search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேதராப்பட்டு"

    • போராட்டக்காரர்கள் மறைத்து வைத்திருந்த முட்டையை எடுத்து கம்பெனிக்குள் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது
    • மறியல் போராட்டத்தால் திருச்சிற்றம்பலம் மயிலம் சேதராப்பட்டு பத்துகண்ணு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சேதராப்பட்டு:

    உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேதராப்பட்டு தொழிற்பேட்டை அனைத்து தொழிலாளர்கள், தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பு சார்பில் இன்று சேதராப்பட்டு தொழிற்பேட்டையில் பந்த் போராட்டம் நடந்தது. பந்த் போராட்டத்திற்கு ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்த நிலையில் அனைத்து கடைகளும் தொழிற்சாலைகளும் சேதராப்பட்டு பகுதிகளில் காலை முதலே மூடப்பட்டிருந்தன.

    இந்நிலையில் சேதராப்பட்டு முத்தமிழ் நகரில் சர்வதேச நிறுவனம் ஒன்று 6:00 மணிக்கு தொழிற்சாலைக்குள் தொழிலாளர்களை அனுமதித்ததை கேள்விப்பட்ட நாம் தமிழர் கட்சியின் தொழிற்சங்க தலைவர் ரமேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிற்சங்க தலைவர் முருகையன் தலைமையில் போராட்டக்காரர்கள் 50க்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்து கம்பெனியின் நுழைவாயில் கேட்டருகே கண்டன கோஷங்களை எழுப்பி முற்றுகை போராட்டம் நடத்தினர்.


    போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது

    போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது

    அப்போது ஏற்கனவே அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீசாருக்கும் அவர்களுக்கும் வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டக்காரர்களை வேனில் ஏற்ற முற்பட்டபோது போராட்டக்காரர்கள் மறைத்து வைத்திருந்த முட்டையை எடுத்து கம்பெனிக்குள் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பின்னர் அனைவரையும் குண்டுகட்டாக போலீசார் வேனில் ஏற்றி கோரிமேடு காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

    பின்னர் சிபிஐஎம்எல் மாநில தலைவர் மோதிலால் தலைமையில் சேதராப்பட்டு முனை சந்திப்பில் சுமார் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக திருச்சிற்றம்பலம் மயிலம் சேதராப்பட்டு பத்துகண்ணு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    அப்போது சேதராப்பட்டு தொழிற்பேட்டையில் இந்த பகுதியை சுற்றியுள்ள இளைஞர்களுக்கு 90 சதவிகித வேலை வாய்ப்பை வழங்க வேண்டும், புதுச்சேரி மின்துறை தனியார்மயம் ஆவதை தடுக்க வேண்டும், இரும்பு தொழிற்சாலைகள் பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும், காலியாக உள்ள தொழிலாளர் துறை ஆணையர் காலி பணியிடத்தை நிரப்ப வேண்டும், தொழிலாளர் துறை உத்தரவை மீறி செயல்படும் தனியார் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், சேதராப்பட்டு பேருந்து நிலையத்தில் தொழிலாளர்களின் நலன் கருதி குடிநீர் மற்றும் கழிவறை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும், சேதராப்பட்டு பிப்டிக் வளாகத்தில் சாலையை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மறியலில் ஈடுபட்டவர்கள் எழுப்பினர்.

    மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சேதராப்பட்டு தொழிற்பேட்டையில் இயங்கும் ஒரு தனியார் நிறுவனத்தின் வேனில் ஏற்றினர். அப்போது ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் அவர்களுக்கு எதிராக நாங்கள் போராடுகிறோம். அந்த கம்பெனியின் வேனில் ஏற மாட்டோம். இல்லை என்றால் இங்கே இருப்போம் என வேனில் ஏற மறுத்ததை அடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் எஸ்.பி பக்தவச்சலம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வேறு ஒரு வாகனத்தில் அவர்களை கைதுசெய்து கோரிமேடு காவல் நிலையம் அழைத்து சென்றனர். போராட்டக்காரர்களின் ஒருபகுதியினர் சேதராப்பட்டு திருமண மண்டபத்திலும் ஒருபகுதியினர் கோரிமேடு காவல் நிலையத்திலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

    ×