செய்திகள்

புதுவை கவர்னர் மாளிகை முன்பு கைக்குழந்தையுடன் போராடிய பெண்ணுக்கு காதலனுடன் திருமணம்

Published On 2017-11-22 12:11 GMT   |   Update On 2017-11-22 12:11 GMT
கவர்னர் மாளிகை முன்பு கைக்குழந்தையுடன் போராடிய பெண்ணுக்கு வீராம்பட்டினம் கோவிலில் காதலனுடன் திருமணம் நடந்தது. 2 ஆண்டு கால போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
புதுச்சேரி:

மலேசியாவை சேர்ந்த தமிழ்ப்பெண் விக்னேஷ்வரி (வயது 32). நர்சிங் படித்துள்ள அவர் சிங்கப்பூரில் நர்சாக பணியாற்றி வந்தார். சிங்கப்பூரில் கப்பல் கம்பெனி ஒன்றில் புதுவை வீராம்பட்டினத்தை சேர்ந்த இளைஞர் அமர்நாத் (33). வேலை பார்த்து வந்தார். அங்கு இருவரும் ஒருவருக்கொருவர் சந்தித்து கொண்டனர். அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. இருவரும் கடந்த 2 வருடமாக காதலித்து வந்தனர்.

இதை பயன்படுத்தி திருமணம் செய்வதாக கூறி அமர்நாத் அந்த பெண்ணுடன் நெருங்கி பழகினார். இதில் அந்த பெண் கர்ப்பமானார். அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அமர்நாத்தை வலியுறுத்தி வந்தார்.

ஆனால், அமர்நாத் திருமணம் செய்ய மறுத்ததுடன் சிங்கப்பூரில் இருந்து புதுவைக்கு வந்து விட்டார். அந்த பெண்ணும் தனியாக புதுவைக்கு 4 முறை வந்து தன்னை திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தினார். ஆனால், அவர் திருமணம் செய்ய மறுத்து விட்டார்.

இதனிடையே அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து சில மாதங்கள் ஆகிய நிலையில் விக்னேஷ்வரி புதுவை வந்தார். அவர் அமர்நாத்தை சந்தித்து திருமணம் செய்து கொள்ளும்படி மீண்டும் வற்புறுத்தினார். ஆனால், அதை அவர் ஏற்கவில்லை.

எனவே, வில்லியனூர் மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் அமர்நாத்திடம் விக்னேஷ்வரியை திருமணம் செய்யும்படி கேட்டு கொண்டனர். அதற்கு சம்மதித்தார். பின்னர் மனம் மாறி விட்டார்.

இதனால் விக்னேஷ்வரி நேற்று கவர்னரிடம் புகார் கொடுப்பதற்காக கைக்குழந்தையுடன் வந்தார். ஆனால், கவர்னர் மாளிகைக்குள் அனுமதிக்கவில்லை. இதனால் கவர்னர் மாளிகை முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினார்.

உடனே போலீசார் அவரை சமரசப்படுத்தி வில்லியனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் அமர்நாத்தை மீண்டும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அவர் திருமணத்துக்கு சம்மதித்தார்.

இதையடுத்து இன்று காலை வீராம்பட்டினத்தில் உள்ள செங்கழுநீரம்மன் கோவிலில் திருமண ஏற்பாடுகள் நடந்தது. அமர்நாத்தின் உறவினர்கள், போலீசார் மற்றும் ஊர் பொதுமக்களும் வந்தனர். அவர்கள் முன்னிலையில் அமர்நாத் விக்னேஷ்வரி கழுத்தில் தாலி கட்டினார்.

பின்னர் மணமக்கள் தங்கள் குழந்தையுடன் கோவிலை வலம் வந்து சாமி தரிசனம் செய்தனர். அங்கு திரண்டிருந்த மக்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து அவர்களுடைய திருமணம் முறைப்படி பதிவு செய்யப்பட்டது. இந்த திருமணத்தின் மூலம் விக்னேஷ்வரியின் 2 ஆண்டு கால போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
Tags:    

Similar News