செய்திகள்

ஏற்காட்டில் இன்று தண்ணீரில் மூழ்கி 11-ம் வகுப்பு மாணவன் பலி

Published On 2017-11-24 17:03 GMT   |   Update On 2017-11-24 17:03 GMT
கிணற்றில் குளித்த 11-ம் வகுப்பு மாணவன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

ஏற்காடு, நவ.24-

சேலம் மாவட்டம் ஏற்காடு காகம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் மணி கூலித்தொழிலாளி. இவரது மனைவி பார்வதி. இவர்களுக்கு ஹரிக்குமார் என்ற மகன் உள்ளார். ஹரிக்குமார் ஏற்காடு படகு இல்லம் அருகே உள்ள அரசினர் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் இன்று அதே பள்ளியில் படிக்கும் தனது நண்பர் அஜீத்குமாருக்கு திடீரென்று கண்ணில் வலி ஏற்பட்டதாக கூறினார்.

உடனே அஜீத்குமார் தனது நண்பரான ஹரிக்குமாரை அழைத்து கொணடு ஆஸ்பத்திரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றனர். அப்போது அஜீத்குமார் அருகில் உள்ள கிணற்றில் சிறிது நேரம் குளித்து விட்டு செல்லலாம் என்று கூறி இருவரும் அங்கு சென்றனர்.

இதில் அஜீத்குமார் நீச்சல் தெரியும் என்பதால் அவர் கிணற்றில் குளித்து கொண்டிருந்தார். அப்போது நீச்சல் தெரியாத ஹரிக்குமார் கிணற்றின் மேலே நின்று கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து தானும் குளிப்பதாக கூறி கிணற்றில் குதித்தார். அப்போது தண்ணீரில் குதித்த ஹரிக்குமார் வெகுநேரமாகியும் வெளியே வராததால் பதறிப்போன அஜீத்குமார் அவரை தண்ணீருக்குள் தேடிப்பார்த்தார். ஆனால் அவரது உடல் கிடைக்காததால் அவர் ஆழத்திற்கு சென்று பாசியில் மாட்டி மூச்சு திணறி இறந்திருக்கலாம் என்று எண்ணிய அஜீத்குமார் கிணற்றின் மேலே வந்து அக்கம்பக்கத்தினரிடம் நடந்த சம்பவத்தை கூறி உதவிக்கு அழைத்தார். உடனே அவர்கள் அங்கு ஓடிவந்து கிணற்றில் குதித்து மாணவர் ஹரிக்குமாரை தேடினர். அப்போதும் ஹரிக்குமார் கிடைக்கவில்லை.

இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் ஏற்காடு போலீஸ் நிலையத்துக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் உடனே விரைந்து வந்து தண்ணீரில் மூழ்கிய ஹரிக்குமாரை சுமார் ஒரு மணிநேரமாக தேடினர். பின்னர் சிறிது நேரத்தில் ஹரிக்குமாரை பிணமாக மீட்டனர்.

இந்த சம்பவம் குறித்து ஹரிக்குமாரின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து நீரில் மூழ்கி இறந்த தனது மகன் உடலைப்பார்த்து கதறி அழுதனர்.

இந்த சம்பவம் அப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News