செய்திகள்

என்ஜினீயரிங் பட்டதாரிக்கு போலீஸ் வேலை வழங்க வேண்டும்: தேர்வாணையத்துக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2017-12-16 09:26 GMT   |   Update On 2017-12-16 09:26 GMT
என்ஜினீயரிங் பட்டதாரிக்கு போலீஸ் வேலை வழங்க வேண்டும் என தேர்வாணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

சேலம் மாவட்டம் அயோத்தியபட்டினத்தை சேர்ந்த விஜய் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

என்ஜினீயரிங் பட்டப்படிப்பை முடித்துள்ளேன். கடந்த மே மாதம் நடந்த இரண்டாம் நிலை காவலர் பதவிக்கான எழுத்து தேர்வில் 62 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சிப் பெற்றேன். அதை தொடர்ந்து உடல் தகுதி தேர்வு, நேர்காணல் தேர்விலும் வெற்றிப் பெற்றேன்.

இதன்பின்னர் பணி நியமன உத்தரவு வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், நான் தேர்ச்சிப் பெற்றதை ரத்து செய்து, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் உத்தரவிட்டது. அதாவது, கடந்த 2014ம் ஆண்டு என் மீது பதிவு செய்யப்பட்ட கொலை மிரட்டல் வழக்கு விவரங்களை மறைத்ததாக காரணம் கூறி, என் தேர்வு ரத்து செய்யப்பட்டிருந்தது.

ஆனால், பக்கத்து வீட்டுக்கார பெண், சொத்து வாங்குவது தொடர்பான பிரச்சனையில் என் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில், 2014ம் ஆண்டு ஜூன் 1-ந்தேதி பதிவு செய்து, அதே நாளில் தவறான புகார் என்று கூறி வழக்கை இன்ஸ்பெக்டர் முடித்து வைத்து விட்டார். அது தொடர்பான அறிக்கையை சம்பந்தப்பட்ட கோர்ட்டுக்கும் அனுப்பி வைத்து விட்டார். இந்த நிலையில், முடித்து வைக்கப்பட்ட வழக்கை கூறி, போலீஸ் பதவிக்கு தேர்வான என்னுடைய தேர்ச்சியை ரத்து செய்தது சட்ட விரோதம். எனவே, இதுதொடர்பான சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் உத்தரவை ரத்து செய்து, எனக்கு பணி வழங்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி டி.ராஜா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வெங்கட்ரமணி, மனுதாரர் சார்பில் வக்கீல் ரவிக்குமார் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, ‘மனு தாரர் மீது பதிவான வழக்கை, அதே நாளில் தவறான புகார் என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் முடித்து வைத்து விட்டார். அதுதொடர்பான அறிக்கையும் சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு அனுப்பி வைத்து விட்டார். எனவே, தற்போது மனுதாரர் மீது எந்த குற்ற வழக்கும் நிலுவையில் இல்லை. அப்படி இருக்கும் சூழ்நிலையில், அவருக்கு போலீஸ் வேலை வழங்க மறுப்பது சட்ட விரோதம். எனவே, மனுதாரருக்கு உடனடியாக இரண்டாம் நிலை காவலர் பதவி வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளார்.
Tags:    

Similar News