செய்திகள்

மதுரை மாவட்டத்தில் 1672 விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளனர்: கலெக்டர் தகவல்

Published On 2017-11-22 10:46 GMT   |   Update On 2017-11-22 10:46 GMT
மதுரை மாவட்டத்தில் 1672 விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளனர் என்று கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.

மதுரை:

பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டம் குறித்தும், மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம் மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் நடந்தது.

உறுப்பினர்களான மாவட்ட வருவாய் அலுவலர், வேளாண்மை இணை இயக்குநர், புள்ளியியல் துணை இயக்குநர், தோட்டக் கலை துணை இயக்குநர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாளர் வேளாண் அறிவியல் நிலைய ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

நெல்-2 (சம்பா) பயிருக்கு அறிவிக்கை செய்யப்பட்ட வட்டாரங்களான மதுரை கிழக்கு, திருப்பரங்குன்றம் மற்றும் செல்லம்பட்டி பகுதிகளில் உள்ள விவசாயிகள் நிலத்தை உழுது சாகுபடி செய்வதற்கு தயார் நிலையில் இருந்தும் போதிய மழை இல்லாததாலும், பெரியாறு, வைகை பாசன பரப்பிற்கு அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் போதுமானதாக இல்லாததாலும், கிணறு மற்றும் கண்மாய்களில் தண்ணீர் இல்லாத காரணத்தாலும் விவசாயிகள் விதைப்பு, நடவு செய்ய இயலவில்லை.

இந்த விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட 31 கிராமங்களில் 4499.47 ஏக்கர் பரப்பில் பயிர் காப்பீடு திட்டத்தில் நெல்-2 பயிருக்கு காப்பீடு செய்துள்ளனர். நெல்-2 (சம்பா) பயிருக்கு கடந்த 20-ந் தேதி வரை காப்பீடு செய்துள்ள விவசாயிகளில் 1672 விவசாயிகள் தடுக்கப்பட்ட விதைப்பு/நடவு இனத்தில் பயிர் காப்பீடு செய்துள்ளனர் என்று அறிவிக்கப்படுகிறது.

பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளின் விவரங்கள், ஆவணங்கள் வேளாண் காப்பீடு நிறுவனத்துக்கு அனுப்பப்பட உள்ளது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News