செய்திகள்

மீனவர்கள் போராட்டம் எதிரொலி: மீன் விலை இரண்டு மடங்கு உயர்வு

Published On 2017-12-12 04:43 GMT   |   Update On 2017-12-12 04:43 GMT
மீனவர்களின் போராட்டம் காரணமாக பெரும்பாலானவர்கள் கடலுக்கு செல்லாமல் இருப்பதால் மீன் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. ஒரு வாரமாக நீடித்து வரும் இந்த பிரச்சனையால் மீன் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது.
சென்னை:

ஒக்கி புயல் தாக்கப்பட்டதில் காணாமல் போன மீனவர்கள் இன்னும் கரை சேரவில்லை. அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

காணாமல் போன மீனவர்களை விரைவாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு கடந்த 9-ந்தேதி வரை மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையமும் எச்சரித்து இருந்தது. இதனால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல் கரையில் இருந்து வருகிறார்கள். ஒருசில மீனவர்கள் மட்டும் ஆழ்கடல் பகுதிக்கு செல்லாமல் குறைந்த அளவு தூரத்திற்கு சென்று மீன் பிடிக்கிறார்கள்.

போராட்டம் காரணமாக பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் இருப்பதால் மீன் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. ஒரு வாரமாக நீடித்து வரும் இந்த பிரச்சனையால் மீன் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது.

சென்னையின் மீன்பிடி தளமாக விளங்கும் காசிமேட்டில் மீன் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மீன்வரத்து இல்லாததால் மீனவர்களும், வியாபாரிகளும் குறைந்த அளவில் வந்திருந்தனர்.

மேலும் சபரிமலை சீசன் தற்போது தொடங்கி இருப்பதாலும் மீன் விற்பனை சரிந்துள்ளது. ஆழ்கடலில் இருந்து வழக்கமாக வரக்கூடிய மீன்கள் வராத காரணத்தால் காசிமேட்டிற்கு தரமான மீன்கள் வரவில்லை.


குறிப்பிட்ட வகை மீன்கள் மட்டம்தான் வருவதால் அதனை வாங்க வியாபாரிகளும், பொதுமக்களும் ஆர்வம் காட்டவில்லை. ‘பாரா’, கவலை, கெழுத்தி போன்ற மீன் வகைகள் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கின்றன.

இதனால் சென்னையில் உள்ள மீன் மார்க்கெட்டுகளில் மீன் விற்பனை சரிந்துள்ளது. ஒரு சில தரமான மீன்கள் கிடைக்காததால் இரு மடங்காக விலை உயர்ந்துள்ளது.

இதுகுறித்து மீனவர் சங்க தலைவர் தியாகராஜன் கூறியதாவது:-

மீனவர்கள் போராட்டத்தால் மீன் வரத்து குறைந்தது. கரையோரம் பிடிபடும் ஒரு சில வகை மீன்கள் மட்டுமே விற்பனைக்கு வருகின்றன.

வானிலை மைய எச்சரிக்கை, மீனவர்கள் போராட்டம் காரணமாக பொதுமக்கள் மீன் வாங்க அதிகம் வரவில்லை. இதனால் விலை கூடாமல் நிலையாக உள்ளது.

மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டு இருப்பதால் மீனவர்களுக்கு அரசு உதவி வழங்க வேண்டும். மீன்பிடிக்க செல்லாமல் இருப்பதால் மீன் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.
Tags:    

Similar News