செய்திகள்

கார்டூனிஸ்ட் பாலா கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2017-11-06 11:45 GMT   |   Update On 2017-11-06 11:45 GMT
அரசை விமர்சித்து கேலிச்சித்திரம் வரைந்ததற்காக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட கார்டூனிஸ்ட் பாலாவுக்கு ஆதரவாக சென்னையில் பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை:

சென்னையைச் சேர்ந்த ‘கார்ட்டூனிஸ்ட்’ பாலா என்பவர் அரசை விமர்சித்து ஒரு கேலிச்சித்திரம் வரைந்து இருந்தார். அதில் ஒரு குழந்தை உடலில் தீப்பிடித்து எரிந்த நிலையில் தரையில் படுத்து கிடப்பது போலவும், அதனை தமிழக முதல்-அமைச்சர், நெல்லை மாவட்ட கலெக்டர், போலீஸ் கமி‌ஷனர் ஆகியோர் நிர்வாணமாக நின்று வேடிக்கை பார்ப்பது போலவும் கார்ட்டூன் வரைந்து இருந்தார். நெல்லையில் நடந்த கந்துவட்டி மரணத்தை அடுத்து இந்த கார்ட்டூன் வெளியாகி இருந்தது. இது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி அளித்த புகாரின் அடிப்படையில், நெல்லை மாவட்ட சிறப்பு புலனாய்வு குற்றப்பிரிவு போலீசார், பாலா மீது வழக்கு பதிவு செய்து நேற்று மதியம் சென்னையில் கைது செய்தனர்.

இந்த நிலையில் நேற்று மதியம் நெல்லை மாவட்ட சிறப்பு குற்றப்பிரிவு தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா தலைமையில் 4 போலீசார், திடீரென ‘கார்ட்டூனிஸ்ட்’ பாலா வீட்டுக்குள் புகுந்து அவரை கைது செய்தனர்.

இன்று காலை அவர்கள் வாகனம் நெல்லை மாவட்ட போலீஸ்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தது. அங்குள்ள மாவட்ட சிறப்பு குற்றப்புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் வைத்து உயர் அதிகாரிகள் பாலாவிடம் விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பிறகு அவரை இன்று நெல்லை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்-1ல் ஆஜர்படுத்தினர். அப்போது அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி ராமதாஸ் உத்தரவிட்டார்.

இந்நிலையில், பாலா கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை சேப்பாக்கத்தில் பத்திரிக்கையாளர்கள் ஆர்பாட்டம் நடத்தினர். கருத்து சுதந்திரத்தை அரசு நசுக்கக் கூடாது என அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News