இந்தியா

தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு அம்பானி- அதானியை வசைபாடுவதை நிறுத்தியது ஏன்? காங்கிரசுக்கு மோடி கேள்வி

Published On 2024-05-08 07:06 GMT   |   Update On 2024-05-08 07:06 GMT
  • மக்களின் ஆசியுடன் பா.ஜனதாவும், தேசிய ஜனநாயக கூட்டணியும் வெற்றியை நோக்கி நகர்கின்றன.
  • பா.ஜனதா எப்போதும் தேசம்தான் முதல் என்ற கொள்கையில் செயல்படுகிறது.

ஐதராபாத்:

பிரதமர் மோடி இன்று தெலுங்கானா மாநிலத்தில் பிரசாரம் செய்தார். அவர் இன்று காலை கரீம்நகர் மாவட்டம் வெமுலவாடாவில் உள்ள ராஜராஜேஸ்வர சாமி கோவிலில் தரிசனம் செய்தார். அப்போது அவரது நெற்றியில் அர்ச்சகர்கள் திலகமிட்டனர்.

பின்னர் பிரதமர் மோடி, கரீம்நகரில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசியதாவது:-

நேற்று 3-ம் கட்ட தேர்தல் நடந்து முடிந்தது. அதன் பிறகு காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணியின் 3-வது முயற்சியும் முடக்கப்பட்டது. இன்னும் நான்கு கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. மக்களின் ஆசியுடன் பா.ஜனதாவும், தேசிய ஜனநாயக கூட்டணியும் வெற்றியை நோக்கி நகர்கின்றன.

பா.ஜனதா எப்போதும் தேசம்தான் முதல் என்ற கொள்கையில் செயல்படுகிறது. ஆனால் காங்கிரசும், பி.ஆர்.எஸ். கட்சியும் குடும்பமே முதலில் என்ற கொள்கையில் செயல்படுகின்றன. அவர்களின் அரசியல் கட்சிகள் 'குடும்பத்தால், குடும்பத்திற்காக, குடும்பத்திற்கானது என்பது போன்று செயல்படுகின்றன. குடும்பமே முதலில் என்ற கொள்கையால் பி.வி.நரசிம்மராவை காங்கிரஸ் அவமரியாதை செய்தது.

அவர் இறந்த பிறகும் அவரது உடலை காங்கிரஸ் அலுவலகத்தில் நுழைய மறுத்துவிட்டது. பி.வி. நரசிம்மராவுக்கு பாரத ரத்னா விருது வழங்கியதன் மூலம் பா.ஜனதா-தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மரியாதை செலுத்தியது.

காங்கிரசும், பி.ஆர்.எஸ். கட்சியும் வேறுபட்டவை அல்ல. ஊழல், திருப்திப்படுத்தும் அரசியல் மற்றும் பூஜ்ஜிய ஆட்சி ஆகியவை இந்த இரு கட்சிகளையும் இணைக்கிறது. இரு கட்சிகள் இடையே ஊழல் பொதுவான காரணியாக உள்ளது.

காங்கிரசின் இளவரசர் (ராகுல்காந்தி) ரபேல் விவகாரத்தில் இருந்து கடந்த 5 ஆண்டுகளாக 5 தொழிலதிபர்கள் பற்றியே பேச ஆரம்பித்தார்.

பின்னர் அவர் அம்பானி, அதானி பற்றி பேசினார். ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு அம்பானி-அதானியை வசைபாடுவதை நிறுத்திவிட்டார். ஒரே இரவில் அம்பானி-அதானியை வசைபாடுவதை நிறுத்திய நீங்கள் என்ன ஒப்பந்தம் செய்தீர்கள்? இதில் காங்கிரஸ் நாட்டுக்கு பதில் சொல்ல வேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Tags:    

Similar News