செய்திகள்

213 வகையான பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி குறைப்பு அவசியமான அறிவிப்பு: ஜி.கே.வாசன்

Published On 2017-11-13 01:12 GMT   |   Update On 2017-11-13 01:12 GMT
213 வகையான பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியை குறைப்பதாக அறிவித்திருப்பது தாமதமான அறிவிப்பாக இருந்தாலும், அவசியமான அறிவிப்பு என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
சென்னை:

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசு தினசரி பயன்பாட்டுக்கு தேவைப்படும் சுமார் 178 வகையான பொருட்கள் உட்பட மொத்தம் 213 வகையான பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியை குறைப்பதாக அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பு தாமதமான அறிவிப்பாக இருந்தாலும், அவசியமான அறிவிப்பு.



அதே நேரத்தில் நாடு முழுவதற்குமான ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் பல்வேறு துறைகளில் குறிப்பாக சாதாரண மக்கள் பயன்படுத்தும் குறிப்பாக தீப்பெட்டி, பட்டாசு போன்ற பல்வேறு வகையான பொருட்களுக்கு இன்னும் வரியை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் மத்திய பா.ஜ.க. அரசு இருக்கிறது.



பொதுவாக ஜி.எஸ்.டி. வரி விதிப்பு குறையும்போது வியாபாரிகள், வணிகர்கள், சிறு குறு தொழில் முனைவோர், பொதுமக்கள் ஆகியோர் பெருமளவு பாதிக்கப்படாமல் இருக்க வாய்ப்புண்டு. எனவே, ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் இனியும் காலதாமதம் செய்யாமல் வரியினை வெகுவாகக் குறைக்க கூடிய நடவடிக்கையை எடுக்க மத்திய பா.ஜ.க. அரசு முன்வர வேண்டும் என்று த.மா.கா. வலியுறுத்துகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News