செய்திகள்

உள்ளாட்சி தேர்தலிலும் தி.மு.க.வுடன் கூட்டணி: திருமாவளவன்

Published On 2017-11-27 07:15 GMT   |   Update On 2017-11-27 07:15 GMT
உள்ளாட்சி தேர்தலிலும் தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க தயார் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
சென்னை:

ஆர்.கே.நகர் சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க.விற்கு ஆதரவு அளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்தார்.

இத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை சந்தித்து நன்றி தெரிவித்தார்.



அதன் பிறகு திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு கோரி தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாகவும் கடிதம் மூலமாகவும் அழைப்பு விடுத்திருந்தார். இதனால் தி.மு.க. வேட்பாளருக்கு நாங்கள் ஆதரவு அளிக்கிறோம்.

மத சார்பற்ற வாக்கு வங்கி சிதறிவிடக் கூடாது என்பதற்காக தி.மு.க.வுக்கு ஆதரவு அளித்துள்ளோம். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மதவாத சக்திக்கு எதிரான போராட்டம் ஆகும். கம்யூனிஸ்டு கட்சியினரும் தி.மு.க. வேட்பாளரை ஆதரிக்க வேண்டும்.

உள்ளாட்சி தேர்தலிலும் தி.மு.க.வுடனான கூட்டணி தொடர வேண்டும் என்று விரும்புகிறோம். பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களிலும் தி.மு.க.வுடன் கூட்டணி நீடிக்கும் என நம்புகிறேன்.



3-வது அணி குறித்து விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆர்.கே.நகரில் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகளை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது. ஆனால் மத்திய மாநில அரசுகளுடன் காவல்துறையும், தேர்தல் ஆணையமும் இணைந்து செயல்படும்போது கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படுமா என்பது கேள்விக்குறிதான். தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரத்திலும் ஈடுபட இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News