செய்திகள்

தனிநபர் கழிவறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவிக்கு கலெக்டர் பாராட்டு

Published On 2017-11-15 12:25 GMT   |   Update On 2017-11-15 12:25 GMT
தனிநபர் கழிவறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவியை விருதுநகர் மாவட்ட கலெக்டர் சிவஞானம் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம் சேதுநாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ராமதேவி வத்திராயிருப்பு நாடார் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருப்பதினால் ஏற்படும் நன்மைகள் பற்றி பெற்றோரிடமும், உறவினர்களிடமும் விரிவாக எடுத்துரைக்க வேண்டும் என்ற அடிப்படையில், இவர் பெற்றோரிடம் சுகாதாரத்தின் மகத்துவம் குறித்து எடுத்துரைத்து அவர்களை சம்மதிக்க வைத்து, தனது வீட்டில் தனிநபர் இல்லக்கழிப்பறை கட்ட வைத்துள்ளார்.

மேலும் தனது கிராமத்தில் பலருக்கும் கழிப்பறை கட்ட வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களையும் தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் கழிப்பறை கட்டவும் உதவியுள்ளார். சுகாதாரத்தில் இவரது ஈடுபாடு மென்மேலும் சிறக்க வேண்டும் என்ற அடிப்படையில் கலெக்டர் சிவஞானம், மாணவி ராமதேவியை விருதுநகர் மாவட்ட ஊரக பகுதிகளில் சுகாதாரத்திற்கான முதல் தூதராக நியமித்து, நினைவுப்பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழை வழங்கி கவுரவித்து பாராட்டினார்.

முன்னதாக, குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பும் என்ற தலைப்பில் நடைபெற்ற பேச்சு, கட்டுரை மற்றும் ஒவியப்போட்டிகளில் வெற்றி பெற்ற 29 மாணவர்களுக்கு கலெக்டர் சிவஞானம் நினைவுப்பரிசு வழங்கினார்.
Tags:    

Similar News