செய்திகள்
ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் மருத்துவ அலுவலர் கென்னடி இன்று தேசிய கொடியேற்றிய காட்சி.

தேசியக் கொடி அவமதிப்பு: மருத்துவ அலுவலர் தினமும் தேசியக் கொடி ஏற்ற கோர்ட்டு உத்தரவு

Published On 2017-09-12 10:57 GMT   |   Update On 2017-09-12 10:57 GMT
தேசியக் கொடியை அவமதித்ததாக தொடரப்பட்ட வழக்கில் மருத்துவ அலுவலர் தினமும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேலூர்:

ஆம்பூர் அரசு மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 15-ந்தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அப்போது, பாலசுப்பிரமணி எம்.எல்.ஏ. தேசியக் கொடி ஏற்றிய போதும், தேசிய கீதம் இசைத்த போதும் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் கென்னடி செல்போனில் பேசிக்கொண்டே இருந்தார்.

இதுகுறித்த செய்தி, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. நாளிதழ்களிலும் செய்தி பிரசுரமானது. மேலும் வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தேசிய கொடியை அவமதித்ததாக டாக்டர் மீது கடும் விமர்சனங்களும் வைரலாக பகிரப்பட்டன.

இதைத்தொடர்ந்து, தேசிய கொடி, தேசியக் கீதத்தை அவமதித்த மருத்துவ அலுவலர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி ஆம்பூர் ஏ.கஸ்பா 4-வது வார்டு முன்னாள் நகரமன்ற கவுன்சிலர் சுரேஷ்பாபு, டவுன் போலீசில் புகார் அளித்தார்.

மருத்துவ அலுவலர் கென்னடி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து, மருத்துவ அலுவலர் கென்னடியிடம், மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர், விசாரணை நடத்தினார். மேலும் இச்சம்பவம் குறித்து, விளக்கம் அளிக்குமாறு கென்னடிக்கு ‘மெமோவும்’ வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருப்பதற்காக கென்னடி, சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். ஜாமீன் வழங்கிய ஐகோர்ட்டு, நூதன முறையில் சில நிபந்தனை வழங்கியது.

அதன்படி, தேசிய கொடியை அவமதித்த ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரி வளாகத்திலேயே மருத்துவ அலுவலர் கென்னடி, ஒரு வாரத்திற்கு, அதாவது 7 நாட்களுக்கு தொடர்ந்து தேசிய கொடியை ஏற்றி இறக்க வேண்டும்.

இதன் மூலம் தேசிய கொடிக்கு எவ்வாறு மரியாதை செலுத்த வேண்டும் என்பதை அவர் உணர வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவு நகல், ஆம்பூர் கோர்ட்டுக்கு நேற்று வந்தது. ஆம்பூர் கோர்ட்டில் மருத்துவ அலுவலர் கென்னடி ஆஜரானார்.

கோர்ட்டு உத்தரவுப்படி, மருத்துவ அலுவலர் கென்னடி தினமும் தேசிய கொடி ஏற்றி, இறக்குவதை கண்காணிக்க போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, முதல் நாளான இன்று காலை ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் தேசிய கொடியை மருத்துவ அலுவலர் கென்னடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

டவுன் போலீசார், மருத்துவ அலுவலரை கண்காணித்தனர். மாலையில் அவர் கொடியை இறக்க வேண்டும். இதேபோல் அடுத்த 6 நாட்களுக்கும் கோர்ட்டு உத்தரவின்படி, மருத்துவ அலுவலர் கொடி ஏற்றி இறக்குகிறார்.

மருத்துவ அலுவலருக்கு வழங்கிய இந்த தீர்ப்பு, தேசிய கொடியை அவமதிப்போருக்கு ஒரு பாடம் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து கூறினர்.
Tags:    

Similar News