செய்திகள்

விழுப்புரத்தில் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய டாஸ்மாக் அதிகாரி கைது

Published On 2017-10-21 07:53 GMT   |   Update On 2017-10-21 07:53 GMT
விழுப்புரத்தில் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய டாஸ்மாக் அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
விழுப்புரம்:

கடலூரை சேர்ந்தவர் முகுந்தன்(வயது 42). இவர் விழுப்புரத்தில் உள்ள டாஸ்மாக் அலுவலகத்தில் மாவட்ட மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த பிரம்மதேசத்தை சேர்ந்த முத்து(45) என்பவர் பிரம்மதேசத்தில் டாஸ்மாக் கடை நடத்துவதற்கு இடம் வாடகைக்கு விட்டிருந்தார். அதன்அருகில் சிறிய பெட்டிக்கடையும் அவர் வைத்திருந்தார்.

கடந்த 4 மாதங்களாக அந்த டாஸ்மாக் கடைக்கு அரசு சார்பில் வாடகை பணம் கொடுக்கப்படவில்லை.

இதனால் மாவட்ட மேலாளர் முகுந்தனிடம் கடை வாடகை பணம் கொடுக்கும்படி முத்து கேட்டார். வாடகை பணம் வேண்டும் என்றால் எனக்கு ரூ.50 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று முகுந்தன் கூறினார்.

இதைகேட்ட முத்து அவரிடம் உங்களுக்கு இன்னும் 2 நாளில் பணம் தருகிறேன் என கூறி விட்டு சென்றார்.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஊழல் தடுப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணகுமாரிடம் முத்து புகார் கூறினார்.

பின்னர் விழுப்புரம் சுதாகர் நகரில் உள்ள முகுந்தனின் வீட்டுக்கு முத்து இன்று சென்றார். முகுந்தனிடம் ரூ.50 ஆயிரத்தை முத்து கொடுத்தார்.

அப்போது அங்கு மறைந்து இருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணகுமார், இன்ஸ்பெக்டர் லட்சுமி மற்றும் போலீசார் கையும், களவுமாக முகுந்தனை கைது செய்தனர்.

பின்னர் முகுந்தனை விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு விழுப்புரத்தில் உயர்அதிகாரி ஒருவரின் காரில் இருந்து கணக்கில் வராத ரூ.5 லட்சத்து 40 ஆயிரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News