செய்திகள்

சேதராப்பட்டு அருகே கார் மோதி 3 பேர் படுகாயம்

Published On 2017-09-20 10:13 GMT   |   Update On 2017-09-20 10:13 GMT
சேதராப்பட்டு அருகே கார் மோதி 3 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேதராப்பட்டு:

சேதராப்பட்டில் இருந்து நேற்று இரவு பிளாஸ்டிக் லோடு ஏற்றிக் கொண்டு ஒரு வேன் தொண்டமாநத்தம் வழியாக ஓசூருக்கு சென்று கொண்டு இருந்தது.

அப்போது தொண்ட மாநத்தம் ஏரிக்கரையில் சென்ற போது சாலையோரம் உள்ள புளிய மரத்தில் மோதி வேன் நின்றது.

இதில் வேன் முன் பக்கம் முற்றிலும் சேதம் அடைந்தது. மேலும் வேனில் உள்ள பிளாஸ்டிக் பெட்டிகள் ரோட்டில் விழுந்தது. இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தனர்.

உடனே பொதுமக்கள் வில்லியனூர் போக்கு வரத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில் வேன் திருபுவனையை சேர்ந்த பாலாஜி என்பவருக்கு சொந்தமானது. டிரைவர் பி.எஸ். பாளையத்தை சேர்ந்த அருள் (வயது 52) என்பதும் தெரிய வந்தது.

அருளை அங்கிருந்த பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர். மேலும் அருள், புளிய மரத்தில் மோதியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இது குறித்து வில்லியனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதே போல் இன்று அதிகாலை இன்னொரு விபத்து நடந்தது. திருச்சிற்றம்பலம் கூட்டு ரோடு காந்தி வீதியை சேர்ந்த மளிகை கடை உரிமையாளர் பெரியசாமி (42). இவர் தனது காரில் சேதராப்பட்டில் இருந்து தொண்டமாநத்தம் சென்றார். எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் மோதினார். அதில் வந்த அரும்பார்த்தபுரத்தை சேர்ந்த முருகன் (35), காட்டேரிக்குப்பத்தை சேர்ந்த குணசுந்தரி (36), அன்னக்கிளி (52) ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

இதில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய முருகனுக்கு வலது கால் நசுங்கியது. கார், ஏரியில் பாய்ந்தது.

இது சம்பந்தமாக வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். காயம் அடைந்தவர்கள் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். டிரைவர் பெரியசாமி கைது செய்யப்பட்டார்.

Tags:    

Similar News