search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gst tax"

    • ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜி.எஸ்.டி.யா?
    • 1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பா.ஜ.க.வால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?

    சென்னை:

    தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் GST: வரி அல்ல… வழிப்பறி! என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள பதிவில்,

    "தன் பிணத்தின் மீதுதான் ஜி.எஸ்.டி.யை அமல்படுத்த முடியும்" என்று முதலமைச்சராக எதிர்த்த நரேந்திர மோடி, பிரதமரானதும், "ஜி.எஸ்.டி பொருளாதாரச் சுதந்திரம்'' என்று 'ஒரே நாடு ஒரே வரி' கொண்டு வந்தார்.

    பேச நா இரண்டுடையாய் போற்றி!

    ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜி.எஸ்.டி.யா?

    ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜி.எஸ்.டி-யைப் பார்த்து #GabbarSinghTax எனப் புலம்புகின்றனர்!

    அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் GST கட்ட வேண்டுமா?

    1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பா.ஜ.க.வால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?

    ஜி.எஸ்.டி-யில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜி.எஸ்.டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜி.எஸ்.டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்.

    ஏழைகளைச் சுரண்டும் இந்த முறையை மாற்ற #Vote4INDIA!

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    • 2024ம் நிதியாண்டில் சராசரி மாத மொத்த வசூல் ரூ.1.68 லட்சம் கோடியாக இருந்தது.
    • 2023ம் ஆண்டு ஏப்ரலில் இதுவரை இல்லாத அதிகபட்ச ஜிஎஸ்டி வசூல் ரூ.1.87 லட்சம் கோடியாக இருந்தது.

    மார்ச் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 11.5 சதவீதம் அதிகரித்து ரூ.1.78 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    கடந்த நிதியாண்டில் (ஏப்ரல் 2023-மார்ச் 2024) மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ. 20.14 லட்சம் கோடியாக இருந்தது. இது முந்தைய நிதியாண்டில் வசூலித்ததை விட 11.7 சதவீதம் அதிகமாகும்.

    2024ம் நிதியாண்டில் சராசரி மாத மொத்த வசூல் ரூ.1.68 லட்சம் கோடியாக இருந்தது. இது, முந்தைய நிதியாண்டில் ரூ.1.5 லட்சம் கோடியைத் தாண்டியது.

    இதுகுறித்து மத்திய அமைச்சகள் வெளியிட்டுள்ள அறிக்கயைில், "மார்ச் 2024க்கான மொத்த நல்ல மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய், 11.5 சதவீத வளர்ச்சியுடன், 1.78 லட்சம் கோடி ரூபாயில் இரண்டாவது அதிகபட்ச வசூலைக் கண்டுள்ளது. உள்நாட்டு ஜிஎஸ்டி வசூல் குறிப்பிடத்தக்க அதிகரிப்பால் இந்த எழுச்சி ஏற்பட்டது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

    2023ம் ஆண்டு ஏப்ரலில் இதுவரை இல்லாத அதிகபட்ச ஜிஎஸ்டி வசூல் ரூ.1.87 லட்சம் கோடியாக இருந்தது.

    மார்ச் 2024க்கான ஜிஎஸ்டி வருவாய் நிகர ரீஃபண்ட் ரூ.1.65 லட்சம் கோடியாகும். இது, ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலக்கட்டத்தை விட 18.4 சதவீதம் அதிகமாகும்.

    இதில், மார்ச் மாதத்தில் மட்டும் தமிழகத்தில் இருந்து வரி வசூலாக ரூ.11,017 கோடி வசூலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • ஜி.எஸ்.டி வரி விதிப்பினால் பெரும் நிதியைப் பெறும் மத்திய அரசு, மாநிலங்களுக்கு பிரித்து கொடுப்பதில் வஞ்சிக்கிறது.
    • மத்திய அரசு மழை நிவாரண தொகை கொடுக்காவிட்டாலும், மக்களை காக்கும் பணியில் தி.மு.க. திறம்பட செயல்பட்டு நிவாரணம் அளித்துள்ளது.

    நெல்லை:

    'உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல், பாசிசம் வீழட்டும், இந்தியா வெல்லட்டும்' என்ற தலைப்பில் தி.மு.க. சார்பில் நெல்லை பாராளுமன்ற தொகுதிக்கான பொதுக்கூட்டம் பாளை பெல் மைதானத்தில் நேற்று இரவு நடந்தது.

    நிகழ்ச்சிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட செயலாளர் இரா.ஆவுடையப்பன், ஞானதிரவியம் எம்.பி., அப்துல் வகாப் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம். மைதீன்கான் வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது:-

    மத்தியில் ஆளும் பா.ஜனதா எந்தவொரு மசோதாவை கொண்டு வந்தாலும் மாநில உரிமைகளை பறிக்கும் உள்நோக்கத்துடனே கொண்டு வருகிறது. புதிய திட்டங்களின் பெயர்களைக் கூட இந்தி, சமஸ்கிருத மொழிகளில் சாமானிய மக்களுக்கு புரியாத வகையில் வைக்கிறார்கள். வெளிநாடுகளுக்கு சென்றாலும் திருக்குறளைக் கூறி பெருமை செய்வதாக கூறும் பிரதமர் மோடி, தமிழ்தான் பழமையான மொழி என்றும் கூறுகிறார். ஆனால் சமஸ்கிருதம், இந்தி மொழிகளின் வளர்ச்சிக்கு வழங்குகிற நிதியில் பாதிகூட தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு ஒதுக்குவது இல்லை.

    ஜி.எஸ்.டி வரி விதிப்பினால் பெரும் நிதியைப் பெறும் மத்திய அரசு, மாநிலங்களுக்கு பிரித்து கொடுப்பதில் வஞ்சிக்கிறது. ஒரு ரூபாயில் தமிழகத்திற்கு 29 பைசாவை மட்டுமே திரும்ப தரும் மத்திய அரசு, உத்தரப்பிரதேசத்திற்கு ரூ.2.02 வழங்குகிறது. 10 ஆண்டுகளாக பா.ஜனதா ஆட்சி நடந்து வரும் உத்தரப்பிரதேசம் இன்றளவும் முன்னேற வேண்டிய மாநிலமாகவே தொடர்கிறது.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபத்தில் பெருமழை பெய்தது. குளங்கள் உடைந்து வீடுகளுக்குள் நீர் புகுந்து மக்கள் சிரமம் அடைந்தனர். மழை சேதத்தை நேரில் ஆய்வு செய்ய வந்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், ஆய்வுக்கு பின்புகூட எந்தவொரு நிதியையும் ஒதுக்கவில்லை. மத்திய அரசு மழை நிவாரண தொகை கொடுக்காவிட்டாலும், மக்களை காக்கும் பணியில் தி.மு.க. திறம்பட செயல்பட்டு நிவாரணம் அளித்துள்ளது.

    பா.ஜனதா தலைமையிலான அரசு கொண்டு வந்த தேர்தல் நன்கொடை பத்திரங்கள் திட்டத்தால் அந்தக் கட்சியே ரூ.6,564 கோடி நிதி பெற்றுள்ளது. நாட்டில் உள்ள பிற கட்சிகள் அனைத்தும் பெற்றுள்ள நிதியை காட்டிலும் இது மிகவும் அதிகமாகும். தேர்தல் நன்கொடை பத்திரங்கள் திட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளதன் மூலம் பா.ஜனதாவின் நேர்மை மிகவும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. விவசாயிகளின் கோரிக்கையான வேளாண் விளை பொருள்களுக்கு ஆதார விலை கொடுக்கப்படவில்லை.

    மணிப்பூரில் பெரும் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி எந்தவித நலத்திட்டங்களையும் அளிக்கவில்லை. இஸ்லாமியர்களுக்கு எதிரான சி.ஏ.ஏ. சட்டத்தை விரைந்து அமல்படுத்துவதிலேயே பா.ஜனதா தீவிரம் காட்டி வருகிறது. அரசுக்கு எதிராக போராட டெல்லியை நோக்கி வந்த விவசாயிகளை, தீவிரவாதிகளை போல சித்தரித்து டிரோன்களை கொண்டு கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியுள்ளனர்.

    இந்தியாவின் இறையாண்மையை பாதுகாப்பது, மதநல்லிணக்கத்தை பேணுவது, எதிர்கால சந்ததிகளின் வளர்ச்சிக்கான கல்வி குறித்து சிந்திக்காமல், மத அரசியலை மக்களிடம் திணித்து ஆட்சியில் தொடர பா.ஜனதா முயற்சிக்கிறது. ஆனால், அனைத்து தரப்பு மக்களையும் அரவணைக்கும் அரசாக தி.மு.க. திகழ்கிறது.

    இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சி பொறுப்புக்கு வர வேண்டும். பா.ஜனதாவை பல்வேறு மாநில மக்கள் தூக்கி எறிந்துள்ளனர். அதேபோல நாடு முழுவதும் மக்கள் தூக்கி எறியும் காலம் வரும். அந்த நாளே இந்தியாவுக்கான நாளாக அமையும். பா.ஜனதாவின் வெற்றி என்பது நம் நாட்டின் தோல்வியாகிவிடும். ஆகவே, பாசிசம் வீழட்டும், இந்தியா வெல்லட்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் கோடி மட்டுமே வசூலாகி இருந்தது.
    • 2023-24-ம் நிதியாண்டில் மொத்த ஜிஎஸ்டி வசூல் 6-வது முறையாக ரூ.1.60 லட்சம் கோடியை கடந்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1 முதல் ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரி விதிப்பு முறை அமலில் உள்ளது.

    இந்நிலையில், நவம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.68 லட்சம் கோடியை எட்டியுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    நவம்பர் மாத ஜி.எஸ்.டி. வருவாய் தொடா்பான விவரங்களை மத்திய நிதியமைச்சகம் நேற்று வெளியிட்டது.

    கடந்த நவம்பர் மாதத்தில், ரூ.1 லட்சத்து 67 ஆயிரத்து 929 கோடி ஜி.எஸ்.டி. வசூல் ஆகி இருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது.

    கடந்த ஆண்டு இதே நவம்பர் மாதத்தில் ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் கோடி மட்டுமே வசூலாகி இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், இது 15 சதவீதம் அதிகம் ஆகும்.

    கடந்த அக்டோபர் மாதம் வசூலான ரூ.1 லட்சத்து 72 ஆயிரம் கோடியுடன் ஒப்பிடுகையில், நவம்பர் மாத வசூல் குறைவு ஆகும்.

    2023-24-ம் நிதியாண்டில் மொத்த ஜிஎஸ்டி வசூல் 6-வது முறையாக ரூ.1.60 லட்சம் கோடியைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அரிசிக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பதை கைவிட வேண்டும்.
    • நூற்றுக்கணக்கான வணிகர்கள் கலந்து கொண்டார்கள்.

    சென்னை:

    அகில இந்திய வியாபாரிகள் சங்க மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை பொதுச் செயலாளர் எஸ். சௌந்தர்ராஜன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:- அரிசிக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பதை கைவிட வேண்டும். அனைத்து பொருள்களுக்கும் ஜி.எஸ்.டி-யை குறைக்க வேண்டும்.

    புதிய இரும்புக்கும் பழைய இரும்புக்கும் 18 சதவீதம் ஜி.எஸ்.டி என்பது ஏற்புடையது அல்ல. பழைய இரும்புக்கு ஐந்து சதவீதமாக குறைக்க வேண்டும். பெண்கள் சமையலறையில் பயன்படுத்தும் மசாலா பொருட்களுக்கு ஜி.எஸ்.டி -ல் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். மாநாட்டில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் பொருளாளர் நியூ ராயல் எஸ். முஹம்மது, தமிழ்நாடு அழகு நகை வியாபாரிகள் சங்க தலைவர் தேஜானந்த், மாநில செய்தி தொடர்பாளர் ஆல்பர்ட் அந்தோணி, மாநில இணை செயலாளர் ஆரணி கல்யாணராம் மற்றும் நூற்றுக்கணக்கான வணிகர்கள் தமிழ்நாட்டில் இருந்து கலந்து கொண்டார்கள்.

    • ஜி.எஸ்.டி. விதிப்பது தொடா்பாக ஆராய மாநில நிதியமைச்சர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
    • கடந்த ஆண்டு ஜூன் மாதமே இந்த விவகாரம் தொடா்பான அறிக்கையை அக்குழு ஜி.எஸ்.டி. கவுன்சிலிடம் தாக்கல் செய்திருந்தது.

    புதுடெல்லி:

    மத்திய நிதி மந்திரி நிா்மலா சீதாராமன் தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 50-வது கூட்டம் வருகிற 11-ந்தேதி நடைபெறவுள்ளது. அதில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

    சுமாா் ரூ.36 லட்சம் மதிப்பிலான 'டைனடக்சி மேப்' மருந்து மீது தற்போது 12 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டு வருகிறது. புற்று நோய்க்கான அந்த மருந்துக்கு ஜி.எஸ்.டி. விலக்கு அளிப்பது நோயாளிகளுக்குப் பெரும் பலனளிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

    ஜி.எஸ்.டி. மேல்முறையீட்டுத் தீா்ப்பாயத்தை அமைப்பது தொடா்பாகவும் ஜி.எஸ்.டி. கவுன்சில் ஆராயவுள்ளது.

    இணையவழி விளையாட்டுகள், குதிரைப் பந்தயங்கள், கேசினோ விளையாட்டுகள் ஆகியவற்றுக்கு 28 சதவீத சரக்கு-சேவை வரி (ஜி.எஸ்.டி.) விதிப்பதற்கு மாநில நிதியமைச்சா்களைக் கொண்ட குழு மீண்டும் பரிந்துரைத்துள்ளது.

    குழுவில் இடம்பெற்றிருந்த கோவா, 28 சதவீதத்துக்குப் பதிலாக 18 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்க வலியுறுத்தியதால், இந்த விவகாரத்தில் ஒருமித்த கருத்து எட்டப்படாமல் பெரும்பான்மை அடிப்படையில் இந்தப் பரிந்துரை அளிக்கப்பட்டது.

    இணையவழி விளையாட்டுகள், குதிரைப் பந்தயம், கேசினோ விளையாட்டுகள் ஆகியவற்றுக்கு ஜி.எஸ்.டி. விதிப்பது தொடா்பாக ஆராய மாநில நிதியமைச்சர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜூன் மாதமே இந்த விவகாரம் தொடா்பான அறிக்கையை அக்குழு ஜி.எஸ்.டி. கவுன்சிலிடம் தாக்கல் செய்திருந்தது. எனினும், அதில் இடம் பெற்றிருந்த சில விவகாரங்களுக்கு கோவா எதிா்ப்பு தெரிவித்தது. அதன் காரணமாக அந்த அறிக்கையை மறுஆய்வு செய்யுமாறு ஜி.எஸ்.டி. கவுன்சில் தெரிவித்தது.

    அதன் அடிப்படையில் மாநில நிதியமைச்சா்கள் குழு மீண்டும் இந்தப் பரிந்துரையை அளித்துள்ளது. இது தொடா்பான இறுதி முடிவு எடுப்பதற்கான பொறுப்பை ஜி.எஸ்.டி. கவுன்சிலிடமே மாநில நிதியமைச்சா்கள் குழு ஒப்படைத்துள்ளது.

    • மத்திய ஜி.எஸ்.டி., துறைக்கு 21 ஆயிரம் வர்த்தகர்கள், வணிக வரித்துறை வசம் 37 ஆயிரம் வர்த்தகர்கள் உள்ளனர்.
    • 14.86 சதவீதம் கூடுதலாக மத்திய ஜி.எஸ்.டி., வசூலாகியுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2022 - 23ம் நிதியாண்டில் 814 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி., வசூலாகியுள்ளது. இது முந்தைய நிதியாண்டைவிட 10.59 சதவீதம் உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது.

    திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி தொழில் பிரதானமாக உள்ளது. ஆயத்த ஆடை தயாரிப்பு, ஜாப்ஒர்க் நிறுவனங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. திருப்பூர் மாவட்டத்தில் மத்திய ஜி.எஸ்.டி., துறைக்கு 21 ஆயிரம் வர்த்தகர்கள், வணிக வரித்துறை வசம் 37 ஆயிரம் வர்த்தகர்கள் உள்ளனர்.

    கடந்த 2022 - 23ம் நிதியாண்டில் திருப்பூரில், மத்திய ஜி.எஸ்.டி., துறை மூலம் 425 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி., வசூலாகியுள்ளது. முந்தைய 2021 - 22ம் நிதியாண்டில், 370 கோடி ரூபாய் வசூலானது. தற்போது 14.86 சதவீதம் கூடுதலாக மத்திய ஜி.எஸ்.டி., வசூலாகியுள்ளது.

    • நவம்பர் மாதத்தில் ஜி.எஸ்.டி வசூல் 1.45 லட்சம் கோடி என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • தொடர்ந்து 9-வது மாதமாக ரூ.1.40 லட்சம் கோடிக்கு மேல் ஜி.எஸ்.டி. வசூலாகியுள்ளது

    புதுடெல்லி:

    ஜி.எஸ்.டி. வசூல் குறித்த விவரங்களை மத்திய நிதியமைச்சகம் மாதந்தோறும் வெளியிட்டு வருகிறது.

    இந்நிலையில், நவம்பர் மாதம் ரூ.1,45,867 கோடி ஜி.எஸ்.டி. வசூலாகி இருப்பதாக நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதுதொடர்பாக நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், நவம்பர் மாத மொத்த ஜி.எஸ்.டி வருவாய் 1,45,867 கோடி.

    இதில் மத்திய ஜி.எஸ்.டி. ரூ.25,681 கோடி, மாநில ஜி.எஸ்.டி. ரூ. 32,651 கோடி, ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. ரூ.77,103 கோடி (பொருட்கள் இறக்குமதியில் வசூலான ரூ.38,635 கோடி உட்பட) மற்றும் செஸ் ரூ.10,433 கோடி (பொருட்கள் இறக்குமதி மூலம் வசூல் செய்யப்பட்ட ரூ.817 கோடி உட்பட) ஆகும்' என கூறப்பட்டு உள்ளது.

    தொடர்ந்து 9-வது மாதமாக ரூ.1.40 லட்சம் கோடிக்கு மேல் ஜி.எஸ்.டி. வசூலாகியுள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது

    • ஆகஸ்டு மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.43 லட்சம் கோடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    • கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வசூலான தொகையை விட 28 சதவீதம் அதிகமாகும்.

    புதுடெல்லி:

    நடப்பாண்டு மே மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.41 லட்சம் கோடியாகவும். ஜூன் மாதத்தில் ரூ.1.44 லட்சம் கோடியாகவும், ஜூலை மாதத்தில் ரூ.1.49 லட்சம் கோடியாகவும் இருந்தது.

    இந்தநிலையில் ஆகஸ்டு மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.43 லட்சம் கோடியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வசூலான தொகையை விட 28 சதவீதம் அதிகமாகும்.

    • வரி விதிப்பு குறித்து மூன்று கட்டங்களில் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதை ஒன்றிய நிதி அமைச்சரே குறிப்பிட்டு உள்ளார்.
    • உண்மைநிலை இவ்வாறு இருக்க அரசியல் காரணங்களுக்காக பல்வேறு தவறான செய்திகளை சிலர் பரப்பி வருவது கண்டிக்கத்தக்கதாகும்.

    சென்னை:

    தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அரிசி உள்ளிட்ட பேக்கிங், லேபில் செய்யப்பட்ட பல உணவுப் பொருட்கள் மீது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விதிக்கப்பட்டது குறித்து பல்வேறு தவறான செய்திகள் உலவி வருகின்றன. ஆதலால் இந்நிகழ்வு குறித்த உண்மை நிலையை தெரிவிப்பது அவசியமாகும். சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றத்தின் 45-வது கூட்டத்தில் முடிவு செய்தவாறு, பின்வரும் இனங்களை பரிசீலித்து, பரிந்துரைகளை அளித்திட அமைச்சர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.

    1. வரி விகிதங்களை எளிமைப்படுத்தி வரி கட்டமைப்பினை சீரமைத்தல்.

    2. தற்போதைய வரி விகிதங்களை மறுஆய்வு செய்து வரி வருவாயினைப் பெருக்குவதற்கான வழிமுறைகளை ஆராய்தல்.

    இக்குழுவில் கர்நாடகா மாநில முதல்-மந்திரி ஒருங்கிணைப்பாளராகவும், பீகார், கோவா, கேரளா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்காள மாநில அமைச்சர்கள் உறுப்பினர்களாகவும் உள்ளனர்.

    இக்குழுவில் தமிழ்நாடு உறுப்பினராக இடம் பெறவில்லை. இக்குழு தனது பரிந்துரைகளை அளித்த பின்னர், அப்பரிந்துரைகள் மீதான மாநில அரசுகளின் கருத்துகள் கேட்கப்பட்டன.

    அரிசி, தயிர், மோர் மற்றும் வெல்லம் உள்ளிட்ட உணவு பொருட்களின் மீதான வரி சாமானிய மக்களை பாதிக்கும் என்பதால் இவை மீதான வரி விதிப்பு குறித்த முன்மொழிவுகளை ஏற்றுக்கொள்ள இயலாது என தமிழ்நாடு அரசால் 20.06.2022 நாளிட்ட கடித எண் 12680/ஆ1 / 2021-இல் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றத்திற்கு எழுத்துப் பூர்வமாக உறுதியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதிகாரிகள் அளவில் நடைபெற்ற கூட்டங்களிலும் தமிழ்நாடு அரசின் பிரதிநிதியால் இதே கருத்து வலியுறுத்தப்பட்டது.

    2022 ஜூன் 28-ந் தேதி மற்றும் 29-ந் தேதிகளில் சண்டிகரில் நடைபெற்ற சரக்குகள் மற்றும் சேவைகள் மன்றத்தின் 47-வது கூட்டத்தில் மேற்குறிப்பிட்ட அமைச்சர்களின் குழுவால் சமர்ப்பிக்கப்பட்ட 56 பரிந்துரைகள் கொண்ட இடைக்கால அறிக்கை மன்றத்தின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டது.

    இந்த அறிக்கையில் உள்ள பரிந்துரைகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது அனைத்தையும் நிராகரிக்க வேண்டும் என்ற முடிவு சரக்குகள் மற்றும் சேவைகள் மன்றத்திற்கு முன்வைக்கப்பட்டது. விவாதத்திற்கு பின், அமைச்சர்கள் குழுவின் இடைக்கால அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது.

    வரி விதிப்பு குறித்து மூன்று கட்டங்களில் இவ்வாறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதை ஒன்றிய நிதி அமைச்சரே குறிப்பிட்டு உள்ளார்.

    உண்மைநிலை இவ்வாறு இருக்க அரசியல் காரணங்களுக்காக பல்வேறு தவறான செய்திகளை சிலர் பரப்பி வருவது கண்டிக்கத்தக்கதாகும்.

    தமிழ்நாடு தனது எதிர்ப்பைத் தெரிவித்த பின்னரும், மாநில மற்றும் ஒன்றிய அரசுகளின் கருத்தொற்றுமை முடிவின் படி விதிக்கப்பட்டுள்ள வரியால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்த உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • மத்திய அரசு உணவுப் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை தொடர்ந்து விதித்து வருகிறது.
    • இதற்கு பொது மக்களும், வணிகர்களும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    சென்னை:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு -தமிழக அனைத்து தொழில்-வணிக சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு மாநில நிர்வாகிகளோடு கலந்தாலோசித்த கூட்டத்தில் 47-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்ட முடிவில் எடுக்கப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீதான வரி விதிப்புக்கும், இதர மக்களின் அன்றாட பயன்பாட்டு பொருட்களின் மீதான வரி உயர்வுக்கும் எதிர்ப்பு தெரிவித்தது.

    ஆனால் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. இதனால் வரி விதிப்பை கைவிட கோரியும், மாநில வேளாண் விளை பொருட்களுக்கான செஸ்வரி விதிப்பினை மறுபரிசீலனை செய்து திரும்பபெறக்கோரியும், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வருகிற 22-ந்தேதி (வெள்ளி) காலை 10.05 மணிக்கு நடைபெறவுள்ள தமிழகம் தழுவிய வணிகர்களின் கண்டன ஆர்ப்பாட்டம் திட்டமிட்டபடி நடைபெற இருக்கின்றது.

    திட்டமிட்டு சில குழப்பமான செய்திகளை பதிவிட்டு, ஆர்ப்பாட்ட உணர்வினை நீர்த்துபோகச் செய்கின்ற செயலை ஒருசிலர் பரப்ப முற்படுகிறார்கள். பேரமைப்பை பொறுத்தவரை மக்கள் நலனிலும், வணிகர் நலனிலும் ஒருமித்த கருத்தோடு எப்போதும் போல் தனது உணர்வினை வெளிப்படுத்த இக்கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து இருக்கின்றது என்பதை மீண்டும் வலியுறுத்துவதோடு, பேரமைப்பைச் சார்ந்த வணிகர்கள் எந்தவித ஒற்றுமைச் சிதறலுக்கும் இடமளிக்காமல், கட்டுக்கோப்போடு கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று ஆர்ப்பாட்டம் வெற்றி பெறவும், நமது நோக்கத்தினை நிறைவேற்றிடவும் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு பேரமைப்பு மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.

    • ஜி.எஸ்.டி.வரியை திரும்ப பெற வலியுறுத்தி சென்னையில் 22-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • பெட்ரோல், டீசல் விலை உயர்வால் விலைவாசி உயர்ந்து கொண்டே செல்கிறது. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குக்கு அரசு தடைவிதித்துள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட வர்த்தக சங்க ஆண்டு விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசு அரிசி, பால், தயிர் உள்ளிட்ட சில உணவுப் பொருட்களுக்கும் 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதித்துள்ளதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளோம். இந்த வரியை திரும்ப பெற வலியுறுத்தி வருகிற 22-ந் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வணிகர் சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    அதே போல் நேரடியாக விதிக்கப்படும் செஸ் வரியை முதல்வர் திரும்ப பெற வேண்டும். குப்பை வரி, தொழில்வரி என வரிகளை பிரித்து போடாமல், ஒரே வரியாக வசூலித்து லஞ்சம் லாவண்யம் இன்றி லைசென்ஸ் வழங்க வேண்டும்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலைக்கு மேல் சாலை போடுவதால் கடைகள், வணிக நிறுவனங்கள், வீடுகள் தாழ்வாக சென்று விடுகின்றன. இதனால் மழைக் காலங்களில் கட்டிடங்களுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. இந்த நடைமுறையை மாற்ற வேண்டும்.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வால் விலைவாசி உயர்ந்து கொண்டே செல்கிறது. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குக்கு அரசு தடைவிதித்துள்ளது. இதை வரவேற்கிறோம். ஆனால் பல்நோக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் விற்பனை செய்யும் உணவுப்பொருட்கள் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளை பயன்படுத்துகின்றன. அவற்றையும் தடை செய்ய வேண்டும்.

    தமிழக டி.ஜி.பி. அறிவித்துள்ளபடி மாநிலம் முழுவதும் வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும். ஆன்லைன் வர்த்தகம் அதிகரிப்பால் சிறு வணிகர்கள் முதல் பெரிய வணிகர்கள் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டு பெரிய நிறுவனங்கள் குறைந்த விலைக்கு பொருட்களை விற்பனை செய்கின்றன.

    சாமானிய வியாபாரிகள் அப்படி விற்க முடியாது. அதனால் சாமானிய வியாபாரிக்கும், அதானி, அம்பானிக்கும் ஒரே மாதிரியான சட்டம் கொண்டு வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் ராமநாதபுரம் மாவட்ட வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன், மாவட்ட கவுரவத் தலைவர் ஜபருல்லாகான், மாவட்ட துணைத் தலைவர் ராசி போஸ், மாவட்ட பொதுச் செயலாளர்கள் குப்தா கோவிந்தராஜ், ஜீவானந்தம், மாவட்ட பொருளாளர் சாதிக் அலி உள்படட ஏராளமான வர்த்தகர்கள் கலந்து கொண்டனர்.

    ×