செய்திகள்

பயிர் காப்பீட்டு தொகை வழங்க கோரி விவசாயிகள் சாலை மறியல்

Published On 2017-09-22 10:50 GMT   |   Update On 2017-09-22 10:50 GMT
தஞ்சை அருகே பயிர் காப்பீட்டு தொகை வழங்க கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்:

தஞ்சை அருகே உள்ள பூண்டி மற்றும் செண்பகபுரம், மேல கொடுக்கப்பட்டு ஆகிய கிராமங்களில் 1,530 விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து இருந்தனர். அவர்களுக்கு 2016-17-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை.

இதனை கண்டித்து கடந்த 20 நாட்களுக்கு முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

அப்போது 15 நாட்களில் பயிர் காப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். ஆனால் வழங்கப்படவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று காலை பூண்டியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்டனர்.

பின்னர் தஞ்சை - நாகை சாலையில் பூண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் தஞ்சை - நாகை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த அம்மாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் மற்றும் போலீசார் விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். சாலையை விட்டு ஓரமாக அமர்ந்து இருக்கும் படி கேட்டு கொண்டனர்.

அதற்கு அதிகாரிகள் வந்து பேச்சு வார்த்தை நடத்தினால் தான் மறியலை கைவிடுவோம் என விவசாயிகள் தெரிவித்தனர். போலீசார் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தியதால் விவசாயிகள் சாலையை விட்டு வெளியேறி கூட்டுறவு கடன் சங்கம் முன் அமர்ந்தனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

மறியல் காரணமாக தஞ்சை - நாகை சாலையில் சுமார் ¼ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News