செய்திகள்

அண்ணா, எம்.ஜி.ஆர் சமாதிகளை மாற்றக் கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ்

Published On 2017-11-13 07:19 GMT   |   Update On 2017-11-13 07:23 GMT
மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சமாதிகளை மாற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கில் 2 வாரத்தில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

மெரினா கடற்கரையில் மறைந்த தலைவர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டு சமாதியும் எழுப்பபட்டுள்ளது.

பொதுமக்கள் அங்கு தினமும் சென்று வருகிறார்கள். வெளியூர்களில் இருந்து சென்னை வருபவர்களில் பெரும்பாலானோர் இந்த சமாதிகளை பார்க்காமல் செல்வதில்லை.

இந்த நிலையில் 3 சமாதிகளையும் அங்கிருந்து இடமாற்றம் செய்யக் கோரி சென்னை ஐகோர்ட்டில் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

மெரினா கடற்கரையில் தமிழக முதல்அமைச்சர்களாக இருந்த அண்ணாதுரை, எம்.ஜி.ராமச்சந்திரன், ஜெயலலிதா ஆகியோரது உடல்களை அடக்கம் செய்துள்ளனர். அங்கு பல கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட கட்டிடங்களுடன் நினைவிடம் அமைத்துள்ளனர்.


தற்போது ஜெயலலிதாவுக்கு ரூ.18 கோடி செலவில் நினைவிடம் கட்டும் பணி நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. இந்த நினைவிட கட்டிடங்கள் எல்லாம் கடலோர ஒழுங்கு முறை மண்டல விதிமுறைகளுக்கு முரணாக அமைக்கப்பட்டுள்ளன.

மெரினா கடற்கரையில் நடந்த சில போராட்டங்களினால், போலீசாரும் அவ்வப்போது இங்கு 144 தடை உத்தரவுகளை பிறப்பித்து அமல்படுத்துகின்றனர். எனவே, இந்த தலைவர்களின் சமாதியை மெரினா கடற்கரையில் இருந்து அப்புறப்படுத்தி, அடையாறு காந்தி மண்டபம் அமைந்துள்ள பகுதிக்கு மாற்ற வேண்டும்’

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் விசாரித்தனர். பின்னர், இந்த மனுவுக்கு தலைமை செயலாளர், உள்துறை செயலாளர் உள்ளிட்டோர் 2 வாரத்தில் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

இந்த வழக்கு விசாரணை மீண்டும் நடைபெறும்போது தமிழக அரசு விளக்கம் அளிக்கும் என்று தெரிகிறது.
Tags:    

Similar News