகமாக வாகனங்கள் ஓட்டியதாக பிடிபட்ட 125 பேருக்கு பாஸ்போர்ட் தடையில்லா சான்றிதழ் கொடுக்காமல் நிறுத்தி வைக்கப்படும் என்று போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் அருண் தெரிவித்தார்.

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, போதையில் வேகமாக வாகனங்களை ஓட்டிச்சென்றால் அவர்களுக்கு பாஸ்போர்ட் தடையில்லா சான்றிதழ் கொடுக்கப்படமாட்டாது என்று ஏற்கனவே போக்குவரத்து போலீசார் அறிவித்து இருந்தனர்.

தற்போது புத்தாண்டு கொண்டாட்டங்கள் முடிந்து விட்டது. இந்த நிலையில், இந்த அறிவிப்பு குறித்து போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் அருணிடம் நேற்று நிருபர்கள் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது குடிபோதையில் அதிவேகமாக வாகனங்களை ஓட்டிச்சென்றதாக 125 பேர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. இவர்களில் 103 பேர் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள், 13 பேர் கார்களை வேகமாக ஓட்டிச்சென்றவர்கள், 4 பேர் ஆட்டோவில் சென்றவர்கள், 5 பேர் இதர வாகனங்களில் சென்றவர்கள் ஆவார்கள்.

வழக்கில் சிக்கிய 125 பேருக்கும், பாஸ்போர்ட் தடையில்லா சான்றிதழை கொடுக்காமல் நிறுத்தி வைக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். #tamilnews
Tags:    

Similar News