செய்திகள்

திருவண்ணாமலையில் ரூ.7 கோடி மதிப்புள்ள சிலைகள் மீட்பு

Published On 2017-09-22 17:25 GMT   |   Update On 2017-09-22 17:25 GMT
திருவண்ணாமலையில் நேபாளத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 7 கோடி மதிப்புள்ள சிலைகளை போலீசார் மீட்டனர்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலையில் இருந்து சென்னை துறைமுகம் வழியாக வெளிநாடுகளுக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான சிலைகள் கடத்தப்படுவதாக தமிழக காவல்துறை டி.ஜி.பி. ராஜேந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் சிலைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேலிடம் இதுபற்றி விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

அதனைத்தொடர்ந்து ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையில் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ரகுபதி, ரமேஷ், இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் நேற்று காலை திருவண்ணாமலைக்கு வந்தனர்.

பின்னர் அவர்கள் திருவண்ணாமலை போலீஸ் சூப்பிரண்டு பொன்னியுடன் இணைந்து சிலை கடத்தல் கும்பலை பிடிக்க சோதனை நடத்தினர். இதில் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருடன் திருவண்ணாமலை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் அதிரடி படை போலீசாரும் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் மாறுவேடத்தில் திருவண்ணாமலையை சுற்றியும் சோதனை நடத்தினர்.

அப்போது சிலை கடத்தல் கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் இருந்து ஐம்பொன்னாலான நடராஜர், 2 அம்மன் சிலைகள், ஒரு விநாயகர் சிலை மற்றும் தலை, வயிற்று பகுதியை அறுத்த நிலையில் இருந்த அம்மன் சிலைகளையும் மீட்டனர்.

சர்வதேச சந்தையில் இவற்றின் மதிப்பு ரூ.7 கோடி என்று கூறப்படுகிறது.

சிலைகளை கடத்தியதாக திருவண்ணாமலையை சேர்ந்த நித்யானந்தம் (35), ஷ்யாம் சுந்தர் (35), முருகன் (30), குணசேகரன் (45), பால்ராஜ் (49), செந்தில்குமார் (37), திவ்யநாதன் (60) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களின் பின்னணி குறித்தும் மீட்கப்பட்ட சிலைகள் எந்தெந்த கோவில்களில் திருடப்பட்டது என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மீட்கப்பட்ட சிலைகளில் பிள்ளையார் சிலை 14-ம் நூற்றாண்டை சேர்ந்த விஜயநகர பேரரசு காலத்தை சேர்ந்தது.

அறுக்கப்பட்ட அம்மன் 1000 ஆண்டுகளுக்கு முந்தையது என்றும் மற்ற ஐம்பொன் சிலைகள் 400 முதல் 900 ஆண்டுகள் பழமையானது உறுதியானது.

அரிய பச்சை நிற மரகத நடராஜர் சிலை நேபாளத்தில் இருந்து கடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

சிலை கடத்தல் கும்பலிடம் இருந்து 2 கார் மற்றும் 1 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன்மாணிக்கவேல் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் சிலை கடத்தல் தொடர்பாக 363 வழக்குகள் நிலுவையில் உள்ளன. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்.

சிலை கடத்தல் கும்பல் குறித்து பொதுமக்கள் தயங்காமல் புகார் தெரிவிக்கலாம் என்றார்.
Tags:    

Similar News