செய்திகள்

சென்னை தீவுத்திடலில் தீபாவளி பட்டாசு விற்பனை தொடங்கியது

Published On 2017-10-06 03:14 GMT   |   Update On 2017-10-06 03:14 GMT
சென்னை தீவுத்திடலில் தீபாவளி பண்டிகை பட்டாசு விற்பனை நேற்று தொடங்கியது. இந்த ஆண்டு 60 புதுரக பட்டாசுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
சென்னை:

சென்னை தீவுத்திடலில் கடந்த 8 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகள் விற்பனை நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கான பட்டாசு விற்பனை நேற்று தொடங்கியது.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் பட்டாசு விற்பனையை தொடங்கிவைத்தார். முகப்பேர் வசந்தம் பள்ளி சிறப்பு குழந்தைகள் மத்தாப்பு கொளுத்தி மகிழ்ந்தனர். நகைச்சுவை நடிகர் சின்னி ஜெயந்தும் பங்கேற்றார்.

பட்டாசு விற்பனையை தொடங்கி வைத்து, த.வெள்ளையன் கூறும்போது, ஆபத்தில்லா சிவகாசி பட்டாசுகள் மட்டும் தீவுத்திடலில் விற்கப்படுகிறது. ஆபத்தை விளைவிக்கும் சீன பட்டாசுகள் விற்பனை செய்யப்படுவது இல்லை மகிழ்ச்சியான விஷயம்’ என்றார்.

சென்னை பட்டாசு விற்பனையாளர்கள் நலச்சங்கத்தின் துணை செயலாளர் ஆர்.அப்துல் ரகுமான், காப்பாளர் டி.புனிதன் ஆகியோர் கூறியதாவது:-

தீவுத்திடலில் 60 கடைகளில் பட்டாசு விற்பனை நடைபெற உள்ளது. தினமும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை பட்டாசுகள் விற்பனை நடக்கும். தீபாவளி முந்தைய தினம் 17-ந்தேதி நாள் முழுவதும் விற்பனை இருக்கும். 19-ந்தேதி வரை பட்டாசுகள் விற்பனை நடைபெறும்.

கடந்த ஆண்டுகளில் ஜி.எஸ்.டி. நிகராக மறைமுக வரிகள் இருந்தன. எனவே ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டிருந்தாலும், பட்டாசு விலை கடந்த ஆண்டுகளை போலவே இருக்கும். நாளை முதல் பட்டாசு விற்பனை மும்முரமாக நடைபெறும். இந்த ஆண்டு 60 ரக புதிய பட்டாசுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News