தமிழ்நாடு

கொப்பனாபட்டி கொப்பான் கண்மாயில் உற்சாகமாக நடந்த மீன்பிடி திருவிழா

Published On 2024-05-02 05:22 GMT   |   Update On 2024-05-02 05:22 GMT
  • சுற்றுவட்டார பகுதியைச்சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் கண்மாயில் அதிகாலையில் மீன்பிடி உபகரணங்களோடு குவிந்தனர்.
  • பிடித்த மீன்களை மகிழ்ச்சியோடு வீட்டிற்கு எடுத்துச் சென்றனர்.

பொன்னமராவதி:

பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் அறுவடைக்கு பின்னர் கோடைகாலத்தில் நீர் வற்றும் விவசாய கண்மாய்களில் ஜாதி, மதம் பாராமல் அனைத்து மக்களும் கலந்து கொள்ளக்கூடியது மீன்பிடித் திருவிழா கடந்த ஆண்டுகளைப் போன்று நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கவும் ஊர் ஒற்றுமைக்காகவும் நடைபெறும்.

அதன்படி இந்த ஆண்டும் பொன்னமராவதி பகுதிகளில் தினசரி மீன்பிடித் திருவிழா கோலாகலமாக தொடங்கி சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று பொன்னமராவதி அருகே உள்ள கொப்பனாபட்டி கிராமத்தில் கொப்பான் கண்மாயில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் சுற்றுவட்டார பகுதியைச்சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் கண்மாயில் அதிகாலையில் மீன்பிடி உபகரணங்களோடு குவிந்தனர்.

பின்னர் ஊர் முக்கியஸ்தர்களால் நடு மடையில் உள்ள மடை கருப்பரை வழிபாடு செய்த பின்னர் வெள்ளை வீசி போட்டியை தொடங்கி வைத்தனர். ஒரே நேரத்தில் கிராம மக்கள் போட்டி போட்டுக் கொண்டு கண்மாயில் இறங்கி பாரம்பரிய முறைப்படி ஊத்தா, வலை, பரி, கச்சா ஆகியவைகளை கொண்டு மீன்பிடிக்க தொடங்கினர். அதில் ஒவ்வொருத்தர் கைகளுக்கும் நாட்டு வகை மீன்களான ஜிலேபி, கெண்டை, விரால், அயிரை ஆகிய மீன்கள் கிடைத்தன. பிடித்த மீன்களை மகிழ்ச்சியோடு வீட்டிற்கு எடுத்துச் சென்றனர்.

Tags:    

Similar News