செய்திகள்

அனிதா குடும்பத்துக்கு ரூ.25 லட்சம்: தமிழக அரசுக்கு ஆதிதிராவிட நல ஆணையம் பரிந்துரை

Published On 2017-09-16 11:47 GMT   |   Update On 2017-09-16 11:47 GMT
மாணவி அனிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய ஆதிராவிட நல ஆணைய அதிகாரி, அனிதாவின் குடும்பத்துக்கு 25 லட்சம் ரூபாய் வழங்கும்படி தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய உள்ளதாக தெரிவித்தார்.
அரியலூர்:

நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை சென்று சட்டப்போராட்டம் நடத்திய அரியலூர் மாணவி அனிதா, தனக்கு நீதி கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்துகொண்டார். அவரது மரணத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் வலுத்துள்ளது. அதேசமயம், மாணவி மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் அனிதாவின் மரணம் தொடர்பாக தேசிய ஆதிதிராவிட நல ஆணையம் இன்று விசாரணை நடத்தியது. குழுமூர் சென்ற தேசிய ஆதிதிராவிட நல ஆணைய துணைத்தலைவர் முருகன், அனிதாவின் குடும்பத்தினரிடமும், ஊர் மக்களிடமும் விசாரணை நடத்தினார்.

அவருடன் ஆதிராவிட நலத்துறை இயக்குனர் மதியழகன், முதுநிலை விசாரணை அதிகாரிகள் இனியன் விஸ்டர் ஆகியோரும் விசாரித்தனர். மாவட்ட ஆட்சியர் லட்சுமி பிரியா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபினவ் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அதிகாரி முருகன், ‘அனிதா மரணம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பார் தலைமையிலான குழு விசாரணை நடத்தி 15 நாட்களில் அறிக்கை அளிக்கும்’ என்று தெரிவித்தார். மேலும், அனிதாவின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் உதவி வழங்கக் கோரி தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
Tags:    

Similar News