செய்திகள்

மீனவர்கள் மீது கடலோர காவல் படையினர் துப்பாக்கி சூடு: ஐகோர்ட்டில் வழக்கு தொடர வக்கீல் முடிவு

Published On 2017-11-14 09:38 GMT   |   Update On 2017-11-14 09:39 GMT
தமிழக மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல் படையினர் நடத்திய துப்பாக்கி சூடு பற்றி விசாரிக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர உள்ளார்.
சென்னை:

சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் வழக்குகளை விசாரிக்க தொடங்கினார்கள்.

அப்போது வக்கீல் மவுரியா என்பவர் ஆஜராகி, ‘ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் சிலர் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர். இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்த அந்த மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இதில் மீனவர்கள் உடலில் குண்டு பாய்ந்து, படுகாயமடைந்துள்ளனர். இதுநாள் வரை இலங்கை கடற்படையினர் தான் நம் மீனவர்களை சுட்டுக் கொன்றனர். இப்போது இந்திய கடலோர காவல் படையும் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி கொலை செய்ய தொடங்கி விட்டது. எனவே, இந்த சம்பவம் குறித்து வழக்கு தொடர உள்ளேன்.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கை தாக்கல் செய்தால், வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக கூறினார்கள்.
Tags:    

Similar News