செய்திகள்

குட்கா விவகாரம்: திமுக தொடர்ந்த வழக்கு அக்.27க்கு ஒத்திவைப்பு

Published On 2017-10-12 07:57 GMT   |   Update On 2017-10-12 07:57 GMT
குட்கா விவகாரம் தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கின் விசாரணையை 27-ந் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
சென்னை:

தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் தமிழகத்தில் தாராளமாக விற்பனை செய்யப்படுவதாக கூறி, அந்த புகையிலை பொருட்களை சட்டசபைக்கு கொண்டு வந்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் காட்டினர்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த சபாநாயகர் ப.தனபால், தடை செய்யப்பட்ட பொருட்களை அவைக்குள் கொண்டு வந்த எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க உரிமை மீறல் குழுவுக்கு பரிந்துரை செய்தார். இதன்படி, தமிழக எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட 21 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் விளக்கம் அளிக்கும்படி உரிமைக்குழு நோட்டீசு அனுப்பியது.

இந்த நோட்டீசுக்கு விளக்கம் அளிக்க சபாநாயகரிடம், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கால அவகாசம் கேட்டனர். அதேநேரம், உரிமைக்குழு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில், எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட 21 பேரும் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த மனுவில், ‘சட்டசபைக்குள் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை கொண்டு சென்ற பிரச்சினை தொடர்பாக கடந்த 40 நாட்களாக சபாநாயகர் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. தி.மு.க. தமிழகத்தில் பிரதான கட்சி. அதனால், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு தன்னுடைய பெரும்பான்மையை நிரூபிக்க கோரி தமிழக கவர்னரிடம் மனு கொடுத்தோம். இதன்பிறகு தான் குட்கா விவகாரத்தை கையில் எடுத்து, உரிமைக்குழு எங்களுக்கு நோட்டீசு அனுப்பியுள்ளது. எங்கள் மீது நடவடிக்கை எடுத்தால், குறுக்கு வழியில் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்து விடலாம் என்று ஆளும் கட்சி நினைக்கிறது. எனவே, உள்நோக்கத்துடன் எங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீசை ரத்து செய்யவேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த நீதிபதி எஸ்.துரைசாமி, மறு உத்தரவு பிறக்கும் வரை மு.க.ஸ்டாலின் உள்பட 21 எம்.எல்.ஏக்கள் மீது உரிமைக்குழு நடவடிக்கை கூடாது என்று தடை விதித்தார். இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி கே.ரவிசந்தரபாபு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அட்வகேட் ஜெனரல் விஜயநாராயன் ஆஜராகி இந்த வழக்கிற்கு தமிழக அரசு தரப்பில் பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் என்றார். இதற்கு தி.மு.க. சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில்சிபில் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணையை 27-ந் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

Similar News