செய்திகள்

தமிழகத்தில் மழை படிப்படியாக குறையும் - வானிலை ஆய்வு மையம் தகவல்

Published On 2017-11-05 23:48 GMT   |   Update On 2017-11-05 23:48 GMT
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் இன்று மழை பெய்யும் என்றும், இனி வரும் நாட்களில் மழை படிப் படியாக குறையும் என்றும் சென்னை வானிலை மண்டல ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
சென்னை:

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் இன்று (திங்கட் கிழமை) மழை பெய்யும் என்றும், இனி வரும் நாட்களில் மழை படிப் படியாக குறையும் என்றும் சென்னை வானிலை மண்டல ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. கடந்த சில நாட்களாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. அந்த பகுதிகளில் தண்ணீர் வடிய தொடங்கி இருக்கிறது.



சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று பகலில் மழை பெய்யவில்லை. வெயில் அடித்தது. மாலை 6 மணிக்கு பிறகு மழை பெய்தது. காவிரி டெல்டா மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (திங்கட்கிழமை) அநேக இடங்களில் மழை பெய்யும் என்றும், இனி வரும் நாட்களில் மழை படிப்படியாக குறையும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மைய துணை இயக்குனர் எஸ்.பி.தம்பி நேற்று கூறியதாவது:-

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து உள்ளது.

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, மன்னார்வளைகுடா முதல் வட தமிழகத்தின் கடலோர பகுதி வரை பரவி இருக்கிறது. இதன் காரணமாக திங்கட்கிழமை (இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும். தென் மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். வட மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரத்தில் மழை பெய்யும். என்றாலும் இனி வரும் நாட்களில் தமிழகத்தில் மழை படிப்படியாக குறையும்.

இவ்வாறு எஸ்.பி.தம்பி கூறினார்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் 14 செ.மீ. மழை பெய்து இருக்கிறது.

மற்ற இடங்களில் பெய்த மழை அளவு விவரம் வருமாறு:-

மணிமுத்தாறு, நாகப்பட்டினம் தலா 12 செ.மீ., காரைக் கால் 11 செ.மீ. திருத்துறைப்பூண்டி, நாங்குநேரி, கடலூர் தலா 9 செ.மீ., பரங்கிப்பேட்டை, அம்பாசமுத்திரம், திருவாரூர் தலா 7 செ.மீ., இரணியல், தரங்கம்பாடி, சேரன்மகாதேவி, புதுச்சேரி, மயிலாடு துறை தலா 6 செ.மீ., நன்னிலம், பூண்டி, திருவிடைமருதூர், மன்னார்குடி, குடவாசல், ராதாபுரம், நீடாமங்கலம், பேச்சிப்பாறை, வலங்கைமான், செங்கோட்டை, திருவள்ளூர், மதுக்கூர் தலா 5 செ.மீ. மழை பெய்து உள்ளது. மேலும் 130 இடங்களில் மழை பதிவாகி இருக்கிறது. 
Tags:    

Similar News