செய்திகள்

கவர்னரிடம் அ.தி.மு.க. அரசு மீது ஊழல் பட்டியல்: அன்புமணி ராமதாஸ் வழங்குகிறார்

Published On 2017-12-08 07:03 GMT   |   Update On 2017-12-08 07:03 GMT
அ.தி.மு.க. அரசு மீதான ஊழல் பட்டியலை கவர்னரிடம் பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் நாளை வழங்குகிறார்.

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் கடந்த 2011ஆம் ஆண்டில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு அமைந்த நாள் முதல் இன்று வரை அரசு நிர்வாகத்தில் ஊழல் மட்டும் தான் நடைபெற்று வருகிறது. மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் அக்கறை காட்டாமல் ஊழலில் மட்டுமே அரசு தீவிரம் காட்டி வருவது கண்டிக்கத்தக்கதாகும்.

தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளில், 1991ஆம் ஆண்டுக்குப் பிறகு அமைக்கப்பட்ட எந்த அரசுக்கும் மக்கள் நலனில் அக்கறை இருப்பதாகத் தோன்றவில்லை.

அரசுத் துறை பணி நியமனங்கள், ஒப்பந்தங்கள் ஆகியவற்றில் ஊழல் செய்த நிலைமாறி, இயற்கை வளங்களைக் கொள்ளையடித்து அதன் மூலம் ஆயிரக்கணக்கான கோடிகளை சேர்க்கும் வழக்கம் உருவானது. 2000ஆவது ஆண்டுகளில் ஆற்று மணல், தாது மணல், கிரானைட் ஆகியவை வரன்முறை இல்லாமல் கொள்ளையடிக்கப்பட்டன.

இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்பட்ட வகையில் மட்டும் மத்திய, மாநில அரசுகளுக்கு பல லட்சம் கோடி இழப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, தேசப்பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

2011ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டின் தொடக்கம் வரை நடைபெற்ற ஊழல்கள் தொடர்பான 18 குற்றச்சாட்டுகள் அடங்கிய புகார் பட்டியலை கடந்த 17.02.2015 அன்று அப்போதைய கவர்னர் ரோசய்யாவிடம் எனது தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி குழு நேரில் வழங்கியது.

ஆனால், பா.ம.க. அளித்த ஊழல் புகார்கள் மீது முந்தைய ஆளுனர் ரோசய்யா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அ.தி.மு.க. அரசு மீதான ஊழல் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பா.ம.க சார்பில் வழக்குத் தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது.

2015ஆம் ஆண்டு கவர்னரிடம் புகார் மனு அளித்த பிறகு கடந்த 30 மாதங்களில் ஏராளமான புதிய ஊழல்கள் நடந்துள்ளன. அவற்றின் மூலம் தமிழக அரசுக்கு பல்லாயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

சிங்கப்பூர், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு இணையான பொருளாதார சக்தியாக வளர்ந்திருக்க வேண்டிய தமிழ்நாடு, இன்று ரூ.5 லட்சம் கோடிக்கும் அதிகமான கடன் சுமையில் தள்ளாடிக்கொண்டு இருப்பதற்குக் காரணம் ஊழல் தான். எனவே, தமிழகத்தில் ஊழல் ஒழிக்கப்படுவதுடன், ஊழல் குற்றத்தை செய்த அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

அதற்காக கடந்த காலங்களில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி குழு நாளை (9-ந்தேதி) சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து முறையிட உள்ளது. அப்போது புதிய ஊழல் குற்றச்சாட்டுகள் அடங்கிய மனு கவர்னரிடம் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News