செய்திகள்

கடலோர காவல்படை தாக்குதலில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நஷ்டஈடு - ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2017-11-18 03:42 GMT   |   Update On 2017-11-18 03:42 GMT
மீனவர்கள் மீது கடலோர காவல்படையினர் நடத்திய துப்பாக்கி சூடு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

மீனவர்கள் மீது கடலோர காவல்படையினர் நடத்திய துப்பாக்கி சூடு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில், மீனவர் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த எல்.டி.ஏ.பீட்டர் ராயன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

ராமேசுவரத்தில் இருந்து கடந்த 13-ந் தேதி எந்திர படகில் 6 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் இந்திய கடல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இந்திய கடலோர காவல்படையினர் மீனவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் பிச்சை என்ற மீனவரின் இடது கையில் காயம் ஏற்பட்டது. அந்த படகில் இருந்து ஒரு துப்பாக்கி தோட்டா கண்டெடுக்கப்பட்டு, அது மண்டபம் கடலோர காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும், மீன்பிடி படகுக்குள் வந்த கடலோர காவல்படை வீரர்கள், மீனவர்களை தடி மற்றும் இரும்பு கம்பியால் அடித்து துன்புறுத்தியுள்ளனர். ஜான்சன் என்ற மீனவரின் இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக, மீனவர்கள் அளித்தபுகாரின் பேரில் மண்டபம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு சிறப்பு விசாரணை குழு அமைத்து, இந்த சம்பவம் குறித்து விசாரித்து, அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்க கடலோர காவல்படை இயக்குனர் ஜெனரலுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர், ‘துணை போலீஸ் சூப்பிரண்டு பதவிக்கு குறையாத ஒரு போலீஸ் அதிகாரியை கொண்டு துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் நஷ்டஈடு கோரினால் உரிய நஷ்டஈடு வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News