செய்திகள்

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் திட்டமிட்டபடி வேலைநிறுத்தம்: போக்குவரத்து தொழிற்சங்கங்கள்

Published On 2017-09-24 03:13 GMT   |   Update On 2017-09-24 03:13 GMT
அமைச்சருடன் நாளை (திங்கட்கிழமை) நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால், திட்டமிட்டபடி வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்து உள்ளன.
சென்னை:

13-வது புதிய ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக அமல்படுத்தக்கோரியும், தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய நிலுவைத்தொகையை வழங்கக்கோரியும் வருகிற 24-ந்தேதி (இன்று) முதல் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர்கள், போக்குவரத்துத்துறை செயலாளர் மற்றும் தொழிலாளர் துறை கமிஷனர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது.

இதனையடுத்து வேலைநிறுத்த அறிவிப்பை திரும்பப்பெற வலியுறுத்தியும், ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை சுமுகமாக பேசி தீர்க்கவும் சென்னை தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் கடந்த 19-ந்தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. இதில் போக்குவரத்து துறை அமைச்சருடன் இறுதியாக பேச்சுவார்த்தை நடத்துவது என்றும், அதுவரை போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இந்தநிலையில் சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் நாளை (திங்கட்கிழமை) போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் தொழிற்சங்க பிரதிநிதிகள் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

இதில் கலந்துகொள்ள போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் 30 தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே சென்னை பல்லவன் சாலையில் உள்ள தொ.மு.ச. பேரவை அலுவலகத்தில் சிறப்பு ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் போராட்டக்குழு கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள 10 சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

பின்னர் தொ.மு.ச. பேரவை பொதுச்செயலாளர் மு.சண்முகம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாளை நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில் வரவுக்கும், செலவுக்கும் இடையிலான வித்தியாசத்தொகை வழங்குவது, தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை திருப்பி வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். முக்கியமாக தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட ரூ.7 ஆயிரம் கோடி எப்போது தரப்படும்? என்பது தெளிவாக தீர்மானம் செய்யப்பட வேண்டும்.

மேலும் நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படாத பட்சத்தில் திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடைபெறும். அரசு தொழிலாளர்களை ஏமாற்ற முயற்சித்தால் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கும், மக்கள் சிரமங்களுக்கும் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். இந்த வேலைநிறுத்தத்தில் தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ், டி.டி.எஸ்.எப்., டி.எம்.டி.எஸ்.பி., பி.டி.எஸ்., எம்.எல்.எப்., ஏ.ஏ.எல்.எல்.எப்., டி.டபிள்யூ.யு. உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த ஒரு லட்சத்து 43 ஆயிரம் போக்குவரத்து தொழிலாளர்கள் பங்கேற்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News